சிறிது காலத்திற்கு முன்னிருந்த க்ஷேத்திரிஞ்ஞரும், தியாகராஜ ஐயரவர்களும், மகா வைத்தியநாத ஐயரவர்களும், புதிதாகச் செய்த சில பதங்களும், கீர்த்தனங்களும் இராக மாலிகைகளும் தற்கால வழக்கத்திலிருக்கின்றன வென்று, நாமறிவோம். இவை, பூர்வ தமிழ்மக்கள் வழங்கிவந்த இராகங்களின் அமைப்பையும், அழகையு முடையவைகளாயிருக்கின்றனவென்றும் நாளதுவரையும் இவைகளை யொத்த இராகங்களில் பூர்வமாயமைந்துள்ள தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருவாய்மொழி முதலிய பண்களைப் பாடிக்கொண்டு வருகிறார்களென்றும், நாமறிவோம். என்றாலும், தமிழ்மக்கள் பழமையாக வழங்கிவந்த இராகங்களில், இவர்கள் வெகுகாலம் பழகிவந்த பழக்கத்தினாலும், சுரஞானத்தினாலும், தெய்வபக்தியினாலும் மற்றுஞ் சில புதிய இராகங்களில் கீர்த்தனங்கள் எழுதியிருக்கிறார்களென்று தெரிகிறது. இவர்கள் கீர்த்தனங்கள் எழுதுவதற்குரிய முக்கிய விதிகளை தம்முடைய பின்னடியார் எவருக்காவது சொல்லிவைத்ததாகவாவது, எழுதி வைத்ததாகவாவது தெரியவில்லை. இவர்கள் எழுதிய கீர்த்தனங்கள், ஒரு பொது விதியை அனுசரித்துச் செய்ததாக இல்லாமல், தங்கள் அனுபோகத்தைக் கொண்டு எழுதினதாகத்தெரிகிறது. ஆனால், இராகங்களுண்டாக்குவதற்கும், ஜீவசுரம் கண்டுபிடிப்பதற்கும், நுட்பமான சுருதிகள் வழங்கிவருவதற்குமுரிய பொதுவிதி இன்னதென்றறியாமலே, தெய்வ கிருபையினாலும், மிகுந்த அனுபவத்தினாலும் அந்தந்த இராகங்களின் ஜீவநிலையைக்காட்டி, யாவரும் பின்பற்றும்படியான உயர்ந்த மார்க்கத்தை ஒவ்வொரு கீர்த்தனங்களிலும் விளங்கவைத்திருக்கிறார்கள். இவர்கள் செய்திருக்கும் இராக அமைப்பைக் கவனிப்போமானால், இராகம் செய்வதற்குரிய பொது விதியையறிந்து செய்தது போலத்தோன்றுகிறது. ஆனால், இவர்களைப்போல் அனுபோகமில்லாதிருந்தாலும், சுரஞானமுள்ள ஒருவர் இராகமுண்டாக்கும் பொது விதிகளைக்கொண்டு, இவர்கள் செய்தது போன்ற கீர்த்தனங்களை மிகச் சுலபமாகச் செய்யலாமென்பது நிச்சயம். இம்முறைகளைக் கண்ட நான், சுரஞானமுள்ள சங்கீத வித்துவான்கள் முன்னிலையில் பிரஸ்தாபப்படுத்தி, விருத்திசெய்யவேண்டுமென்னும் எண்ணமுள்ளவனாய், சங்கீத வித்யாமகாஜன சங்கமென்ற ஒரு சபையை, 1912u மேt 27உயில் ஸ்தாபித்து நடத்த நேரிட்டது. இதில், கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளைப் பற்றி வெவ்வேறு விதமான அபிப்பிராயங்கள் வந்ததினால், அவைகள் யாவற்றையும் ஆராய்ந்து பார்க்கவும், இதுபோல் மற்றவர் சொல்லும் வெவ்வேறு அபிப்பிராயங்களைப் பரிசோதிக்கவும், சங்கீத இரத்னாகரருடைய சுருதிமுறைகளையும் பூர்வ தமிழ்மக்களின் சுருதி முறைகளையும் ஆராய்ச்சி செய்யவும் நேரிட்டது. சுருதியைப்பற்றிப் பலர் பலவிதமான அபிப்பிராயம் கொள்வதினால், அவ்வபிப்பிராயங்கள் சரிதானா, அல்லவாஎன்று யாவரும் தெரிந்துகொள்வதற்கு அனுகூலமாக, அவரவர்கள் கொடுக்கும் கணக்குகளைப் பரிசோதித்து, அட்டவணையாகக் காட்டவேண்டியது அவசியமாயிற்று. ச-ப (2/3), ச-ம(3/4) என்று வைத்துக்கொண்டு பெருக்கிச் செல்லும் கணக்கில், ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லாதிருப்பதால், அவர்கள் உபயோகிக்கும் தந்தியின் பின்னபாகங்களையும், பின்னபாகங்களுக்குச் சொல்லும் வைபரேஷன்களையும் சென்ட்ஸ்களையும் ஒத்துப்பார்ப்பதற்கும், அட்டவணை கொடுக்கவேண்டியதாயிற்று. சங்கீத இரத்னாகரரின் 22 சுருதி முறைப்படிச் சொல்லுகிறோமென்று, ஒன்றற்கொன்று பேதமான இருபதுக்கு மேற்பட்ட சுருதிமுறை சொல்வோர்களும், சங்கீத இரத்னாகரர் முறைப்படிச் சொல்லவில்லையென்று ருசுப்படுத்த, சங்கீத இரத்னாகரர் கருத்தின்படி, 22 சுருதிகள் இன்னின்ன கணக்கின்படி வருகின்றனவென்று, அட்டவணை காட்டவேண்டியதாயிற்று.
|