பக்கம் எண் :

88
முச்சங்கங்களின் காலத்தைக்கொண்டு இந்தியாவின் பூர்வ காலத்தை அறியலாம் என்பது.

வைப்பார்கள். வைத்த கொஞ்சகாலத்திற்கெல்லாம் முதல் ஏட்டையும் கடைசி ஏட்டையும் முதல் முதல் செல்லுகள் அரிப்பது வழக்கம். இப்படி அரித்துவிடுகிறதும் காலந்தெரியாமல் போவதும் இயற்கை. சில நூறு வருஷங்களுக்கு முன்னுள்ள நூல்களை அநேக சதுர்யுகங்களுக்கு முன்னுள்ளதென்று சொல்லிக்கொள்வது பெருமையென்று ஒரு தப்பான அபிப்பிராயம் வளர்ந்துவிட்டது. இப்படிக் காலந்தெரியாமல் போவதோடுகூட சிலர் தாங்கள் எழுதிய நூலுக்கு பெரியவர்கள் பெயரை போட்டுவிட்டால் அதி பூர்வமாக எண்ணப்படுமென்று நினைத்து பெயர் மாற்றி வைக்கிறார்கள். விசேஷமாக நீதிநூல்களிலும் உண்மை விளக்கும் சாஸ்திரங்களிலும் உள்ளது உள்ளபடியே அனுபோகத்துக்கு வரக்கூடிய சாஸ்திரங்களிலும் இப்படிச் செய்கிறதில்லை. ஆனால் கற்பனைகளும் கட்டுக் கதைகளும் நிறைந்த நூல்களிலே இவைகளை நாம் காணலாம். திருஷ்டாந்தமாக ஸ்தலபுராணங்கள் புதிது புதிதாய் உண்டாக்கப்படுவதை அறிவோம். அக்கதை சொல்வதற்கு வியாச பகவானும் அதைக் கேட்டு ஜனமேஜியருக்குச் சொல்ல நடுவில் ஒரு சூதபுராணிகரும், அதைத் தூண்டிவிட ஒரு நாரதரும் எழுதுவதற்கு மற்றொரு வியாசரும் எங்கிருந்தாவது வந்துவிடுவார்கள். அவர்கள் சொல்வதை வியாசர் எப்படியாவது எழுதி விடுவார். அதன்பின் இவர்கள் எழுதினதெல்லாம் வேதமும் புராணமுமாகிவிடும். சூதபுராணிகர் என்பதும் நாரதர் என்பதும் வியாசர் என்பதும் பெயர் வேற்றுமையால் வேறாகத் தோன்றினும் புராணம் எழுதினவர் ஒருவர் என்றே தோன்றுகிறது. எழுதினவர் இன்னாரென்று நமக்குத் தெரிந்திருந்தும் இவர் இப்படி அநேக ஸ்தலங்களுக்கு புராணங்கள் எழுதியிருக்கிறார் என்று நாம் அறிந்தும் சூதபுராணிகர், நாரதர், வியாசர் போன்ற மகான்கள் பெயர்களும் சில தேவர்கள் பெயர்களும் வருவதினால் மாத்திரம் அவரால் எழுதப்பட்ட யாவும் உண்மையென்று நம்பி விடுகிறோம். பரிசீலனை பண்ணாத இக்குருட்டு நம்பிக்கை இந்தியாவுக்கே சிறந்ததாகத் தோன்றுகிறது. ஆகையினால் புராணங்கள் சொல்வதைக் கொண்டு மாத்திரம் நாம் இந்தியாவின் காலத்தை நிச்சயிப்பது கூடாத காரியம்.

ஆயிரம் ஆயிரமான வருஷங்களுக்கு மேற்பட்ட சங்கதிகளை பூர்வசரித்திரங்களைக் கொண்டே ஒருவாறுசொல்லலாமேயொழிய நிச்சயமாய்ச் சொல்லுவது கூடியகாரியமாயில்லை. முச்சங்கமும் அவைகளிருந்த வருஷமும் எவ்வித ஆக்ஷேபனையுமின்றி நாம் ஒப்புக்கொள்ளக்கூடிய சரித்திரமுடையதாகத் தெரிகிறது. அவ்வருஷத்தைக் கொண்டு மற்ற நடவடிக்கைகளையும் நாம் ஒத்துப் பார்த்தால் இந்திய பூர்வீக சரித்திரங்களின் உண்மை விளங்கும். தென்மதுரையும் அதைச்சேர்ந்த 49 நாடுகளும் தண்ணீருக்குள் மூழ்கிப்போனதால் வேறு எவ்விதமான துப்புந்துலங்கவில்லை. அப்படியில்லாதிருந்தால் நமக்கு வேண்டிய அநேக ஆதாரங்கள் அங்கே கிடைத்திருக்கும்.

அழிந்துபோன லெமூரியாவைப் பற்றியும் அதன் சுற்றிடங்களிலிருக்கும் இயற்கை அமைப்பின் சில குறிப்புகளைப் பற்றியும் தமிழ்ப் பாஷையின் பூர்வத்தைப் பற்றியும் தமிழ் மொழிகள் பல பாஷையில் கலந்திருப்பதைப் பற்றியும் சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் சொல்பவை உண்மையென்று புலப்படுகின்றன. இன்னும் சில நாள் செல்லச்செல்ல இதிலும் மேலான சில ஆதாரங்கள் கிடைக்கலாம். அதி பூர்வமாயுள்ள லெமூரீயாவில் தமிழ்ப் பாஷையே பேசப்பட்டு வந்ததென்றும் தமிழ்ப் பாஷையே மற்றெல்லா பாஷைகளுக்கும் முந்தினதென்றும் சாஸ்திரிகள் கூறும் அபிப்பிராயம் சரியென்று நாமும் ஒப்புக்கொள்ளுகிறோம். இந்து மகாசமுத்திரத்தின் தென்பக்கத்திலுள்ள கெர்கியூலன் தீவுவரை விசாலித்திருந்த பூமியே ஒரு காலத்தில் அதாவது முதல் ஊழிக்கு முன் தமிழ் மக்கள் குடியிருந்த நாடாகவும் 4,400 வருஷங்களாக முதற்சங்கமிருந்த பூமியாகவும் தோன்றுகிறது. இதோடு இந்நாட்டின் தென்பாரிசத்தில் பல மலைத்தொடர்களால் சூழப்பட்ட குமரி