மெருகிடப்பட்ட கருங்கற்சொரூபங்களையும், புஷ்பங்களின் இதழ்கள் போலச் செய்யப்பட்ட சுதை வேலைகளையும், கருங்கல் வில்லையும் அதன் நாணையும், கருங்கல் சங்கிலிகளையும் மதுரை, ஆவிடையார்கோயில், தென்காசி, மகாபலிபுரம், திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், சிதம்பரம், வேலூர், காஞ்சீபுரம், தஞ்சாவூர் முதலிய ஸ்தலங்களில் காணலாம். மேலும் இற்றைக்கு 500 வருஷங்களுக்கு முன் விஜயநகரத்தில் ராஜனாயிருந்த கிருஷ்ண தேவராயரென்பவர் மதுரை, ஸ்ரீரங்கம் போன்ற பெரிய ஆலயங்களுக்கு முகப்புக் கோபுரம் கட்ட ஆரம்பித்திருக்கிறார். வேலையின் அழகையும் முழுதும் கல்வேலையாயிருப்பதையும் வாசல்களுக்காக நிறுத்திய கல் நிலைகளையும் அநேகர் அறிந்திருப்பார்கள். அவைகள் இன்றும் ‘ராயர் கோபுரத்தடிப்படைபோல்’ என்று பழமொழியாய் வழங்கப்பட்டு வருகின்றன. மற்றொருவரால் பூர்த்தி செய்ய முடியாத அவ்வளவு பெரிதாயும் இவ்வளவு காலத்துக்குள் முடிந்ததென்று சொல்வதற்கியலாத அவ்வளவு வேலைப்படுடையதாயும், பார்த்தவர்கள் பிரமிப்படையக் கூடியதாயு மிருக்கிறதென்று நாம் அறிவோம். 24. தென்னாட்டின் தெய்வங்களும் அவர்களின் தமிழ் திறமும். இறையனாரகப் பொருளுக்கு உரையெழுதிய நக்கீரனார் ஜலப்பிரளயத்திற்கு அனேக வருஷங்களுக்கு முன்னாலேயே முதற் சங்கமிருந்ததென்றும் தலைச்சங்கத்தில் அகஸ்தியரும் திரிபுரமெரித்த விரிசடைக்கடவுளும் குன்றமெறிந்த முருகவேளும் சிறந்த சங்கப்புலவர்களாயிருந்து நடத்தினார்களென்றும் சொல்லுகிறார். இதைக் கொண்டு பரமசிவன் தாமே தென்மதுரையில் அரசாண்டுவந்தாரென்றும், அவர் குமாரனாகிய சுப்பிரமணியரும் தென்மதுரையிலிருந்தவரென்றும், இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் விருத்தி செய்து சங்கத் தலைமை பெற்றிருந்தார்களென்றும் தெளிவாக அறிகிறோம். கடைச் சங்ககாலத்தில் சிவபெருமான் தர்மியென்பவருக்கு அக்காலத்தில் உத்தர மதுரையில் ஆண்டு கொண்டிருந்த வங்கிச் சூடாமணியென்னும் சண்பகபாண்டியன் மனதில் நினைத்த கருத்திற்கிணங்கிய கவியொன்று எழுதிக் கொடுத்து 1,000 பொன் பரிசுபெறும்படி செய்தார் என்பதையும், "தமிழ் அறியும் பெருமானே தன்னைச்சேர்ந்தார் நன்னிதியே திருவாலவாய் என்னும் மதுரைக்கரசனே"-என்றும் "பாட்டுக்குருகுந் தமிழ்ச் சொக்கநாதர்" -என்றும் "தெய்வத் தமிழ்கூடல்" -என்றும் "சங்கம் பொங்கும் பண்முத்தமிழ்க்கோர்பயனே சவுந்திரபாண்டியனே" என்றும் பல வித்வான்கள் புகழ்வதையும் நாம் கவனிக்கும்பொழுது தமிழ்ப் பாஷை பரமசிவன் நேசித்த பாஷையென்று தெளிவாய்த் தெரிகிறது. உத்தர மதுரையில் தடாதகைப் பிராட்டியாரைக் கலியாணஞ் செய்து கொண்ட சுந்திரபாண்டியனும் அவர் குமாரனாகிய உக்கிர பாண்டியனும் மதுரையில் தமிழ் அரசர்களாயிருந்தார்களென்றும் இவர்களே சிவபெருமான் முருகக் கடவுளின் அவதாரமென்றும் சொல்லப்படுகிறது. மேலும் பாண்டியராஜர்கள் யாவருக்கும் தமிழ்நாடன், தென்னவன், தமிழர்கோமான், கூடற்கோமான், கடம்பவனநாதன், மதுரேசன், (மதுரைக்கரசன்) பாண்டி வளநாடன், எனப் பலபெயருண்மையும், பரமசிவனையும் சுப்பிரமணியரையும் அவர்கள் பரம்பரையில் உதித்த பாண்டிய ராஜாக்களையும் மற்றவர்கள் புகழ்ந்திருப்பதையும் நாம் காணலாம். சிவபெருமானும் அவர் பரம்பரையிலுதித்த பாண்டிய வரசர்களும் தென்மதுரை, கொற்கை, உத்தரமதுரை என்னும் இடங்களில் ஆண்டு வந்தார்களென்றும் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் வளர்த்துவந்தார்களென்றும் தெளிவாக அறிகிறோம். இவர்களில் மிகுந்த
|