உண்மையையே தெரிவிப்பவைகளென்றும் இதன் முன் சொல்லியிருக்கிறோம். நாலு பாலைகளிலிருந்துண்டாகும் 103 பண்களும் 12,000 ராகங்களும் இன்னவென்று விபரஞ்சொல்லும் தமிழ் நூல்கள் அழிந்தபின் அவற்றிக்கு இரண்டாவதான ஆயப்பாலையின் 12 சுரங்களையும் அவைகளால் உண்டாகும் 72 மேளங்களையும் ஒழுங்குபடுத்தி இவ்வளவாவது கர்நாடகசங்கீதத்திற்கு எழுதி வைத்தார்களேயென்று மிகவும் சந்தோஷப்படவேண்டியதா யிருக்கிறது. ஆனால் பூர்வமாய் வழங்கிவந்த ராகங்களின் பெயர்களையும் சில சங்கேதசொற்களையும் முற்றிலும் மாற்றி சமஸ்கிருத அட்சரங்களைக்கொண்டு லக்கங்கள் கண்டபிடிக்கும் பதங்களையும் சேர்த்து சுரங்களுக்கும் ராகங்களுக்கும் காரணப்பெரிட்டு ஜாதி வகுத்து சமஸ்கிருதத்திற்குரிய சில விசேஷ லட்சணங்களெல்லாம் அதோடு சேர்த்து எழுதியிருக்கிறார்கள். இந்தியாவின் பூர்வமாயுள்ள இடங்களுக்கும் பட்டணங்களுக்கும் ராஜர்களுக்கும் வெவ்வேறு புதிய சமஸ்கிருத பெயர்கள் கொடுத்து சமஸ்கிருதத்தில் வழங்குவதுபோல சங்கீதத்திலும் நூல் எழுதிவைத்தார்கள். பூர்வந்தொட்டு தென்னிந்தியாவின் கோயில்களில் நாளதுவரையும் சொல்லிக்கொண்டு வரும் தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி முதலிய தெய்வ ஸ்தோத்திரங்கள் ஓதுவாராலும் மற்றும் பக்தர்களாலும் சொல்லப்படுகிறதை நாம் கேட்டிருக்கிறோம். அவைகளில் இன்னின்ன ராகங்களில் பாடவேண்டுமென்று அப்புத்தகங்களில் குறிக்கப்பட்டிருக்கிறது. அம்முறைப்படியே நாளது வரையும் கானம் செய்துகொண்டு வருகிறார்களென்றும் தெரிகிறது. அப்படியிருந்தும் அதில் வழங்கிவந்த பண் இந்தளம், பண்காந்தாரம், பண் கொல்லி, பண் சீகாமரம், பண் தக்கேசி, பண் குறிஞ்சி, பண் நட்டபாடை, பண் குறுந்தொகை, பண் திருத்தாண்டகம் இவைபோன்ற பூர்வ பெயர்கள் சமஸ்கிருத நூல்களில் வழங்காதிருப்பதை பிரத்தியட்சமாய்ப் பார்க்கிறோம். ஆனால் பூர்வமாய் படிக்கப்பட்டு வந்த தேவாரங்களே நூதனமான சமஸ்கிருத பெயர்களினால் அழைக்கப்படும் ராகங்களாகப் பெயர்மாறி வழங்குகின்றனவென்று நாம் அறியவேண்டும். பெயர் மாற்றி வழங்குகிற இயல்பைப் பற்றி இதன் முன் மற்றவரால் கேட்டிருக்கிறோம். இவைகள் யாவற்றையுங்கொண்டு பூர்வ காலத்தில் வழங்கிவந்ததென்னிந்திய சங்கீத முறை பைதாகரஸ் (Pythagoras) போன்ற தத்துவ கிரேக்க சாஸ்திரியினால், 2/3,3/4 என்றும், பரதர், சங்கீத ரத்னாகரர் போன்ற சமஸ்கிருத சிரோமணிகளால் 22 என்றும், போசான்கே (Bosanquet) போன்றவர்களால் 56 என்றும், வேங்கடமகி, சங்கீதபாரிஜாதக்காரர் முதலியவர்களால் 12 என்றும் வெவ்வேறுவிதமான அபிப் பிராயங்களையுடையதாய் பல நூல்கள் எழுதப்பட்டன. 'இதுதான் யானை' யென்று சாதிப்பவர்கள்போல அவரவர்கள் நியாயங்கள் பல சொல்லி நூல்கள் எழுதினார்கள். இவ்வளவு சந்தேகப் பட்டகாலத்தில் தென்னிந்திய சங்கீதத்தை இவ்வளவு நுட்பமாய் விசாரித்ததானது இவருடைய பாண்டித்தியத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. உத்தர மதுரையில் பாண்டிய ராஜாங்கம் விழுந்தகாலத்தில் சோழர்களும் அதன்பின் தெலுங்கர்களான நாயக்க ராஜர்களும் பாண்டிய ராஜ்யத்தைச் சிலகாலம் ஆண்டுவந்தார்களென்று காண்கிறோம். அக்காலத்தில் அவ்விடத்திலிருந்து தாங்கள் அருமையாய் நினைத்த சங்கீதத்தையும் அதை அப்பியாசித்திருந்தவர்களையும் தங்கள் நாட்டுக்குக் கொண்டுபோய் அதிகமாய் விருத்தி செய்தார்கள். இதினால் விஜயநகரமும் தஞ்சைநகரும் முக்கியமானதாக நாளது வரையும் விளங்குகின்றன. தமிழ்நாட்டின் கீதம் தமிழ் அரசர்களையும் தமிழ் தெய்வங்களையும் அண்டியே நாளதுவரையும் பிழைத்து வந்திருக்கிற தென்று அறிவாளிகள் அறிவார்கள். கர்நாடகசங்கீதத்தின் முதன்மையையும் அது கையாடப்பட்டுவந்த விதத்தையும் கண்டறிந்த Capt. Day கடவுளைத் தேஜசு சூழ்ந்திருப்பது போல தென்னிந்திய சங்கீதத்தையும் தேஜசு சூழ்ந்திருந்ததென்று சொல்லுகிறார். இம்மகானுடைய பெருமையை என்னென்று
|