பக்கம் எண் :

106
லெமூரியா நாட்டில் பேசப்பட்டு வந்தபாஷை தமிழ்ப்பாஷையே என்பது.

வாலில்லாக் குரங்கினமும் மற்றும் சில பிராணிகளும் தாவர வர்க்கங்களும் அதற்கு சுற்றிலுமுள்ள இடங்களிலிருப்பதைக்கொண்டு தென்னிந்தியாவின் தென்பாகத்திலிருந்து அழிந்துபோனதாகச் சொல்லப்படும் குமரிநாடே லெமூரியாவென்று தெளிவாகத் தெரிகிறது. குமரியாற்றிற்கும் பஃறுளியாற்றிற்கும் நடுவிலிருந்ததாகச் சொல்லப்படும் மிகுந்த நீர்வளமுள்ள ஏழ்தெங்கநாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ் முன்பாலைநாடும், ஏழ் பின்பாலைநாடும், ஏழ் குன்றநாடும், ஏழ்குணகாரைநாடும், ஏழ் குறும்பனைநாடும் ஆகிய 49 நாடுகளடங்கிய தென்பாண்டிநாடே மனிதஜாதிக்கு ஆதி பிறப்பிடமென்று தெளிவாகத் தெரிகிறது. ஏழு ஏழு நாற்பத்தொன்பது நாடுகள் என்று சொல்லுவதை நாம் கவனிக்கையில் நாவல் தீவு (நாவல் மரம்) இறலித்தீவு, (இத்திமரம்) குசைத் தீவு, (நாணல்) கிரவுஞ்சத்தீவு, (அன்றில்) புஷ்கரத்தீவு, (யானை) தெங்குத்தீவு, கமுகுத்தீவு என்ற ஏழு பெரும் பூபாகங்களும் ஆஸ்ட்ரேலியா, சுமாத்திரா, ஜாவா போல ஏழு தீவுகளாயிருந்திருக்கலாமென்றும் அவைகள் ஒவ்வொன்றும் எவ்வேழு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கலாமென்றும் தோன்றுகிறது. தென்னிந்தியாவில் இயற்கையாய்க் காணப்படும் நாவல், இத்தி, நாணல், அன்றில், யானை, தெங்கு, கமுகு முதலிய மரங்களும் ஜீவராசிகளும் ஏழு தீவுகளிலும் மிகுதியாய் இருந்ததாகத் தெரிகிறது. மற்ற இடங்களிலிருப்பதாக நாம் காணமாட்டோம். சப்த சுரங்களும் இவ்வேழு தீவுகளிலேயே யிருந்து உண்டானதாக பூர்வ நூல்களால் சொல்லப்படுகிறது. இந்த நாற்பத்தொன்பது நாடும் கடலால் அழிக்கப்படுமுன் மிகுந்த செழிப்புடையதாயும் இயற்கை அமைப்பின் வளங்கள் மிகுந்ததாயும் பாண்டிய ராஜர்களால் ஆளப்பட்டு வந்ததாயும் நாம் இதன்முன் பார்த்தோம். கடலால் அழிந்த இந்நாட்டிற்கு தென்மதுரை தலைநகராயிருந்தது. இதில் தமிழையே பேசிவந்தார்கள். இத்தமிழ்மொழியே பல இடங்களிலும் பல பாஷைகளிலும் வழங்கிவருகிறதென்று இதன்முன் விஸ்தாரமாகப் பார்த்தோம். தமிழ்ப் பாஷையில் எழுதப்பட்ட பல அரிய விஷயங்களும் நூல்களும் பிரளயத்தால் அழிக்கப்பட்டபின் பாஷையின் மிகவும் சொற்பமான பாகமாத்திரம் மிஞ்சி நின்றது. பூர்வமுள்ள நூல்களில் வழங்கிவரும் சில வார்த்தைகள் இன்னும் அர்த்தந் தெரியாமல் அப்படியே நிற்கின்றன. அநேக அரும் பதங்கள் வழங்காமல் ஒழந்தன. இப்படி நூல்களும் பொருள்களும் பொருள்களை விளக்கும் அரும்பதங்களும் ஒழிந்தபின், நெய்யரியில் மிஞ்சிய இலை சிறுவர் வாய் வந்தது போல நாடோடிய வழக்கத்திலிருக்கும் வார்த்தைகளே தமிழில் வழங்கிவருகின்றன. இத்தமிழ்மொழி பூர்வமாய் லெமூரியாவில் பேசப்பட்டுவந்ததென்பதையும் அது பல பாஷைகளில் கலந்திருக்கிறதென்பதையும் இயற்கை அமைப்பின் ஓசைகளுக்கு மிகுந்த பொருத்தமுடையதாயிருக்கிறதென்பதையும் எழுத்துக்களின் சுலபமான வடிவையும் எழுத்துத்தவறாத உச்சரிப்பையுங்கொண்டு தமிழே ஆதிபூர்வ பாஷையென்று திட்டமாகத் தெரிகிறது. 49 தமிழ் நாடுகளங்கிய லெமூரியா அழிந்தகாலத்தில் தமிழரும், தமிழில் எழுதப்பட்ட கலை ஞானங்களும் அழிந்து போனதினால், தமிழை அற்பமாக நினைத்து அலட்சியம் செய்யும் கேவல நிலைக்கு வந்தது. பெருங்காய மிகுந்த பாத்திரத்தில் எஞ்சிநின்ற வாசனைபோல மிகச்சொற்பமான பாகம் இரண்டாஞ் சங்ககாலத்தில் நூல்களாக விளங்கின. தொல்காப்பியத்தையும் மற்றும் சில நூல்களையும் நாம் உற்றுநோக்கினால் வைத்தியம், வாதம், யோகம், ஞானம், சோதிடம், சித்திரம், சங்கீதம் முதலிய 64 கலைகளும் தமிழ்நாட்டில் மிகுந்த பெருமைபெற்று வழங்கிவந்தனவென்று அறிவோம். முதற்சங்கமிருந்த தென்மதுரையில் காய்சின வழுதிமுதல் கடுங்கோன் ஈறாயிள்ள 89 பாண்டியர்கள் அரசாட்சி செய்துக்கொண்டிருந்தார்கள். அவருள் ஏழு பாண்டிய ராஜர்கள் கவியரங்கேறினார்கள். அவர்களுள் சயமாகீர்த்தியனாகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் காலத்தில் எழுநூற்றுக்காவதம் பரவியிருந்த 49 பாண்டிய நாடும் கடலால் அழிந்தன.