தெய்வமே முதல்வரென்றுதெளிவாகத்தெரிகிறது. மேலும் உலகத்திலுள்ள பக்தர்களும் சகல ஜீவபிராணிகளுமான யாவற்றின் துதியையும் கர்த்தனே அடைகிறான் என்று சொல்வதைக் கொண்டு சங்கீதத்தின் பிரயோஜனமும் உயர்ந்ததென்று அறிகிறோம். தெய்வத்தால் உண்டாக்கப்பட்ட யாவும் தங்கள் தங்களுக்குரிய இன்னிசையால் பகவானைத் துதிக்கிறதாகக் காண்கிறோம்.. ஆகாயமண்டலத்தில் நாம் காணும் கிரகங்களும் வானஜோதிகளும் தங்களைத் தாங்களே சுற்றும் வேகத்தினால் இனிய நாதமுண்டாகிறது. அவைகள் பரிமாணத்தில் சிறிது பெரிதாயிருப்பதினால் வெவ்வேறு ஓசைகள் பிறக்கின்றன. பெரிய சிறகுடைய ஒலுங்குகள் பறக்கும்போது உண்டாகும் ஓசையைப்பார்க்கிலும் அதிக சிறிதான கொசுக்கள் பறக்கும்போதுண்டாகும் ஓசை உச்சமாயிருக்கிறதென்று நாம் அறிவோம். இதோடு மெதுவாய்ச் சுற்றும்பொழுது மந்தமான ஓசையும் அதிவிரைவாய்ச் சுற்றும்பொழுது உச்சமான ஓசையும் உண்டாகிறது. அப்படியே வானஜோதிகள் தாங்கள் சுற்றும்போது உண்டாகும் ஓசையினால் பகவானைத்துதிக்கின்றன. அதுபோலவே ஒவ்வொரு ஜீவர்களும் தங்கள் உத்தமமான ஜீவியத்தாலும் பத்தியாலும் கானத்தாலும் பகவானைத்துதிக்கிறார்கள். தாவரராசிகள் தங்கள் கனியின்மதுரத்தாலும் புஷ்பத்தின் வாசனையாலும் பலன்களின் நன்மையாலும் பகவானைத் துதித்து மற்றவர்கள் துதிக்க ஏவியும் வருகின்றன. சோலையில் வசிக்கும் பட்சிகள் பகவானைத்துதித்துப் பாடுவதை நாம் நன்றாய் அறிவோம். அப்படியே நவமணிகள் தங்கள் ஒளியினாலும் அருவிகள் தங்கள் ஓசையினாலும் ஆறுகள் தங்கள் ஒலியினாலு, கடல்கள் தங்கள் அலை இரைச்சலாலும் ஓயாமல் துதித்துக்கொண்டே யிருக்கின்றன. இப்படி தெய்வத்தைத் துதித்துக்கெண்டேயிருக்கும் உத்தமமான வழக்கம் ஜீவபிராணிகள் யாவருக்கும் இயற்கையாய் உரியது. அப்படியிருந்தாலும் விசேஷமாக சிலர்மாத்திரம் சங்கீதத்தை அப்பியாசித்து பிறர் ஆனந்திக்க கூடியதாகச் சொல்லத்தகுந்தவர்களா யிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்னகாலத்தி லிருந்தார்களென்று திட்டமாய்ச் சொல்லக்கூடாத சரித்திர முடையவர்களாயிருக்கிறார்கள். என்றாலும் ஒருவாறு அவர்கள் சங்கீதப்பயிற்சியையும் அவர்கள் பெருமையையும் பார்ப்பது நம்மை ஞாபகப்படுத்தும் ஒரு குறிப்பாயாவது இருக்குமென்று நம்புகிறேன். பாண்டிய ராஜ்யம் கடைச்சங்கம் அழிந்தபின் பலவிதத்திலும் சீர்கெட்டு சோழ ராஜாக்கள் சிலரால் ஜெயிக்கப்பட்டும் பின் சிலகாலம் தனி அரசு பெற்றும் மாறி மாறி சுமார் 2000 வருஷத்திற்கு முன்னிருந்தே குறைந்த நிலைக்கு வந்ததென்றும் இற்றைக்கு 700, 800 வருஷங்களாக முற்றிலும் அந்நியர் ஆளுகைக்குட்பட்டதென்றும் நாம் அறிவோம். 2. சோழ ராஜ்யத்தின் சங்கீத நிலை. கி. மு. 272-231 வரையும் அரசாண்டுகொண்டிருந்த வடதேசத்து புத்த சமயத்தரசனான அசோகனுடைய புத்திரனும் புத்திரியும் தென்னாட்டிற்கு வந்ததாகவும் சேரசோழ பாண்டிய ராஜாக்களுடன் உடன்படிக்கை செய்ததாகவும் கி. மு. 247-இல் சோழ ராஜ்யத்தார் இலங்கைக்குப் படையெடுத்துச்சென்றதாகவும் அதன்பின் கி. மு. 150-இல் மறுபடியும் படையெடுத்ததாகவும் இலங்கைச் சரித்திரத்தால் தெரிகிறது. அதன்பின் கி. பி. 50 முதல் 95-ம் வருஷம் வரையும் சோழராஜ்யத்திற்கரசனாயிருந்த முதலாவது கரிகால் சோழன் காவிரிப்பூம் பட்டினத்தைத் தலைநகராக்கிக்கொண்டு பிரபலமாக அரசாட்சி செய்து கொண்டிருந்தான். அவன் தன் ராஜ்யம் நீர்வளம் பொருந்தியதாயிருக்க வேண்டி பல அணைகளும் ஆற்றிற்குக் கரைகளும் கட்டுவித்தான். அநேக வாய்க்கால்களும் வெட்டினான், கடல்வளம் பெருக்கி கப்பல்கள், படகுகள் முதலிய நீரோடும் கலங்கள்
|