பக்கம் எண் :

107
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

33. தென்னாட்டைப்பற்றியும் தென்னாட்டின் பாஷையைப்பற்றியும் ராஜாங்கத்தைப்பற்றியும் சொல்லும் அபிப்ராயத்தை ஒத்துப்பார்த்தல்.

தமிழ் வழங்கும் தென்னாட்டிலேயே தமது ஜீவிய நாளெல்லாம் தங்கியிருந்து தமிழ்ப் பாஷையைத் தீரவிசாரித்த கால்ட்வெல் (Caldwell) அத்தியட்சர் அவர்கள் தமிழிலிருந்து சமஸ்கிரதத்திலும், எபிரு பாஷையிலும், ஆங்கிலோ சாக்சன் பாஷைகளிலும், சீத்திய பாஷைகளிலும், மற்றும் சில பாஷைகளிலும் வழங்கிவரும் வார்த்தைகளை வெவ்வேறாகப் பிரித்துச் சொல்வதை இதன்முன் பார்த்தோம். அதைக்கொண்டு மற்ற எல்லாப் பாஷைகளுக்கும் தமிழ்ப் பாஷையே ஆதிஊற்றாயிருக்கலாமென்று இதன் முன் நாம் எடுத்துக் காட்டியிருக்கிறோம். தமிழ் பாஷையின் வார்த்தைகள் பல பாஷைகளிலும் கலந்திருப்பதைக் கொண்டு ஆதியில் தமிழ் மக்கள் பல நாடுகளுக்குப் போயிருக்க வேண்டுமென்றாவது அல்லது மற்றவர் தமிழ் நாட்டிற்கு வந்து கலந்து உறவாடியிருக்க வேண்டுமென்றாவது எண்ண இடமிருக்கிறது. ஆனால் எக்கேல் (Haeckel) என்னும் தத்துவசாஸ்திரியார் சொல்லுவதை நாம் கவனிப்போமானால் தென்னிந்தியாவின் தென்பாகத்திலிருந்த லெமூரியா என்னும் கண்டம் மிகப்பூர்வமாயுள்ள பழைய உலகமென்றும், அதுவே ஜனங்கள் முதல் முதல் உற்பத்தியான பரதீசாயிருந்ததென்றும் சொல்லுகிறார். பாஷைகள் பல மாறி மாறி புதிதாக்கப்பட்டு வந்தாலும் அவைகளில் கலந்திருக்கும் வார்த்தைகளைக் கவனித்தால் அவைகள் மிகப்பூர்வமான ஒரு பாஷையினின்றே வந்திருக்கவேண்டுமென்றும் அவ்வார்த்தைகள் மனுஷ உற்பத்தியையும் அவர்கள் உற்பத்தியான நாட்டையும் அந்நாட்டில் வழங்கிவந்த பாஷையையும் கண்டுபிடிப்பதற்கு முக்கிய உதவியாயிருக்குமென்றும் சொல்லுகிறார்.

தமிழ்வார்த்தைகள் பலபாஷைகளில் கலந்திருப்பதைக்கொண்டு தமிழ்ப்பாஷை தனித்த பாஷையாயிருக்கலாமென்று எண்ணும் கால்ட்வெல் அத்தியட்சர் அவர்கள் தென்னிந்தியாவின் தென்பாகத்திலிருந்து அழிந்துபோன லெமூரியாவே ஜனங்கள் உற்பத்தியான பரதீசு என்று சொல்லும் எக்கேல் தத்துவசால் யாரும் இற்றைக்குச் சுமார் 50 வருஷங்களுக்கு உட்பட்டவர்களென்று நாம் அறிவோம். ஆனால் இற்றைக்கு சுமார் 1,800 வருஷங்களுக்கு முன் இறையனாரகப் பொருளுக்கு உரையெழுதிய நக்கீரரும், அக்காலத்திருந்த ராஜாக்கள், தேசங்கள், கலைகள் முதலியவைகளை ஒருவாறு அறிந்து கொள்ளற்கேதுவாயிருக்கிற சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகளும் தென்னிந்தியாவின் தென்பக்கத்திலுள்ள குமரியாற்றிற்கும் குமரியாற்றின் எழுநூற்றுக் காவதங்களுக்கு அப்புறமுள்ள பஃறுளியாற்றிக்கும் இடையிலிருந்த 49 தமிழ் நாடுகள் அழிந்துபோனதாகச் சொல்லுகிறார்கள். அந்நாடுகளுக்கு தென்மதுரை ராஜதானியாக இருந்ததென்றும், அதில் 89 பாண்டியர்கள் 4,400 ஆண்டு பரம்பரையாய் அரசாட்சி செய்தும் தமிழ்ச்சங்கத்தை ஆதரித்தும் வந்தார்களென்றும் சொல்லுகிறார்கள். இவர்கள் சொல்லியிருப்பவை இதன்முன் பாஷையைப் பற்றியும் லெமூரியாவைப்பற்றியும் எழுதிய கால்ட்வெல் அத்தியட்சர் அவர்களுக்கும் எக்கேல் என்னும் தத்துவ சாஸ்திரியாருக்கும் தெரிந்திருக்குமானால் தமிழ் நாட்டைப்பற்றியும் தமிழ்ப் பாஷையைப்பற்றியும் பாண்டிய ராஜ்யத்தைப்பற்றியும் அதிக நுட்பமான விஷயங்களைச் சொல்லியிருப்பார்கள்.

இம்மூன்றையும் சீர் தூக்கிப் பார்ப்போமேயானால் ஒருவர் தமிழ்ப்பாஷையின் பூர்வத்தையும் அதன் மேன்மையையும் மற்றொருவர் தமிழ்ப்பாணை வழங்கிவந்த லெமூரியா நாட்டையும் அதன் இயற்கையையும் பற்றிச் சொல்லுகிறார். மற்றவர், லெமூரியா என்று பிறர் சொல்லும் அடையாளங்களோடுகூடிய 49 தமிழ் நாடுகளையும் சில ஊர்களையும், மலைகளையும், ஆறுகளையும், ராஜர்களையும், சங்கப்புலவர்களையும், அக்காலத்து வழங்கிவந்த நூல்களையும்