பக்கம் எண் :

61
தமிழ் மொழிகள் பலவாறாகத் திரிந்து மற்ற பாஷைகளில் வழங்கி வருவதைக் காட்டும் சில உதாரணங்கள்.

இப்படியே தமிழ்ப் பதங்கள் பல மாறுதல்களையடைந்து உலகத்திலுள்ள முக்கியமான பாஷைகளோடு கலந்திருப்பதை நாம் யாவரும் திட்டமாகக் காண்கிறோம். வார்த்தைகளின் இனிமையையும் எழுத்துக்களின் சுருக்கத்தையும் உச்சரிப்பின் சுலபத்தையும் கவனிக்கையில், தமிழ் மொழிகளே ஆதியில் உண்டாகியிருக்க வேண்டுமென்று தெளிவாகக் காட்டுகிறது. இன்னும் நாம் கவனிப்போமானால் அட்டவணையில் கொடுத்த வார்த்தைகளைப் பார்க்கிலும் ஏராளமான வார்த்தைகள் ஒவ்வொரு பாஷையிலும் வழங்கி வருவதாகக் காண்போம். தமிழ்மொழிகள் வெவ்வேறு வித மாறுதல்களையடைந்து மற்ற பாஷையில் வழங்குவதும் அதற்கு இலக்கணங்கள் சொல்லப்பட்டதும் போல தமிழ் மொழிகளோடு மற்ற பாஷைகள் கலவாமல் தனித்தனியாய் நிற்பதே தமிழ் கலப்புறாத தனிப் பாஷையென்று காட்டுகிறது.

சமஸ்கிருதத்திற்கும் அதன் கிளைப் பாஷைகளுக்கும் இந்து ஐரோப்பிய பாஷைகளுக்கும் பொதுவான ஊற்று வரைக்கும் நாம் போய் சீத்திய பாஷையில் சேர்ந்திருக்கும் தமிழ் மொழிகளையும் எபிரேய பாஷையில் கலந்திருக்கும் தமிழ் மொழிகளையும் சமஸ்கிருத பாஷையில் கலந்திருக்கும் தமிழ் மொழிகளையும் இந்து ஐரோப்பிய பாஷைகளில் கலந்திருக்கும் தமிழ் மொழிகளையும் கவனிக்கையில், தமிழ்ப் பாஷை தாய்ப் பாஷையாயிருக்கலாமென்று தோன்றுகிறது. முதல் சங்கமிருந்த காலத்தையும் அதில் சங்கீதமிருந்த உயர்ந்த நிலையையும் பூர்வ தமிழ் நூல்களின் மூலமாய் நாம் அறிகையில் இது சரியாயிருக்கலாமென்று நிச்சயமாய்த் தோன்றுகிறது. இவ்வளவு பூர்வமும் மேன்மையும் பொருந்திய தமிழ்ப் பாஷையை ஆதரித்து விருத்தி செய்ய வேண்டுமென்று கால்டுவெல் அத்தியக்ஷரவர்கள் சொல்லும் வசனங்களாவன :-

Dravidian Comparative Grammar by Bishop Caldwell, P. 31.

"The Tamil, however, the most highly cultivated ab-intra of all Dravidian idioms, can dispense with its Sanskrit altogether, if need be, and not only stand alone but flourish without its aid."

“என்றாலும் திராவிடபாஷைகள் அனைத்திலும் தமிழ் தன்னிலேயே விருத்தியடைந்து சீர்படுத்தப்பட்டதாயி ருப்பதினால், அவசியமானால் தன்னோடு கலந்திருக்கிற சமஸ்கிருதத்தை முற்றிலும் களைத்துப் போட்டு, தனியே நிற்கமாத்திரமல்ல, சமஸ்கிருதத்தின் உதவி யெவ்வளவுமின்றி தழைத்து செழித்துப் பிரகாசித்திருக்கவும் கூடும்.”

தமிழ்மொழி முதற் சங்கத்தாராலும் இரண்டாஞ் சங்கத்தாராலும் யாதொரு கலப்புமின்றி பேணப்பட்டு வந்ததுபோல மூன்றாம் சங்கத்தார் காலத்தில் பல கலப்புடன் பேணப்பட்டு வந்தது. தமிழின் அருமை தெரிந்த பல பௌத்த வித்வசிரோமணிகளும் தமிழ் ஆரிய வித்வசிரோமணிகளும் இலக்கண இலக்கியங்கள் எழுதவும் வேறு சிலர் பூர்வ நூல்களுக்கு உரை யெழுதவும் ஆரம்பித்தார்கள். இதினால் பல சமஸ்கிருத வார்த்தைகள் தமிழில் கலக்கவும் சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் உண்டானதாக எண்ண சில கருத்துகள் கலக்கவும் ஏதுவாயிற்று. இருந்தாலும் முந்திய இரண்டு சங்கங்களின் இறுதியில் அழிந்துபோன தமிழ் நூல்களுக்குப் பதில் சில நூல்கள் எழுதியும் உரையெழுதியும் வைத்தார்களேயென்று சந்தோஷப்பட வேண்டிய தாயிருக்கிறது. தென்னாட்டின் கலைகளில் மிகச் சிறந்த இசைத் தமிழாகிய சங்கீதத்தை புதை பொருளாகத் தற்காலம் எண்ணுவதுபோலவே அக்காலத்திலுள்ளவரும் எண்ணி தங்கள் சுய பாஷையிலேயே பலபேர்கள் கொடுத்து எழுதி வைத்தார்களென்று தோன்றுகிறது. தமிழ்ப் பாஷையை நன்றாய் ஆராய்ந்து அதில் மிகுந்த தேர்ச்சியடைந்த கால்டுவேல் அத்தியக்ஷர் அவர்கள் தமிழ்ப் பாஷையில் வைத்திருக்கும் அபிமானத்தைப் போல் தமிழ் மக்கள் அபிமானம் வைத்து ஊக்கங்காட்டினால், தமிழ்ப் பாஷை பூர்வ உயர் நிலையை அடையுமென்று நம்புகிறேன்.