பக்கம் எண் :

147
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

செய்து சீனா, பர்மா, கிரேக்கு, ஜாவா முதலிய தேசத்தாரோடு வியாபாரம் செய்துவந்தான். கரைத்தொழில் கடற்றொழில் முதலியவைகளுக்கு வேண்டிய உதவிபுரிந்து தொழிலாளர்களை விருத்தி செய்தான். நீதி சாஸ்திரம், வேத சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், வான சாஸ்திரம், யுத்த சாஸ்திரம் ஆகிய ஐந்து சாஸ்திரமும் தெரிந்த பலரை ஒரு சபையாகச் சேர்த்து அவர்கள் யோசனைகேட்டு அரசாட்சி நடத்திவந்தான். அவன் காலத்தில் தமிழ்ப் பாஷையும் அதன் சிறந்த கலைகளும் மிகவும் விருத்தியடைந்தன. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் தேர்ந்த புலவர்களையும் தமிழ்ப்புலமையிற் சிறந்த பெண்மணிகளையும் மிகவும் ஆதரித்துவந்தான். முதலாவது கரிகால் சோழனாகிய இவன் காலத்தில் சேர ராஜ்யத்தில் சேரன் செங்குட்டுவன் அரசாட்சி செய்துகொண்டிருந்தான். இவன் தம்பி இளங்கோவடிகள் துறவியாய் தவசுபண்ணிக்கொண்டிருந்தார். பாண்டிய ராஜ்யத்தில் நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன் மதுரையில் அரசாண்டு கொண்டிருந்தான். வெள்ளி அம்பலத்துத்துஞ்சிய பெருவழுதி என்னும் பாண்டியனும் இவன்காலத்திலிருந்ததாகத் தெரிகிறது. அதோடு காவிரி நதியின் சங்கமுகத்திலுள்ள காவிரிப்பூம் பட்டினத்தில் மாசாத்துவான் என்னும் வணிகன் மகன் கோவலன் அந்நகரிலுள்ள மாதவி என்னும் நடன கன்னிகையை அவள் ஆடல் பாடல்களால் நேசித்து தன் பொருளெல்லாம் இழந்தபின் மதுரைமா நகருக்குச் சென்று மீந்த பொருளாகிய சிலம்பை விற்கும் சமயம் அது அரண்மனைச் சிலம்பென்று அவ்விடத்துள்ள பொற்கொல்லன் பாண்டியன் சமுகம் தெரிவிக்க பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலைனைக் கொல்லும்படி ஆக்கினை செய்தான். அச்சமயத்தில் கோவலன் மனைவி கண்ணகி என்பவள் ராஜ சமுகம் சென்று சிலம்பு திருடிய சிலம்பல்ல தன் சிலம்பென்று ருசுபடுத்தியவுடன் பாண்டியன் நெடுஞ்செழியன் தீர விசாரிக்காமல் இக்காரியம் செய்தோமென்று சிம்மாசனத்திலிருந்து திடீரென விழுந்து இறந்தான். இச்சம்பவத்தில் கூடிய ஜனங்கள் கோவலனை பொய்யாய்க் குற்றஞ்சாட்டிக் கொல்லுவித்த பொற்கொல்லர் வீதிக்கு அழுது சென்ற கண்ணகியுடன் சென்றார்கள். அவ்வீதி முற்றிலும் நெருப்பால் அழிந்தது. இச்சம்பவம் கரிகால் சோழன் காலத்தில் நடந்ததாகத் தெரிகிறது. தமிழ் நாடுகள் மூன்றில் ஒன்றான சோழநாட்டில் வீணை வாசித்தலின் திறமை காணப்படுகிறது. சேரநாட்டில் இளங்கோவடிகளால் வீணையின் விபரம் சொல்லப்படுகிறது. இவ்விரண்டும் பாண்டிய ராஜ்யத்தில் விஸ்தாரமாயிருந்ததென்றும் இதன்முன் பார்த்திருக்கிறோம். இம்மூன்று ராஜ்யங்களிலும் முதன்மை பெற்றிருந்த பாண்டிய ராஜ்யம் அழிந்தபின் அதைக் கைப்பற்றிய சோழராஜாங்கத்தின் ஆதரவின்கீழ் சங்கீதமும் மற்றும் கலைகளும் விருத்தியாகிவந்தன. பூர்வத்திலுள்ள ராஜர்கள் ஒரு ராஜ்யத்தை ஜெயிக்கும் பொழுது அவ்விடத்திலுள்ள பொருள்களைப் பெரிதாய் எண்ணாமல் சங்கீத வித்வான்களையும் மற்றும் கலை வல்லோரையும் சிறைபிடித்துப் போனார்களென்றும் தங்கள் நாட்டில் அவர்களை வைத்து ஆதரித்து கல்வி விருத்தி செய்தார்களென்றும் இதன்முன் அடிக்கடி பார்த்திருக்கிறோம். அதுபோலவே கரிகால் சோழனும் பலவகையிலும் தன் நாட்டைக் கல்விப் பொருளாலும் செல்வப் பொருளாலும் வளப்படுத்தினான். இவனைப்பற்றி அக்காலத்திருந்த உருத்திரங் கண்ணனார் எழுதிய பட்டினப்பாலையிலும் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்திலும் மற்றும் விபரம் யாவும் விரிவாகக்காணலம்.

இதன்பின் இவன் மகன் நலங்கிள்ளி என்னும் சோழன் கி. பி. 95 முதல் 105 வரையும் அரசாண்டான்.