1475-ம் வருஷமுதல் 1500-ம் வருஷம் வரை விஜயநகரமந்திரிகளாகிய சாளுவ ராஜாக்களால் சோழ ராஜ்யம் ஆளப்பட்டு வந்திருக்கிறது. 1517 முதல் 1518 வரையும் கிருஷ்ணதேவராயர் இருந்ததாக சாசனங்களால்தெரிகிறது. 1532-ல் அச்சுததேவர் பாண்டியனை ஜெயித்து தாம்பரபரணியின் கரையில் ஒரு ஸ்தம்பம் நாட்டினார். 1537-ல் தஞ்சை நாகை, கர்நாடகக் கரை இவைகளை ஜெயித்து விஜயநகர ராஜ்யத்திற்கு சொந்தமாக்கினார். 1539-ல் இவர் தான சாசனம் கொடுத்திருக்கிறார். இந்த அச்சுத தேவருக்கு மந்திரியாயிருந்த சேவப்பநாயக்கர் 1549 முதல் 1572 வரையும் சோழ ராஜ்யத்தையாண்டு வந்தார். அச்சுதப்பநாயக்கர் 1572-1614 வரைக்கும் அரசாட்சி செய்தார்.இவர் காலத்தில் இவருக்கு மந்திரியாயிருந்த கோவிந்ததீக்ஷதருடைய பிள்ளை வேங்கடமகி என்பவர் ஆயப்பாலையில் வரும் பன்னிரு சுரங்களையும் அவைகள் சுருதி மாறும்போதுண்டாகும் 72 மேளக்கர்த்தாவையும் செய்தாரென்று சொல்லப்படுகிறது. இதன் விபரம் பின் பார்ப்போம். ரெகுநாதநாயக்கர் 1614-முதல் ஆண்டாரென்றும் அவர் பின்விஜயராகவநாயக்கர் ராஜ்ய பாரஞ்செய்து 1673-ல் மரணமடைந்தா ரென்றும் சொல்லப்படுகிறது. இவருக்குப்பின் மகராஷ்டிர ராஜ்யத்தில் ராஜனாயிருந்தஷாஜிக்கு சிவாஜி என்றும் வெங்காஜி யென்றும் இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் மூத்தவன் மகராஷ்டிர ராஜ்யத்திற்கு அதிபதியானான். அவன் தம்பியாகிய வெங்காஜி ஒரு சிறிய துணைப்படையுடன் படையெடுத்துவந்து தஞ்சாவூரை மிக சுலபமாக தன் வசப்படுத்திக்கொண்டார். இவருக்கு எக்கோஜியென்று மறுபெயரும் வழங்கும். இவர் காலமுதல் சோழராஜ்யம் மகராஷ்டிர ராஜாக்களால் ஆளப்பட்டுவந்தது. இவர் 1674-1687 வரையும் அரசாண்டார். இவர் மகன் ஷாஜி 1687-1711 வரையும் ஆண்டார். இவர்சகோதரர் சரபோஜி I 1711-1727 வருஷம் வரையும் ஆண்டுகொண்டிருந்தார். இவர் பின் இவர் சகோதரர் துக்கோஜி 1728-1735 வரையும்ஆளுகை செய்தார். துக்கோஜி இறந்தபின் அவர் பிள்ளைகள் மூவரில் முதல்வரான பாவா சாகிப் ஒருவருஷமும் அவர் மனைவி இரண்டுவருஷமும் ஆண்டார்கள். அவர்களுக்குப்பின் இரண்டாவது குமாரனான சாயாஜி 1740வரை இரண்டு வருஷம் ஆண்டார். மூன்றாங்குமாரனான பிரதாபசிங் 1740-1763 வரையும் அரசாட்சிசெய்தார். இதன் பின் 1763 முதல் 1787 வரையும் துளஜாஜிமகராஜாஅரசாட்சி செய்து கொண்டிருந்தார். இவர் காலத்தில் சங்கீத வித்தை பழையபடி கவனத்திற்கு வந்தது. இவர் பல இடங்களிலிருந்தும் வித்வான்களை வரவழைத்து அப்போதைக்கப்போது சபை நடத்தினதாகத் தெரிகிறது. இவரும் இவர் பட்டமகிஷியும் சங்கீதத்திலும் மற்றும் கலைகளிலும் மிகப் பாண்டித்தியமுடையவர்களா யிருந்தார்கள். திருநெல்வேலியில் செந்தில்வேல அண்ணாவி பரதத்திலும் பாட்டிலும் வீணை வாசிப்பதிலும் மிகுந்த பாண்டித்திய முடையவரென்று கேள்விப்பட்டு பல்லக்கனுப்ப செந்தில் வேலவன் விருத்தாப்பியத்தினால் வர இயலாமல் தன் மகன் மகாதேவனை அனுப்பி வைத்தார். அவன் தஞ்சை வந்தபின் சங்கீதம் மிகவும் நல்ல நிலைக்கு வந்ததென்று நாளது வரையும் சொல்லப்படுகிறது. இவர் பின் இவர் மகன் சரபோஜி சிறுவயதாயிருந்ததினால்துளஜாஜி மகாராஜாவின் தம்பி அமரசிங் பட்டத்துக்கு வந்தார். இவர் 1787-1798 வருஷம் வரை ஆண்டுகொண்டிருந்தார்.
|