பக்கம் எண் :

4

பூர்வ தமிழ்மக்கள், ஒரு ஸ்தாயியில் ச-ப, ச-ம முறையாய் 12 சுரங்களைக் கண்டுபிடித்து, அவற்றில் கிரகசுரமாற்றிப் பல பண்களுண்டாக்கி, அவைகளில் இசைக்குப்பொருந்தும் முறைப்படிக் கானம் பண்ணி இருக்கிறார்களென்று, நாம் தெளிவாக அறிவோம். இதுவே ஆயப்பாலை முறையாகும்.

இதன்பின், ஒரு ஸ்தாயியை 24 சுருதிகளாகப் பிரித்து, அவற்றில் ச-ப, ச-ம முறையில் வரும் இரண்டு சுரங்களில் ஒவ்வொரு சுருதி குறைத்து, 16 ஜாதிப்பண்கள் பாடினார்களென்று தெரிகிறது. இவைகளே வட்டப்பாலை முறை என்று சொல்லப்படும்.

இதன்மேல் ச-ப, ச-ம முறையில் வரும் பன்னிரண்டு சுரங்களில், அரை அலகாக வகுத்துத் திரிகோணப்பாலையாகவும், கால் கால் அலகு வகுத்துச் சதுரப்பாலையாகவும் கானம் பண்ணியிருக்கிறார்கள்.

அதாவது, அரை அரையான சுரங்களில் கானம் பண்ணுவதை ஆயப்பாலை என்ற முதற்படியாகவும், கால் கால் சுரங்களில் கானம் பண்ணுவதை வட்டப்பாலை என்ற இரண்டாம் படியாகவும், அரைக்கால் அரைக்கால் சுரங்களில் கானம் பண்ணுவதை திரிகோணப்பாலை என்ற மூன்றாம் படியாகவும், வீசம் வீசம் சுரங்களில் கானம்பண்ணுவதை சதுரப்பாலை யென்ற நாலாம் படியாகவும் வைத்துக், கானம் பண்ணியிருக்கிறார்கள்.

அவர்கள், ச-ப, ச-ம முறைப்படி ஒரு ஸ்தாயியில் கண்டுபிடித்த 12 சுரங்களுள்ள ஆயப்பாலையின் சுரங்களில், பலரும் பல சந்தேகம் கொண்டு, ச-ப (2/3) , ச-ம(3/4) என்று பெருக்கிப் பிரித்து முதற் படியிலேயே தள்ளாடிக்கொண்டிருப்பதையும், கிரகமாற்றி வெவ்வேறான பல இராகங்கள் பாடும் கிரமமறியாமல், பலவகைக் கீரை கலந்தாற் போல், பல இராகங்களையும் ஒன்று சேர்த்துப் பாடிக்கொண்டிருப்பதையும், நாம் பிரத்தியக்ஷமாய்க் காண்கிறோம். முதற் படியிலேயே இவ்வளவு அறியாமையிருக்குமானால், இரண்டாம் மூன்றாம் நான்காம் படிகளைப்பற்றி நாம் கேட்கவும்வேண்டுமோ?

ஒரு ஸ்தாயியை 24 சுருதிகளாகப் பிரித்து, அவற்றில் இரண்டு சுருதி குறைத்து, வீணையில் கமகமாய் வாசித்து வந்த 16 ஜாதிப்பண்களின் முறை தெரியாமல், ஒரு ஸ்தாயியை 22 சமபாகங்களாகப் பிரித்து, அதற்கேற்ற விதமாய் இராக இலட்சணங்கள் சொல்லிக் கிராம மாற்றி, அவைகளில் சிலவற்றைத் தேவலோகத்திற்கனுப்பி, மற்றவைகளை அனுபோகத்திற்கு வராதவைகளாகச்செய்து, இரண்டாம் படியிலேயே இடறினார்கள். இடறின இவர்கள் முதற் படியிலாவது நிலைக்கவில்லை. ச-ப, ச-ம முறைப்படி, அணுவளவும் பிசகாமல் சம அளவுடைய தாய் வரவேண்டிய 12 சுரங்களையும், அவைகளின் ஸ்தானத்தையுமறிந்து கொள்ளாமல், (2/3),(3/4)என்ற எண்களை ஒன்றோடொன்று பெருக்கியும், பெருக்கிய எண்களைக் குறுக்கியும் சொல்லும் ஒற்றுமையில்லாத பல கணக்குகளைக் கவனிக்கும்பொழுது, பூர்வ தமிழ்மக்கள், முதற் படியாய் வழங்கிவந்த ஆயப்பாலையின் 12 சுரங்களையே, மற்றைய தேசத்தவர் இன்னும் திட்டமாயறிந்து கொள்ளாமல் இருக்கிறார்களென்று, நாம் நிச்சயமாய்ச் சொல்வோம்.

இவ்விஷயத்தில் நாம் தெளிந்த அறிவுள்ளவர்களாகும்பொழுது, ஒரு ஆரோகண அவரோகண சுரத்தில் இராகங்களுண்டாக்கவும், அதில் ஜீவசுரமின்னதென்று கண்டுகொள்ளவும், ஜீவசுரம் இன்னின்ன நுட்பமான சுருதிகள் சேர்ந்து வருகிறதென்று காணவும், அம்முறையில் கீர்த்தனம் எழுதவும், இராகங்களுக்கு வாய்ப்பாடாய் அமைந்த கீதம் எழுதவும் கூடியவர்களாவோம்.