பக்கம் எண் :

90
மதுரை நாலாவது தமிழ்ச்சங்கம்

கருணை சுரந்து தன் மக்களிலும் அருமையாய் நினைக்கும் ஆங்கிலேய அரசியாய் விளங்கின விக்டோரியா மகா ராணி அவர்கள் இந்தியாவின் ராஜ சுதந்தரமும் பின் ஏகசக்கராதி பத்யமும் பெற்று தரும நீதி தவறாமல் 1,837-முதல் 1,901-வரையும் சுமார் 64 வருஷங்களாக மிகுந்த சமாதானத்தோடு அரசாட்சி செய்து வந்தார்கள். இவ்வுத்தம அரசாட்சியின் பயனாக இந்திய தேசத்தின் உள்நாட்டுக் கலகங்கள் ஓய்ந்தன. நீதி தவறிய பல கொடுஞ்செயல்கள் ஒழிந்தன. ஜனங்கள் ஒன்று சேரவும் சகோதர உரிமை பாராட்டவும் பல சங்கங்கள் உண்டாயின. தமிழ்ப் பாஷையின் பூர்வீகத்தையும் அதன் சொற்சுவை பொருட்சுவையையுமறிந்த பலர் பழைய தமிழ் நூல்களைத் தேடவும் அதை ஆராய்ச்சி செய்யவும் அச்சிடவும் ஒரு சபை கூட்டவும் ஆரம்பித்தார்கள். ஆங்கிலேய அரசாட்சியில் இந்தியாவில் முதல் சக்கிராதிபத்யம் பெற்ற விக்டோரியா சக்கரவர்த்தினி அவர்களின் அரசாட்சியின் 3,200இல் மூன்றாவது சங்கம் கலைந்துபோக அதற்கு சுமார் 1,800 வருஷங்களுக்குப் பின் கலியுகம் 5,002இல் மதுரை நாலாவது தமிழ்ச்சங்கங்கூடி 13 வருஷங்களாக நடந்து வருகிறதையும் அதில் 251-க்கு மேற்பட்ட பல வித்வசிரோமணிகள் சேர்ந்திருப்பதையும் தமிழைப் பற்றிய ஆராய்ச்சி நடந்து வருவதையும் நாம் காண்கையில், இதற்கு முன் நடந்த மூன்று சங்கங்களையும் அதன் பெருமையையும் உண்மைத் தவறுதலென்று யார் மறுக்கக்கூடும். பாலவனத்தம் ஜமீன்தார் ஸ்ரீமான் பாண்டித்துரை தேவர் அவர்களின் பெருமுயற்சியால் இந்நாலாம் சங்கம் ஆரம்பித்தது. இந்நாலாஞ் சங்கத்திற்கு பாலவனத்தம் தமிழ்ச்சங்கமென்றாவது பாண்டித்துரை தமிழ்ச்சங்கமென்றாவது பெயர் வைக்கலாமே. அப்படியில்லாமல் மதுரைத் தமிழ்ச்சங்கம் என்று வைத்ததானது, இதன் முன் மதுரையில் நடந்த தமிழ்ச் சங்கத்தின் பெயரையே முதற்காரணமாகக் கொண்டு வைக்கப்பட்டதென்று தோன்றுகிறது. இதன் முன் பிரபலமான மூன்று சங்கங்களிருந்ததினால் இதற்கு நாலாம் சங்கமென்று பெயர் வந்தது.

இந்நாலாம் சங்கத்தைப் பற்றிய சில முக்கிய குறிப்புகள் அதாவது, ஆரம்பித்த காலம், கூட்டப்பட்ட சங்கத்தில் தலைமை வகித்தவர்கள், சங்கத்தை ஆதரித்து வரும் ராஜர்களும் கனவான்களும், சங்கத்தை நடத்தி வருவதில் பிரயாசை எடுத்துக் கொள்ளுங் கனவான்களும், சங்கத்தில் அங்கத்தினராக இருக்கும் வித்வான்களும் ஆகிய இவர்களைப் பற்றிச் சுருக்கமாய்ப் பார்ப்பது முந்திய மூன்று சங்கங்களின் உண்மையை அறியாதவர்களுக்கு அவற்றின் உண்மையை வெளிப்படுத்துமென்று எண்ணுகிறேன்.

நாலாவது மதுரைத் தமிழ்ச்சங்கம் 1901-ம்மே 24
ஸ்ரீமான் பொ. பாண்டித்துரைத்தேவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
இதுவரை 13-வருஷமாக வங்கம் கூடிற்று.

1. ஸ்ரீமான் பாண்டித்துரைத்தேவர் அவர்கள்

2. ஸ்ரீமான் S. சாமினாதவிஜயதேவர் அவர்கள்

3. ஸ்ரீமான் P.S. சுப்பிரமணிய ஐயர் அவர்கள்

4. ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி அவர்கள்

5. ஸ்ரீமான் ராவ்பகதூர் M. ஆறுமுகம் பிள்ளை அவர்கள்

6. ஸ்ரீமான் ஆனரபிள் K. இராம ஐயங்கார் அவர்கள்

7. ஸ்ரீமான் ஆனரபிள் P. இராமநாதன் அவர்கள்

8. மகா---ஸ்ரீ மகாமகோபாத்தியாயர் வே. உ. சாமிநாதையர் அவர்கள்

ஆகிய இவர்களால் தலைமை வகித்து நடத்தப்பட்டு வந்திருக்கிறது.