அக்பர் காலத்திலிருந்த சங்கீத வித்வான்களையும் அவர்கள் உபயோகித்த சுரங்களின் நுட்பத்தையும் பின்வரும் வாக்கியங்களில் அறியலாம். The Indian Empire, by W.W.Hunter, P. 110-111. "Hindu music, after a period of excessive elaboration sank under the Mahomedans into a state of arrested development. Of the 36 chief musicians in the time of Akbar, only 5 were Hindus, Not content with tones and semitones, the Indian musicians employ a more minute subdivision, together with a number of tonal modifications, which the Western ear neither recognises nor enjoys. Thus they divide the octave into 22 subtones instead of the 12 tones and semitones of the European scale. This is one of several fundamental differences, but it alone sufficies to render Indian music barbaric to us; giving it the effect of a Scotch ballad in a minor key, sung interntionally a little out of tune." "வெகுதூரம் விருத்தியடைந்திருந்த இந்திய சங்கீதமானது மகம்மதியர் அரசாண்டகாலத்தில் விருத்தி குன்றத் தொடங்கிற்று. அக்பர் காலத்தில் இருந்த 36 சிரேஷ்ட சங்கீத வித்வான்களுள் இந்தியர் ஐந்தே ஐந்துபேர்தான். முழு சுரங்களும் அரை சுரங்களும் போதுமென்றிராமல் இந்திய சங்கீதவித்வான்கள், கால், அரைக்கால் முதலிய நுட்பமான வித்தியாசமுள்ள சிறு சுரங்களையும் உபயோகிக்கிறார்கள். இந்த அணுப்பிரமாணமான சுரங்கள் ஐரோப்பியருக்குத் தெரிகிறதுமில்லை, அப்பேர்ப்பட்டசுரங்கள் ஏற்படும் ராகங்களில் அவர்கள் பிரியப்படுகிறதுமில்லை. ஐரோப்பிய சங்கீதத்தில் இருப்பதுபோல் ஒரு ஸ்தாயியை முழுதும் அரையுமாக 12 சுரங்களாய்ப் பிரிக்காமல், 22 சுரங்களாகப் பிரிக்கிறார்கள். இரண்டு சங்கீதத்திற்குமுள்ள அநேக வித்தியாசங்களில் இது ஒன்று. ஆனால் இந்த ஒரு காரணத்தினாலேயே இந்திய சங்கீதம் நம்முடைய காதுகளுக்கு அநாகரீகமுள்ளதாகத் தோன்றுகிறது. அது தாழ்ந்த சுரத்தில் (Minor key இல்) வேணுமென்று சுரம் கூட்டிக்குறைத்துப் பாடப்படுகிற Scotch ballad-ஐ ஒத்திருக்கிறதென்று சொல்லலாம்." இந்தியாவை மிகுந்த நேர்மையுடன் (1556 - 1605) சுமார் 50 வருஷங்கள் ஆண்டு கொண்டிருந்த, அக்பர் சக்கிரவர்த்தியின் சபையில் 36 சிரேஷ்ட சங்கீதவித்வான்களிருந்தார்கள் என்றும், அதில் இந்திய சங்கீத வித்வான்கள் ஐந்தே ஐந்துபேர்மாத்திரம் இருந்தார்களென்றும் தெரிகிறது. தஞ்சாவூர் சமஸ்தானத்தைச்சேர்ந்த அரியலூரில் இருந்த ஒரு ஜாகீர்தார் கச்சியுவரெங்கபூபதி என்பவர் தன் காலத்தில் 365 தேர்ந்த கர்நாடக சங்கீத வித்வான்களை வைத்து ஆதரித்தார் என்றும், அவர்களால் கச்சியுவரெங்கபூபதி என்ற முத்திரையுடன் அநேக வர்ணங்களும் கீர்த்தனைகளும் பாடப்பட்டிருக்கின்றனவென்றும் நாம் அறிகையில் வடதேசத்தில் இந்திய சங்கீத வித்வான்கள் எவ்வளவு சொற்பமாயிருந்தார்களென்று காண்போம். மேலும், அவர்கள் மிக நுட்பமான கால், அரைக்கால், முதலிய சுரங்களையும் சேர்த்து உபயோகப்படுத்திக் கொண்டு வந்தார்களென்றும் அறிகிறோம். கால் அரைக்கால் சுரங்களை இந்திய சங்கீத வித்வான்கள் உபயோகித்துக்கொண்டு வந்தார்கள் என்று சொன்னவர் ஒரு ஸ்தாயியில் 22 சுரங்களாகப் பிரிக்கிறார்கள் என்று சொல்லுகிறார். இது முன்னுக்குப்பின் ஒவ்வாதிருக்கிறது. ஏழு சுரங்களும் 22 சுரங்களாகப் பிரிந்தது என்றும், அவைகள் கால் அரைக்கால் என்ற அளவில் வரவில்லை யென்றும் இதின் பின் பார்ப்போம். 3, தென்னிந்திய சங்கீதம் வேறு, வடஇந்திய சங்கீதம் வேறு என்பதைப்பற்றி. இது வரையும் நாம் பார்த்தவைகளைக்கொண்டு, தென்னிந்தியாவில் நாரதல் அகஸ்தியர் முதலியவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட தென்னிந்திய சங்கீதமானது வடநாட்டிற்குச் சென்று சில சுரங்களைச் சேர்த்துக்கொண்டு தேசிகமாகி இந்துஸ்தானி சங்கீதம் என்ற பெயருடன் வடஇந்தியாவில் வழங்கி வந்ததென்று தெளிவாய்த்தெரிகிறது. மார்க்கம் என்ற தேவகானம் தென்னிந்தியாவிலும், இந்துஸ்தானியென்ற தேசிககானம் வடஇந்தியாவிலும் வழங்கிவருகின்றதென்று பின்வரு வசனங்களால் அறியலாம்.
|