பக்கம் எண் :

89
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

யென்ற மலைச்சிகரமிருந்ததாகவும் அதிலிருந்து பஃறுளியாறு வடிம்பலம்பநின்ற பாண்டியனால் வெட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேற்றிசை மலைகளிலிருந்து அரபிக்கடலில் விழும் பெரிய ஆற்றை கிழக்குத் திசையில் வரும்படி வைகை வாய்க்கால் வெட்டிவிட்டது போல இதுவுமிருக்கலாமென்று சொல்ல வேண்டியதாயிருக்கிறது. இது ஒரு பெரிய ஜீவநதியாயிருக்க வேண்டும். இந்நதியும் குமரி ஆறும் இமயமலைபோலொத்த குமரி மலைகளின் தொடர்ச்சியினின்று உற்பத்தியாயிருக்கலாமென்று எண்ண இடமிருக்கிறது. இம்மலையும் நதியும் அழிந்த காலத்தில் அந்நாட்டிற்கு வட எல்லையாயிருந்த குமரியாறும் அழிந்துபோயிற்று. இதனுடைய பூர்வீகத்தை நாம் அறிந்துகொள்வதற்கு அதிக ஏதுக்களில்லாதிருந்தாலும் அழிந்துபோன முதற் சங்கத்தின் கடைசி காலத்திலிருந்து தப்பி கபாடபுரத்துக்கு வந்த முடத்திருமாறன் என்ற கடைசி பாண்டியனும் அகஸ்தியர் தொல்காப்பியர் போன்ற முதற் சங்கப் புலவர்களும் ஒருவாறு முதற் சங்கத்தின் பெருமையை இரண்டாஞ் சங்கத்துக்கு புலப்படுத்தியிருப்பார்களென்று தோன்றுகிறது. மற்றப்படி 4,440 வருஷங்கள் நடந்த தமிழ் சங்கத்தை 4,449 வித்வ சிரோமணிகள் தலைமை வகித்தார்களென்ற திட்டமான கணக்கு ஏற்பட்டிருக்காது. இதற்கு சுமார் 3,700 வருஷங்களுக்குப் பின்னுண்டான மற்றொரு அழிவினால் முந்தின ஊழியின் அழிவு, நுட்பமான சில சரித்திரங்களல்லாத அட்டவணையாக மாத்திரம் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்படியிருந்தாலும் வித்வபரம்பரையாக இது வழங்கி வந்ததினால் இது உண்மைத் தவறுதல் என்று நினைக்க இடமில்லை. மூன்றாவது சங்கம் அழிந்து இற்றைக்கு சுமார் 1,800 வருஷங்கள் ஆயிற்றென்பது யாவரும் அறிந்த விஷயம். அப்படியிருந்தாலும் ஒரு தமிழ்ச் சங்கமிருந்ததாகச் சொல்லப்படவில்லை. கிறிஸ்து பிறந்த இரண்டாம் நூற்றாண்டில் மூன்றாம் சங்கம் கலைந்துபோனபின் சுமார் 1,000 வருஷங்களாக அதாவது கி. பி. 1,200 வருஷங்கள் வரைக்கும் பாண்டிய ராஜகுலத்தவர்களாலே அரசாக்ஷி செய்யப்பட்டு வந்தது. அதன்பின் சுமார் 50 வருஷங்களாக ஆதிசுல்தான் என்னும் மகம்மதிய அரசனும் அதன்பின் விசுவநாத நாயக்கர், திருமலை நாயக்கர் போன்ற சில நாயக்க வம்சத்தவர்களும் அதன்பின் முராரி ராயர், அப்பாஜி ராயர், சந்தா சாயபு, கான் சாயபு போன்ற அநேகம் சில்லரை ராஜாக்களும் ஒரு வருஷம் இரண்டு வருஷம் போன்ற அற்ப காலங்கள் ஒருவர்பின் ஒருவராக கலகஞ் செய்துகொண்டு அரசாக்ஷி செய்து வந்தார்கள். 1,801-ம் வருஷம் மதுரையும் அதைச்சேர்ந்த நாடுகளும் மாட்சிமை தங்கிய ஆங்கிலேயர் ஆளுகையில் வருகிற வரையும் நாட்டில் சமாதானமில்லாதிருந்தது. தன் உயிரையும் குடும்பத்தார் உயிர்களையும் தனது பொருள்களையும் காப்பாற்ற சக்தியில்லாது தவித்துக் கொண்டிருக்குங் காலத்தில் ஒரு தமிழ்ச்சங்கம் வைத்து நடத்துவது கூடிய காரியமாகுமா? அதோடு அன்னிய பாஷைகளில் எழுதிய பல நூல்களும் வார்த்தைகளும் இனிய தீஞ்சொற்றமிழ்ப் பாஷையைக் கலங்கடித்தது.

26. மாட்சிமை தங்கிய விக்டோரியா சக்கரவர்த்தினி அவர்கள் காலத்தில்மதுரை நாலாவது தமிழ்ச்சங்கம் ஆரம்பமாயிற்று.

எவ்வுயிரையும் தன்னுயிர்போல் நினைத்து அரசாட்சி செய்துவரும் ஆங்கிலேய துரைத்தனத்தார் உள் நாட்டுக் கலகங்களையடக்கி வெளிநாட்டார் படையெடுப்பைத் தடுத்து துஷ்ட ராஜர்களை நீக்கி குடிகள் சுகமுற்று வாழ்வதற்கு அனுகூலமான தந்தி, தபால், பெரும் பாதைகள், இருப்புப் பாதைகள், நீர் பாசன வசதிகள், வைத்தியசாலைகள், கல்விச்சாலைகள், கலாசாலைகள், நியாயஸ்தலங்கள் முதலியவைகளை ஏற்படுத்தி இந்தியாவை சமாதான நிலைக்குக் கொண்டு வந்தார்கள். தாயில்லாக் குழந்தைகளுக்கு உற்ற தாய் போல