பக்கம் எண் :

153
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

வந்தார்களென்றும் தெரிகிறது. சோழராஜ்யம் பாண்டிய ராஜ்யத்தைப்போல ஒரே குலத்தவராலல்லாமல் அப்போதைக்கப்போது வெவ்வேறுகுலத்தவரால் சிலசிலகாலம் ஆண்டுவரப்பட்டது. பூர்வம் சோழராஜ்யத்தை ஆண்டுகொண்டு வந்தவம்சத்தவர்கள் நாளதுவரையும் சோழர், சோழதேவர், சோழங்கத்தேவர், விஜயர், விஜயதேவர், முடிகொண்டான் என்றபெயர்களுடன் ஜமீன்தாராகவும் சிலர் பெருத்த சமுசாரிகளாகவும் பலர் மிக ஏழைகளாகவு மிருக்கிறார்களென்பதை சோழநாட்டில் காண்போம். பூர்வ சோழராஜாக்கள் அடிக்கடி பாண்டியராஜ்யத்தை ஜெயித்து சொந்தப்படுத்திக்கொண்ட காலத்தில் பாண்டியராஜவம்சத்தவர் ஆண்டுகொண்டிருந்த பல சிறுகோட்டைகளையும் ஊர்களையும் தாங்கள் பிடித்துக்கொண்டு பாண்டியராஜ்யத்திலும் பரவினார்களென்று தோன்றுகிறது. இவர்களும் ஒருவருக்கொருவர் பொறாமையினால் ஒற்றுமை இழந்து குறைந்தநிலைக்கு வந்தார்கள். சேரராஜ்யம்ஒன்றுமாத்திரம் இவ்வாபத்துகளுக்கெல்லாம் தப்பி முன்போலவே ஆண்டுவந்தராஜாக்களில் கரிகால்சோழனையே முதல்வனாகச் சொல்லவேண்டும். அவன்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் பரதத்திலும் வீணைவாசிப்பதிலும் மிகத்தேர்ந்தமாதவியும் வீணைவாசிப்பதில் கைதேர்ந்த கோவலனும் இருந்தார்கள். இவர்களின் வீணைவாசிப்பைப் பற்றி சேரநாட்டிலுள்ள சேரன்செட்குட்டுவன் தம்பி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சுருக்கமாகச் சொல்லுகிறார். அதைக்கொண்டு கரிகால்சோழன் காலத்திலேயே தமிழ்நாடுகளில் வீணை வாத்தியமும் பரதநாட்டியமும் பூர்ணநிலையிலிருந்ததென்று தெரிகிறது. அவர்கள் காலத்திலேயே ஷட்ஜம பஞ்சம முறையாய்வரும் பன்னிருசுரங்களும் ஆயப்பாலைமுறையில் வருகிறதாகக்காண்கிறோம். அப்படி வழங்கிவந்த முறை தற்காலத்தவருக்குத் தெரியாமையினால் பூர்வமுள்ள வீணைகளில் நிலையானமெட்டுகள் வைக்கப்படவில்லையென்றும் நகட்டி இராகத்துக்குத் தகுந்தவிதம் வைத்துக்கொள்ளும்வீணை யிருந்ததென்றும் நேற்றையுள்ள சேவப்பநாயக்கருக்காக ஆங்கிலேயர் சுரங்களுக்கு ஏற்ற விதமாய் நிலைவரமான மெட்டுகள் போடப்பட்டதென்றும் சொல்லுகிறவர்களுமுண்டு. இதிலும் நுட்பமான சுருதிகள் வழங்கும் வேறுசில முறைகளும் அவர் காலத்திலிருந்தது. அவ்விபரம் இதன்பின் பார்ப்போம்.

கிறிஸ்துபிறந்து 50-95 வரையும் இக்கரிகாலன் இருந்தார். இவர் பல வித்வான்களையும், தொழிலாளர்களையும் பல இடங்களிலிருந்து வரவழைத்து காவிரிப் பூம்பட்டினத்தில் குடியேற்றினதாகவும் இதன் முன் பார்த்தோம். இவர்க்குப் பின் சோழ ராஜ்யத்தில் விளங்கிய கோச்செங்கண்ணான் 70-கு மேற்பட்ட சிவாலயங்களையும் விஷ்ணு ஆலயங்களையும் கட்டினதாகக் காண்கிறோம். இவர்காலம் சுமார் கி. பி. 600 ஆக இருக்கலாமென்று சந்தேகிக்கக் கூடியதாயிருக்கிறது.

விஜயாலயர் காஞ்சிபுரத்திலிருந்து 840-ல் தஞ்சாவூரை ஜெயித்தாரென்றும் பரகேசரி வர்மன் என்ற முதல் பராந்தகர் என்பவர் 907-ல் பட்டத்துக்கு வந்து சிதம்பரம் ஆலயத்தில் தங்க ஓடுகள் போட்டிருக்கிறாரென்றும் அறிகிறோம்.

ராஜராஜன் என்னும் சோழராஜன் 985-ல் பட்டத்துக்கு வந்தார். சிறு பிராயத்தில் இவருக்கு அருமொழித்தேவன் என்றும் அதன் பின் மும்முடிச் சோழனென்றும் பெயர் வழங்கி வந்தது. இவர் காலத்தில் சோழராஜ்யம் மிக உன்னத நிலையை யடைந்திருக்கிறது. இவர் அரசாட்சியின் காலத்தில் தஞ்சை பெரியகோயில் கட்டப்பட்டதாகத் தோன்றுகிறது. கோயிலின் சுற்றுச் சுவர்களில் இவரால் வெட்டுவிக்கப்பட்ட அநேக தானசாசனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் இவராலும் இவர் குடும்பத்தாராலும் கொடுக்கப்பட்டதென்று சாசனங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. அதோடு இவர்காலத்திலும் கோயில்களிலும் சங்கீத முறை நடத்தும் விபரங்களையும்