நாதமே முக்கலை நாதமூ வெழுத்து நாதமே முக்குணம் நாதமே முப்பொருள் நாதம் மூவுல காகி விரிந்து நாதமாம் பரத்தில் லயித்தது பாரே. நாதம் பரத்தில் லயித்திடு மதனால் நாத மறிந்திடப் பரமு மறியலாம். - என்னும் அகவல்களாலும், ‘ஆதியிலே வார்த்தையிருந்தது; அவ்வார்த்தை தேவனிடத்திலிருந்தது; அந்த வார்த்தைதேவனாயிருந்தது;அவர்ஆதியிலேதேவனோடிருந்தார்; சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று;உண்டானதொன்றும்அவராலே யல்லாமல் உண்டாகவில்லை; அவருக்குள் ஜீவன் இருந்தது; அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது’. (யோவான் 1 : 1-4) என்னும் சத்திய வேதத்தின் வசனங்களாலும், நாதபிரம்மமே ஆதியென்றும், நாதபிரம்மத்தினாலே அண்டபுவன சராசரங்கள் யாவும் உண்டாயின வென்றும், அதனால் அல்லாமல் மற்றொன்றால் உண்டாக்கப்படவில்லை யென்றும், அதுவே ஜீவதோற்றங்கள் யாவற்றிற்கும் உயிராய் விளங்குகிற தென்றும் காண்கிறோம். ஜீவர்கள் கீழ் ஆறு மேல் ஆறான பன்னிரண்டு ஸ்தானங்களைப் படிப்படியாய்ப் பெற்று விளங்கி நிற்பதுபோலவே, ஜீவர்களின் ஓசையும், சுத்தமத்திமம் வரை ஆறுஸ்தானங்களும், அதன் மேல் ஆறு ஸ்தானங்களுமாகப் பன்னிரண்டு விதமாகப் பிரிந்து ஏழுசுரங்களாய் விளங்கி நிற்கின்றது. ஆரோகணத்தில் சுத்த மத்திமத்தின் கீழுள்ள சுரசம்பந்தத்தினாலுண்டாகும் பலபேதங்களில் ஒன்றும், பிரதிமத்திமத்தின் மேலுள்ள சுரபேதங்களில் ஒன்றும் சேர்ந்து, ஏராளமான இராகபேதங்கள் உண்டாவதும், அவரோகண பேதங்கள்சேர்ந்து எண்ணிறந்த இராகங்கள் உண்டாவதும் போல, ஜீவர்களும் பல படிகளில் பல பேதமும், அவைகளுக்கேற்ற அறிவும், செயலும் உருவமும் பெற்று, விளங்கி நிற்பதை நாம் அறிவோம். வானமண்டலத்தில், பன்னிரண்டு இராசிகளில் ஏழு கிரகங்களின் சஞ்சார பேதத்தினால் எண்ணிறந்த இடபேதம் அமைந்து பல இராசிச் சக்கரங்கள் ஆவது போல், ஜீவர்கள் பன்னிரண்டு ஆதாரங்களில் வெவ்வேறு செயலையும் குணத்தையும் உருவத்தையும் பெற்று, வெவ்வேறு தோற்றங்களாக விளங்குகின்றனர். ஒன்றாயிருந்த ஆதார சட்சத்திற்கும் அதன்மேல் இரண்டாயிருந்த தார சட்சத்திற்கும் நடுவிலுள்ள இடைவெளியானது, பன்னிரண்டு சுரங்களாக வகுக்கப்பட்டு, அவற்றுள் ஏழு சுரங்களின் வெவ்வேறுவித சஞ்சார பேதத்தினால், அளவிறந்த மூர்ச்சனா பேதமுள்ள இராகங்கள் உண்டாயின. பன்னிரண்டு ஆதாரம் பெற்ற ஜீவனுடைய தத்துவங்களின்விவரம் சொல்லவந்த இடத்தில், இருபத்துநான்காகவும் நாற்பத்தெட்டாகவும் தொண்ணூற்றாறாகவும் பிரித்துச் சொன்னதுபோலவே, சங்கீத சாஸ்திரத்தில் வழங்கிவரும் பன்னிரண்டு சுரங்களையும், இருபத்துநான்கு சுருதிகளாகவும் நாற்பத்தெட்டு தொண்ணூற்றாறு போன்ற நுட்ப சுருதிகளாகவும் பிரித்துக் கானம் செய்திருக்கிறார்கள். அவைகளே நாளது வரையும் நம் அனுபவத்திலிருக்கின்றன. அனுபவத்திலிருந்தும் அவைகளை இன்னவையென்று அறிந்துகொள்ளாமையினால் பலர் பலவிதமாய்ச் சொல்லவும் எழுதவும் நேரிட்டது.
|