பக்கம் எண் :

85
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

மேலும் ஜலப்பிரளயத்துக்கு முன்னுள்ள காலத்தில் கின்னரக்காரரும் நாதசுரக்காரரும் இருந்தார்களென்று சத்திய வேதத்தில் சொல்லுகிறதைக் கவனிக்கும்பொழுது தென்மதுரையிலும் அதைச் சேர்ந்த 49 நாடுகளிலும் சங்கீதம் மிக விஸ்தார மாயிருந்திருக்க வேண்டுமென்று நம்ப இடமிருக்கிறது. பாபிலோன் பட்டணத்திலும் நினிவேப்பட்டணத்திலும் இருந்ததாகச் சொல்லப்படும் பித்தளைக் கதவுகள் போல பிரமாண்டமான கதவுகளும் நிலைகளும் இக்காலத்தில் காண்பது அரிது. அதுவும் ஒன்றிரண்டல்ல நூற்றுக்கணக்காய்ச் சொல்லப்படுகிறது. இப்போது ஒன்று கூடக்காணோம். ஆனால் நிமிரோத் கட்டிய பாபிலோன் ராஜ்யத்திற்கு அநேக காலங்களுக்கு முன்புள்ள தென்மதுரையிலோ நவரத்தினங்கள் இழைத்த மிகப் பெரிதான அநேக பொற்கதவுகளிருந்திருக்க வேண்டும். ராவணனுடைய கோட்டையும் அதன் சிறப்பும் செல்வமும் தென்மதுரைப் பட்டணத்திற்குக் குறைந்ததாயிராவென்று நினைக்க இடமிருக்கிறது.

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த காலத்தில் துவாரகையை ஆண்டு கொண்டிருந்த கிருஷ்ணபகவானுடைய தங்கை சுபத்திரையைக் கலியாணம் செய்திருந்த அர்ச்சுனன் மதுரைக்கு (மணவூர்) வந்தானென்றும் மதுரைக்கரசனாகிய சித்திரவாகன பாண்டியன் மகளாகிய சித்திராங் கதையை மணம் செய்து மூன்று வருஷம் பாண்டிய நாட்டிலேயே யிருந்தானென்றும் புராணங்களில் சொல்லப்படுகிறது. இது தவிர அர்ச்சுனன் மச்சதேசத்தின் விராடபுரத்தில் அரண்மனையிலுள்ள ஸ்திரீகளுக்கு பரதசாஸ்திரம் சொல்லி வைத்தானென்றும் அவன் மகன் அபி மன்னன் கலியாணத்திற்குத் தமிழ்நாட்டு மூவேந்தராகிய சேர சோழ பாண்டியர்கள் வந்தார்களென்றும் சொல்லப்படுகிறது. அக்காலத்திலிருந்த ராஜாக்களின் ஒற்றுமையும் அவர்கள் நாகரீகமும் சங்கீதத்திலும் பரதத்திலும் அவர்கள் வைத்திருந்த பிரியமும் இக்காலத்திலுள்ள நாம் அறிவதற்குக் கூடாத விஸ்தாரமுடையதாயிருக்கின்றன. ராமருடைய பிள்ளைகளாகிய குசன், லவன் என்னும் பாலியர்கள் வால்மீகி முனிவரால் கற்பிக்கப்பட்டு ராஜசபையில் ராமாயண கதை செய்வதில் மிகப் பாண்டித்திய முடையவர்களாய் விளங்கினார்கள் என்பதைப் பார்க்கிலும் வேறு திருஷ்டாந்தமும் வேண்டுமா? பாபிலோன் ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருந்த தரியுராஜன் காலத்தில் தெய்வ ஆராதனை செய்து கொண்டிருந்த பக்தனாகிய தானியேலைச் சிங்கக் குகையில் போட்ட விசனத்தால் தரியுராஜன் சாப்பிடவும் கீதவாத்தியங்களைக் கேட்கவும் பிரியமற்றவனாய் இராமுழுவதும் விழித்திருந்தானென்று சொல்லப்படுவதையும் தற்காலத்தில் இராஜாக்களுடைய மாளிகைகளில் இரவு பகல் கீதவாத்திய முழக்கம் கேட்பதையும் காண்கிற நாம் இற்றைக்கு 2,500 வருஷங்களுக்கு முன்னிருந்த வழக்கமே பூர்வ தென்மதுரையிலு மிருந்ததென்று எண்ண இடமிருக்கிறது. இப்படிப் பூர்வத்தார் கல்வியிலும் சங்கீதத்திலும் செல்வத்திலும் சிறந்திருந்தார்களென்று சொல்லுவதோடு நகருக்குரிய பண்ட சாலை, நளதானியக் கடைகள், பருத்தி, பட்டு, சரிகை, ரோமம் முதலியவற்றால் செய்த விதம் விதமான ஆடைகள், அகில், சந்தனம், புனுகு, ஜவ்வாது, கற்பூரம் முதலிய வாசனைத் திரவியங்கள், வயிரம், கெம்பு, முத்து, பவளம் முதலிய நவரத்தினங்கள் ஆகிய இவைகளை மிகுதியாய் உடை யவர்களாயிருந்தார்களென்றும் இளங்கோவடிகள் சொல்லும் சிலப்பதிகாரத்தில் நகர் காண் காதையிலும் ஊர் காண் காதையிலும் மிக விஸ்தாரமாய் அறியலாம்.

23. தென்னிந்தியாவின் சிற்பவேலையின் உயர்வு.

நாம் முன்னோர்களின் சிற்ப வேலையைப் பார்ப்போமானால், மிகுந்த பிரமிப்பையடைவோம். கல் கைகளோடு மேல் வளைவுகள் அமைந்த கோயில் மேற்கூரை தாழ்வாரங்களையும், போதிகைச் சுருள்களையும், ஒரே கல் கம்பத்தில் அமைந்த விக்கிரகங்களையும், மிகவும் நேர்த்தியாக