பக்கம் எண் :

83
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

முறுவல் :- இது பழைய நாடகத்தமிழ் நூல்களுளொன்று; இந்நூல் அக்காலத்தே இறந்து போயிற்றென்று அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர்."

மேற்கண்டவைகளை நாம் கவனிக்கையில் ஜலப்பிரளயத்துக்கு முன்னுள்ள முதல் சங்க காலத்தில், இசையைப் பற்றிய நூல்களும் வாத்தியங்களும் முதன்மை பெற்றிருந்தனவென்றும் இடைச் சங்ககாலத்தில் சில அழிந்து சில இருந்தனவென்றும் கடைச்சங்காலத்தில் சில குற்றுயிராகி மனனம் செய்த சில சூத்திரங்கள் மாத்திரமிருக்கும் நிலைக்கு வந்தனவென்றும் அறிகின்றோம். தற்காலத்தில் அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் கொண்ட நூல்களுமிறந்தன. உரையாசிரியர் மேற்கோளாக எடுத்துக்காட்டிய சில சொற்ப சூத்திரங்கள் மாத்திரம் சிலப்பதிகாரத்தைத் தேடியச்சிட்ட மகாமகோபாத்தியாயர் வே. சாமிநாதையர் அவர்களின் புண்ணியத்தால் காணக் கிடைத்தன. இப்படித் தேடுவாரும் ஆதரிப்பாருமின்றி நம் தென்னிந்திய சங்கீத நூல்கள் அழிந்துபோயினமையின் விசனிக்கக் கூடியதாயிருக்கிறது. இவ்வாறிருந்தாலும் பரம்பரையாய் மனனம் பண்ணிய சில ராகங்களும் பரதமும் தாளமும் முற்றிலும் ஒழிந்து போகவில்லை. கோயில்களில் ஊழியம் செய்யும் நாகசுரக்காரர்களாலும் நடனக்காரர்களாலும் அவர்கள் அண்ணாவிகளாலும் மேளக்காரர்களாலும் வீணைவாசிப்பவர்களாலும் கோயில் சம்பளங்களினால் மிகவும் அருமையாகக் காப்பாற்றப்பட்டு இதுவரையும் நீடித்திருக்கின்றன. இப்படியிருந்தாலும் சங்கீதத்தைத் தெளிவாய் அறிந்து கொள்வதற்கு உதவியான நூல்கள் பூர்ணமாயில்லாததினால் பூர்வமாயுள்ள கர்நாடக சுத்தம் கெட்டு சுருதிகளைப் பற்றிச் சந்தேகிக்கும்படியான நிலைக்கு வந்தது, என்றாலும் தென்னிந்திய சங்கீதத்தைக் கவனிக்கும் இந்துக்களும் மற்றும் அன்னிய தேசத்தாரும் அது மிகுந்த தேர்ச்சியுடையதென்றும் சாஸ்திரமுறையையுடைய தென்றும் மற்றவைகளோடு கலவாத பரிசுத்தமுடையதென்றும் வியந்து சொல்லக்கூடியதாயிருக்கிறது. இந்து தேசத்தின் பூர்வீக நாகரீகமும் அவர்கள் பக்தியும் தெய்வ ஆராதனையில் உபயோகித்த அவர்கள் சங்கீதமும் அவர்கள் பாஷையும் மிகவும் கொண்டாடக் கூடியதாயிருந்தன.

22. தமிழ்நாட்டின் செல்வமும் அதன் நாகரீகமும்.

தமிழ்நாட்டின் தொன்மையையும் கல்விச் சிறப்பையும் சங்கப்புலவர் பெருக்கையும், அவர்கள் செய்த சங்கீத நூல்களின் அருமையையும் பார்த்த நாம், அந்நாட்டின் செல்வத்தையும் நாகரீகத்தையும் ஒருவாறு சுருக்கமாய்ப் பார்ப்பது நல்லதென்று நினைக்கிறேன். வெகுகாலத்திற்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் ராமாயணத்தில், சுக்கிரீவன் வானார்களுக்குச் சீதையின் இருப்பிடத்தைச் சொல்லுகையில், பாண்டிய நாட்டைப் பற்றி மிகவும் வியந்து பேசுவதைக் கொண்டு பாண்டியர்கள் மிகுந்த அறியுடையவர்களா யிருந்தார்களென்றும் மிகச் செழிப்புள்ள நாட்டையுடையவர்களா யிருந்தார்களென்றும் தெரிகிறது. பொன்னிறத்ததாயும் அழகுடைய தாயும் முத்துமணி முதலியவற்றால் அணியப்பட்டதாயும் நகரத்து அரணோடு இணைக்கப்பட்ட தாயுமுள்ள பாண்டியர் வாயிற்கதவைக் காண்பீர் என்று தென்முகமாகச் செல்லும் வானா வீரர்களைப் பார்த்துச் சுக்கிரீவன் சொன்னான் என்பதாக வால்மீகி முனிவர் சொல்லுகிறார். இதில் பாண்டிய ராஜாக்கள் ஆண்டு கொண்டிருந்த கோட்டை வாசற்கதவை சிறப்பித்துக் கூறுகிறார். அதன் கோட்டைவாசலும் கதவும் முத்துநவரத்தினங்களினால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் அழகுடையதாயிருக்குமென்று சொல்லுகிறார். ஒரு பட்டணத்தையும் அதன் அழகையும் அதன் செல்வத்தையும் சொல்ல வந்தவர் அப்பட்டணத்தின் வாசற்கதவின் அழகையும் அது விலையுயர்ந்த தங்கத்தால் செய்யப்பட்டு நவரத்தினங்களாலும் முத்துக்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பதையும் பற்றிச் சொல்லுகிறார். கோட்டை வாசல்