பிரசித்தி பெற்ற அரசர்களுக்குக் கோயில் கட்டி அவர்களைத் தெய்வங்களாக வணங்கி வந்தார்கள். இப்பரம்பரையிலுள்ளோர் யாவரும் தென்பாண்டி நாட்டில் முதல் சங்கத்துக்கு முதன்மையான பரமசிவனையும் அவர் குமாரனாகிய முருகக்கடவுளையும் ஆராதித்து வந்தார்கள். தென்னிந்தியாவிலும், சுமத்திரா, ஜாவா என்னும் தீவுகளிலும், சுப்பிரமணியர் ஆலயங்களும் விக்னேஸ்வரர் ஆலயங்களும் இருப்பதை நாம் இன்றும் காணலாம். இந்தியாவின் வடபாகத்திலும் மற்றும் இடங்களிலும் இவ்வாலயங்களிருக்கக் காண்பது அரிது. உத்தரமதுரையில் சுமார் 130 தலைமுறையாக ஆண்டு கொண்டு வந்த ராஜாக்கள் சிவபெருமான் என்னும் சோமசுந்திரபாண்டியனின் வம்சத்தார்களென்பதை, திருவாலவாய் என்னும் உத்தரமதுரையின் ஸ்தலபுராணத்தில் அல்லது திருவிளையாடல் புராணத்தில் தெளிவாகக் காணலாம். அதில் விறகு விற்றபடலம் அல்லது யாழ்வாசித்த படலத்திலும் இசைவாது வென்ற படலத்திலும் கால்மாறியாடிய படலத்திலும் சங்கீதத்தைப் பற்றியும் பரதத்தைப் பற்றியும் தாளத்தைப் பற்றியும் சுருக்கமாய்ச் சொல்லியிருக்கிறது. 25. முச்சங்கங்களின் காலத்தைக்கொண்டு இந்தியாவின் பூர்வ சரித்திரத்தைஒருவாறு திட்டமாய் அறியலாம் என்பது. இதை வாசிக்கும் கனவான்களே இந்தியாவின் காலக்கணக்கு தற்காலத்தைப் போல ஒன்று, இரண்டு என்ற இலக்கத்தோடு சொல்லப்படாமல் இன்ன மனுவின் காலமென்றும் இன்ன யுகமென்றும் இத்தனையாவது பரிவிருத்தியென்றும் (120 வருஷம்) இன்னபெயருடைய வருஷமென்றும் (பவ, யுவ, என்பதுபோல்) இன்ன ராசி மாதம் என்றும் (மேடரவி) சொல்லுவது வழக்கம். இதோடு மனிதனின் அற்ப ஆயுளை நினைத்து வெகுதானிய வருஷம் கடகரவியில் பிறந்தானென்றும் சொல்லுவது வழக்கம். இதில் எந்த வெகுதானிய வருஷமென்றும் எத்தனையாவது பரிவிருத்தியென்றும் எந்த ஆயிலியத் திருவிழாவென்றும், எந்த யுகமென்றும் சொல்லாமையினால் நிச்சயம் சொல்லக்கூடாமல் மயங்குவது இயல்பே. மேலும் பிதுர்பக்தி அதிகமாயுள்ள இந்திய ராஜவம்சங்களில், முன்னோர்களின் பெயரே அடிக்கடி வழங்கி வருகிறது வழக்கம். இப்படி வருவதினால் இந்தியாவில் கால நிச்சயம் சொல்லுவது சற்று வருத்தமாகத் தோன்றுகிறது. மேலும் பூர்வத்தில் புராணங்களையும் இதிகாசங்களையும் எழுதியவர்கள் கால நிச்சயத்தின் அருமையை அறியாமல் அவர்கள் மனம்போனபடி கால நிர்ணயம் சொல்லியிருக்கிறார்கள். 360 நாள் கொண்டது மனுட வருடமென்றும், அப்படி 360 கொண்டது தேவ வருடமென்றும் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு ராஜாக்களும் தேவ வருடத்தில் 60,000, 40,000, 10,000 வருடங்கள் ஆண்டார்களென்றும் அனேக ரிஷிகள் அனேக ஊழி காலங்களாகவும் அநேக சதுர்யுகங்களாகவு மிருந்தார்களென்றும் சொல்லப்படுகிறது. இதினால் இந்திய சரித்திரத்தின் கால நிர்ணயம் சரியாகச் சொல்வது கூடிய காரியமாகத் தோன்றவில்லை. எந்தச் சரித்திரமும் இப்படிப்பட்ட கற்பனைகள் கலந்ததாகவேயிருக்கிறது. இதோடு நீதி நூல்கள் எழுதிய வித்வசிரோமணிகளை கவனிப்போமானால் காப்பு முதல் கடை வரையிலும் தங்கள் ஊரையாவது பெயரையாவது பிறந்த வருஷத்தையாவது சொல்வது வழக்கமாயில்லை. திருக்குறள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நன்னெறி, நல்வழி முதலியவைகளைக் கவனித்தால் இவ்வுண்மை தெரியும். தற்காலத்தைப்போல் புஸ்தகம் பதிவு செய்துவைக்கிற (Register) வழக்கமுமில்லை. அப்படியே எழுதிவைத்தாலும் முதல் ஏட்டிலாவது கடைசி ஏட்டிலாவது எழுதி
|