இவர் பின் சரபோஜி II மகாராஜா 1798-1824 வரையும்ஆண்டுகொண்டிருந்தார். இவருக்குப் பின் இவர் புத்திரனான சிவாஜி 1824 முதல் 1856வரையும் ஆண்டு கொண்டிருந்தார். இவர்க்குப் பின் நாதனற்றுப்போன சோழராஜ்யம், கல்வி, கைத்தொழில், சுகாதாரம் முதலிய நன்மைகளை விருத்தி செய்து வரும் காருண்ட ஆங்கிலேய அரசாட்சிக்குட்பட்டது. துளஜாஜி மகாராஜாவின் காலத்திலிருந்தே சங்கீத வித்வான்கள் சோழமண்டலத்தில் அதிகமானார்கள் என்று சொல்லவேண்டும். ஏனென்றால் துளஜாஜி மகாராஜா தன் நாட்டின் அதிக செழிப்புள்ள இடங்களில் சங்கீத வித்வான்களுக்கு மானியம் கொடுத்து குடியிருப்பு இடமும் கொடுத்து மிக மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறார். அவர் கொடுத்த மானியங்களில் சில நாளது வரையும் அப் பரம்பரையாரால் அனுபவிக்கப்பட்டு வருகிறது. மகாதேவன் அண்ணாவியினால் சங்கீதம், சங்கீதத்தின் நயமான அம்சங்கள் தஞ்சாவூரில் விருதியான தென்றும் தோன்றுகிறது. அவன் வம்ச பரம்பரையாரும் அவன் சிஷ்ய பரம்பரையாரும் சோழமண்டலத்திலும் மற்றும் தமிழ் நாட்டிலும் பரவியிருக்கக் காண்கிறோம். சோழராஜ்யத்தை முதல் முதல் சோழராஜாக்களும் பின் விஜய நகரத்தாரும் அதன்பின், நாயக்க ராஜாக்களும் பின் மகாராஷ்டிர ராஜாக்களும் ஆண்டுகொண்டு வந்திருக்கிறதாக இதன்முதன் பார்த்தோம். இதில் கி. மு. 200, 300-வருஷங்களுக்குமுன் சேரசோழ பாண்டிய ராஜர்களிருந்ததாகவும் அவர்களோடு அசோகனுடைய குமாரனும் குமாரத்தியும் உடன்படிக்கை செய்ததாகவும் காண்கிறோம். ஆனால் இதற்கு வெகுகாலத்திற்கு முன்னாலேயே சேரசோழபாண்டிய ராஜ்யங்களிருந்ததாக பரம்பரையாயும் புராணங்கள் இதிகாசங்கள் மூலமாயும் அறிவோம். அவைகளில் ராஜ்யம் மிக பூர்வீகமான சரித்திரத்தையுடையதென்றும் அதினாலேயே பாண்டியர்களுக்கு பழையர் என்று பெயர் வந்திருக்கலாமென்றும் எண்ண இடமிருக்கிறது. பாண்டிய ராஜ்யத்தின் முதல்ராஜதானியாகிய தென் மதுரையையும் அதிலிருந்த தமிழ்ச்சங்கத்தையும் அதனை ஆண்டுகொண்டுவந்த ராஜாக்களையும் தமிழ்ப்பாஷையையும் பற்றி இதன்முன் சுருக்கமாய்ப் பார்த்திருக்கிறோம். அக்காலம்தொட்டு இந்நாள் வரையும் பேச்சுவழக்கத்தோடும் நூல் வழக்கத்தோடும் சிறந்துவிளங்கும் தமிழ்பாஷையின் அனேகவார்த்தைகள் உலகத்திலுள்ள பல பாஷைகளோடு கலந்திருப்பதையும் இதன்முன் கவனித்தோம். பூர்வம் பாண்டியராஜாக்களின் செல்வாக்கும் செயலும் வரவரக்குறைந்ததென்றும் அப்படியே அவர்கள்பேசிவந்த தமிழ்ப் பாஷையின் அநேக சிறந்தவார்த்தைகள் வரவர வழக்கத்திலில்லாமல் குறைந்ததென்றும் கடைச் சங்ககாலத்திற்குப்பின் அந்நியராஜர்கள்வர அந்நியபாஷைகளும் அதோடு ஏராளமாகக் கலந்ததென்றும் அதன் நிமித்தம் பலசந்தேகங்களுண்டாவதற்கு காரணமாயிற்றென்றும் இதன்முதன் பார்த்தோம். கிறிஸ்துவுக்கு அநேக ஆயிர வருஷங்களுக்கு முன்னிருந்தே பாண்டியராஜ்யம் மிகவும் உன்னதமான நிலையிலிருந்து வந்திருக்கிறது. அதன்பின் சோழராஜர்கள்பலத்து மற்ற ராஜ்யங்களோடும் பாண்டியராஜாக்களோடும் சண்டைசெய்து ஜெயித்துவந்திருக்கிறார்கள் என்கிறதாகப்பார்க்கிறோம். ஊழிகாலத்தின் மாறுதல்களால் இராஜதானி இடம்மாறினாலும் பெயர் மாறாமல் கடைசிவரையும் மதுரையில் பாண்டியராஜாக்கள் ஆண்டுவந்திருக்கிறார்கள். ஆனால் ஊழியில்லாதிருந்தும் சோழராஜ்யத்தார் ஒரு இடத்தில் நிலைத்திராமல் உறையூர், காவிரிப்பூம்பட்டினம், காஞ்சிபுரம், தஞ்சாவூர் முதலிய பல இடங்களை ஒன்றன்பின் ஒன்றாய் தலைநகராகக்கொண்டார் களென்று தெரிகிறது. மேலும் மதுரையைத்தவிர சென்னைராஜதானி முற்றிலும் ஆண்டு
|