சொல்லுகிறார். பூர்வீகத்தில் கல்லில் எழுதப்பட்ட எழுத்துக்களைக் கொண்டும் நாணயங்களிலுள்ள எழுத்துக்களைக் கொண்டும் பாலி பாஷையே பூர்வமானதென்று தெரிகிறது. பாலிபாஷையைப் போல பிராகிருத பாஷைகளும் சமஸ்கிருதத்தைவிட 400-வருஷங்களுக்கு முந்தினது என்றும் பாலிபாஷையை ஆதிமூலபாஷை யென்றும் சமஸ்கிருதம் அதிலிருந்து எடுக்கப்பட்டு முடிவு பெற்றிருக்கிற பாஷையென்றும் சொல்லுகிறார். இதைக்கொண்டு பாலி பாஷையிலிருந்தும் பிராகிருத பாஷையிலிருந்தும் நன்றாயுண்டாக்கப்பட்ட பாஷை சமஸ்கிருதமென்று தெரிகிறது. சமஸ்கிருதம் என்ற பெயருக்கே 'நன்றாய்ச் செய்யப்பட்டது' என்று அர்த்தமாம். பாலி என்பது மூலமென்றும் பிராகிருதியென்பது முதல் என்றும் அர்த்தமாம். இவ்வார்த்தைகளின் அர்த்தங்களைக் கவனிக்கையில், ஆதியாகவும் முதலாகவுமுள்ள பல பாஷைகளிலிருந்து மொழிகள் சேர்க்கப்பட்டு அதற்கிணங்க இலக்கணமுஞ் செய்யப்பட்டு நன்றாய்த் திருத்தப்பட்ட பாஷை சமஸ்கிருதமென்று விளங்குகிறது. ஆரியர்கள் தாங்கள் பிரயாணம் பண்ணிவந்த தேசங்களிலுள்ள பாஷையின் பலமொழிகளையும் ஒன்று சேர்த்து, சமஸ்கிருதமென்ற புதுப்பாஷை ஒன்று செய்தார்களென்று தெளிவாகத் தெரிகிறது. அப்படியே கிரேக்கு, லத்தீன், எபிரேயு, சீத்தியம், பாலி, பிராகிருதம், தமிழ் முதலிய பாஷைகள் இதில் கலந்திருக்கிறதைத் தற்கால அனுபோகத்தால் காண்கிறோம். மேலும் இடுகுறிப்பெயர்களே ஆதிவார்த்தைகளாயிருக்க வேண்டுமென்றும் அதன் பின்பே காரணப் பெயர்கள் வழங்கக்கூடியதென்றும் அறிவாளிகள் யாவரும் ஒப்புக் கொள்வார்கள். சங்கீத சாஸ்திரத்திலும் பூர்வ தமிழ் நூல்கள் வழங்கிவந்த இயற்கையான மொழிகள் நிற்க, ஒவ்வொன்றிற்கும் காரணப்பெயர்கள் அமைத்து வழங்கி வருவதைக் கவனித்தால், சமஸ்கிருதத்திலுள்ள சங்கீத சாஸ்திரங்கள் யாவும் பிற்காலத்திலுண்டானவையென்றே நினைக்க ஏதுவிருக்கிறது. 8. எபிரேய சீத்திய ஐரோப்பிய சமஸ்கிருதபாஷைகளில் தமிழ் மொழிகள் காணப்படுகின்றன என்பதற்குச் சில திருஷ்டாந்தம். பாஷைகளில் சிறந்ததாகச் சொல்லப்படும் சமஸ்கிருத பாஷையும் சில வார்த்தைகளைத் தமிழ்ப்பாஷையிலிருந்து எடுத்திருப்பதாகப் பின்வரும் வாக்கியங்களில் காணலாம். Preface to Winslow's Dictionary. "While nearly all the vernaculars of India have been greatly enriched from the Sanscrit, that wonderful language has condesceded to borrow even from the Dravidian group, of which the Tamil is the oldest, and the principal. Dr. Caldwell in his learned Dravidian Comparative Grammar, instances 31 words in Sanscrit taken from Dravidian tongues, and 25 borrowed by both from some common source. He is of opinion that the Sancrit derived its cerebral consonants from the Dravidian." "இந்தியாவிலுள்ள மற்றெல்லாப் பாஷைகளும் கடன் வாங்கிக் கொள்ளும்படியாக அவ்வளவு சிறந்ததாய் சமஸ்கிருதமிருந்தாலும், அதுவும் திராவிட பாஷையிலிருந்து கடன் வாங்கியிருக்கிறது. திராவிட பாஷைகளில் அதிகப் பூர்வீகமானதும் முக்கியமானதும் தமிழ்தான். டாக்டர் கால்டுவெல் தம்முடைய சிறந்த திராவிட பாஷை இலக்கணத்தில், திராவிட பாஷையிலிருந்து சமஸ்கிருதத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறதற்கு உதாரணமாக 31 வார்த்தைகளும், சமஸ்கிருதமும் திராவிடமும் வேறொரு பொதுப் பாஷையிலிருந்து கடன் வாங்கியிருப்பதற்கு உதாரணமாக 25 வார்த்தைகளும் காட்டியிருக்கிறார். சமஸ்கிருத பாஷையானது நெஞ்சிலிருந்து வரக்கூடிய சில மெய்யெழுத்துக்களை (ட ண ள ர) திராவிட பாஷையிலிருந்து சேர்த்துக் கொண்டதாக அபிப்பிராயப்படுகிறார்."
|