பக்கம் எண் :

3

ஒரு பட்டுப் பூச்சி தன் நூலினாலேயே தனக்கு ஒரு அழகிய கூடுண்டாக்கி, அதில் சிறிது காலம் சமாதியிருந்து, புழுவாய்ச் சஞ்சரிக்கும் தன் பூர்வ நிலை நீங்கி, ஆகாயத்தில் பறந்து திரியும் அழகுள்ள பூச்சியாக மாறுவதுபோல, நாத பிரம்மத்தினாலேயே உண்டாகிய ஜீவர்கள், தங்கள் இனிய கானத்தினால் பக்தி செய்து, ஏனோக்கு எலியாவைப்போலவும், கம்பலர் அசுவதரரைப் போலவும் மேம்பதம் அடைவார்கள் என்பது நிச்சயம்.

மற்றவர்களால் பேய் இருக்கிறதென்று பயமுறுத்தப்பட்ட மரத்தின் சமீபத்தில் மழைக்கால் இருட்டில் பிரயாணம் செய்யும் ஒருவன், தன் சக்திக்கேற்ற அளவு பலத்த சத்தத்துடன், தனக்குத் தெரிந்த ஒரு பாடலைப் பாடிக்கொண்டு பயங்கரமான அவ்விடத்தைக் கடந்து செல்லுகிறான். அவன் வாயிலிருந்துண்டான இனிய கீதம், அவன் காதின் வழியாக மூச்சோடு கலந்து உட்சென்று, பயத்தினால் உண்டாகும் இரத்தாசயத்தின் துடிப்பை மாற்றி, அவனுக்குண்டாகிய பயத்தையும் நீங்குகிறது. அதுவன்றி பயத்தினால் சரீரத்திலுள்ள இரத்தமெல்லாம் இரத்தாசயத்திற்கு வந்து வேகப்படுத்தும்பொழுது, இரத்தாசயம் வெடித்துவிடுகிறதென்று பொதுவாகச் சொல்வதை நாம் கேட்டிருப்போம். திடீரென்று உண்டான பெரும் சத்தமும், பயங்கரமான பெரும் சத்தமும், காதின் வழியாக இரத்தாசயத்திற்குச் சென்று, நம்மைத் திடுக்கிடச் செய்து சங்கடப்படுத்துவதை நம் அனுபவத்தால் அறிவோம். அப்படியே இனிய நாதமும் நம்முடைய சஞ்சலத்தைப் போக்கி ஜீவனை விருத்தியாக்கி நாத சொருபத்தில் லயிக்கச் செய்கிறது. உலகத்தைப் படைத்துக் காத்து அழிக்கும் முத்தொழிலும், கடவுளுடைய ஒரு சொல்லாலே நடத்தப்படுகிற தென்று நாம் யாவரும் ஒப்புக்கொள்ளுகையில், நாதத்தினால் உண்டாகும் செயல்களையும் அதன் பெருமையையும் எவர் சொல்லவல்லவர்?

இவ்வருமையான விஷயத்தைப்பற்றி யாதும் அறியாத நான் எழுதத்துணிந்ததைப் பெரியோர்கள் மன்னிக்கும்படி வணக்கமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்.

உலகிலுள்ள யாவராலும் மிகச் சிறந்ததென்று கொண்டாடப்படும் தென்னிந்திய சங்கீதத்தைப் பற்றிச்சொல்லும் பூர்வ இசைத்தமிழ் நூல்களாகிய அகத்தியம், பெருநாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றிசை, இசைமரபு, இசைநுணுக்கம், சிலப்பதிகாரம், முதலிய நூல்கள், சங்கீதத்திற்கு முக்கிய ஆதாரமாகிய சுரங்களையும், சுருதிகளையும், நுட்ப சுருதிகளையும், இராகமுண்டாக்கும் முறையையும், எவரும் இன்னும் அறிந்துகொள்ளக்கூடாத அவ்வளவு நுட்பமாகச் சொல்லுகின்றன வென்று நான் சொல்லவந்ததைப், பெரியோர்கள் அங்கீகரிக்கும்படி மிகவும் வணக்கமாய்ப் பிரார்த்திக்கிறேன்.

ஒரு பாஷையில், எழுத்துக்கள் தனித்தும், இரண்டு முதலாகத் தொடர்ந்தும் வார்த்தைகளாவதும், வார்த்தைகள் கிரமப்படி ஒன்றோடொன்று சேர்ந்து வசனங்களாவதும், பல வசனங்கள் ஒன்று சேர்ந்து காவியமாவதும்போல, சுரங்களும் சுருதிகளும் ஆரோகண அவரோகணத்தில் பல பிரஸ்தாரங்களைப்பெற்று, இராகமாகின்றன என்று நாம் தெளிவாக அறிவோம். அப்படி இருந்தாலும், நாம் பாடுகிற இராகங்களிலும், கீர்த்தனங்களிலும் இன்னின்ன சுரங்களை உபயோகிக்கிறோமென்றும், இன்னின்ன முறையை அநுசரித்து இராகம் பாடுகிறோமென்றும் தெரியாதவர்களாயிருக்கிறோம்.

பூர்வம் தமிழ்மக்கள், சுரங்களையும் சுருதிகளையும் இராகமுண்டாக்கும் விதிகளையும் அநுசரித்துப் பாடிவந்த 12,000 ஆதிஇசைகளும், அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும், பாடப்பட்டும், வேறு பெயர்களால் அழைக்கப்பட்டும், அந்நிய பாஷைச் சொற்களால் உருவமைந்தும், நாளதுவரையும் வழங்கிவருகின்றன.