பக்கம் எண் :

145
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

VI. தென்னிந்திய சங்கீத்தை அப்பியாசித்து வந்தவர்களைப்பற்றிய சில குறிப்புகள்.

1. பொதுக்குறிப்புகள்.

சீர்பெற்றிலங்கிய தென்னிந்தியகண்டமே அதாவது குமரிநாடே லெமூரியாக்கண்டமென்றும் அந்நாட்டில் பேசப்பட்டுவந்தபாஷை தமிழ் என்றும் அங்கே அரசாட்சி செய்துவந்தோர் பாண்டிய ராஜர்களென்றும் அவர்கள் முதல் சங்கம் கூட்டி அறிவிற்சிறந்த ராஜர்களையும் தபோதனர்களையும் வித்வான்களையும் ஒன்று சேர்த்து பல கலைகளையும் ஆராய்ச்சி செய்து நூல் எழுதி வந்தார்களென்றும் இதன் முன் சுருக்கமாகப் பார்த்தோம். அவற்றுள் முத்தமிழில் ஒரு பாகமாக அப்பியாசிக்கப்பட்டுவந்த சங்கீதம் குமரிநாடு அழிந்தபின் பலவிதத்திலும் சீர்கெட்டு தனக்குரிய ஆதாரநூல்களையும் இழந்ததென்றும் அதன்பின் இடைச்சங்ககாலத்திலும் கடைச்சங்ககாலத்திலும் மீதியாயிருந்த சில சிறிய நூல்கள் எழுதப்பட்டும் சிலகாலம் நின்று பின் மறைந்துபோயினவென்றும் இதன் முன் பார்த்தோம். கடைச்சங்ககாலத்திலும் அதற்குப் பிற்காலத்திலும் தென்னிந்தியாவிற்கு வந்த பலராலும் தென்னிந்திய சங்கீதம் அப்பியாசிக்கப்பட்டதென்றும் அக்காலத்திலேயே வெவ்வேறு பாஷைகளில் எழுதப்பட்டதென்றும் நினைக்க ஏதுவிருக்கிறது. ஏனென்றால் பூர்வ தமிழ்நாட்டில் வழங்கிவந்தகானத்தில் வரும் 22 அலகுகள் என்ற வார்த்தையை இன்னதென்று அறிந்துகொள்ளாமல் 22 சுருதிகள் ஒரு ஸ்தாயியில் வரவேண்டுமென்று சந்தேகப்படும் நிலையில் மற்றப்பாஷையில் எழுதிவைத்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பழக்கத்திலிருக்கும் கானம் முறையையுடையதாகவும் 22 சுருதிகளுக்கு ஒவ்வாததாகவும் நாளது வரையுமிருந்து வருகிறது. மற்றபாஷைகளில் 400, 500, 1,000, 2,000 வருஷங்களுக்குமுன் எழுதப்பட்டதாகத் தாங்கள் சொல்லும் சில சூத்திரம் தன்னிலேயே தலைதூக்கி நிற்கத் தகுதியில்லாதிருந்தாலும் தலை தூக்கி நிற்கும் தென்னிந்திய சங்கீதத்தையும் தள்ளாடும்படியான சந்தேகத்துக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இச்சந்தேகமும் அன்னிய பாஷையில் எழுதப்பட்ட நூல்களை வாசித்தறியக்கூடியவர்களிடத்திலுண்டா கிறதே யொழிய கர்நாடக சங்கீதத்தைப் பரம்பரையாய்ப் பழகிவரும் தொன்றுதொட்டு தேவஸ்தானங்களினால் ஆதரிக்கப்பட்டவருமாகிய ஊழியக்காரருக்குள் அல்லது சங்கீதக்காரருக்குள் உண்டாகிறதில்லை. ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வருமானால் அவை தென்னிந்திய சங்கீதத்திற்கு ஒத்துவராதென்றும் வேதம் சொல்லும் சுரங்களுக்கு சரியாயிருக்கமாட்டாதென்றும் அது வழக்கத்துக்கு வராத ஒரு முறையென்றும் தென்னிந்தியகானம் 22 சுருதியின்படி யில்லையென்றும் சொல்லும் கனவான்களின் அபிப்பிராயத்தையும் இதன் முன் பார்த்திருக்கிறோம். 22 சுருதியென்று அறியாமலும் துவாவிம்சதி சுருதியென்ற பெயரையே கேட்காமலுமிருக்கிற அநேக வித்வான்கள் இன்று மிருக்கிறார்கள். மற்றும் சிலர் துவாவிம்சதி சுருதியென்ற சொல்லைக்கொண்டு தங்கள் அனுபோகத்திலிருக்கும் தென்னிந்திய சங்கீதத்தைப் பரீட்சித்துப் பார்த்து சொல்ல இயலாதவர்களாயிருக்கிறார்கள். இப்படி சுருதியைப்பற்றிய திட்டமான நூல் ஆதாரமில்லாதிருந்தாலும் பரம்பரையாய் சங்கீதத்தையே படித்து அதைச் சேர்ந்ததான வீணை, புல்லாங்குழல், நாகசுரம், மேளம், மிருதங்கம், பரதம் வாய்ப்பாட்டு முதலியவைகளில் தேர்ச்சி பெற்றுக் கோயில் தோன்றிய காலமுதல் கோயில் சம்பளத்தினாலேயே ஆதரிக்கப்பட்டுவரும் ஜனங்களால் தென்னிந்திய சங்கீதம் ஒருவாறு காப்பாற்றப்பட்டும் அவர்களால் அற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டும் வந்திருக்கிறது. தான் உண்டாக்கினதெல்லாம் நல்லதென்று கண்ட கர்த்தன் தன் சமுகத்தில் சகல பரிசுத்தவான்களும் தங்கள் தங்கள் வாத்தியங்களுடன் "கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்" என்று பாடவும் துதித்துக்கொண்டு ஆடவும் பார்த்து வீற்றிருக்கிறாரென்று சொல்லுவதை நாம் கவனிக்கையில் சங்கீதத்தின் தோற்றத்திற்கும் அதன் விருத்திக்கும்