ஒரு சாசனத்தில் காணலாம். இவர் காலத்தில் பல இடங்களிலுமிருந்து சங்கீதத்தில் தேர்ந்தவர்களை வரவழைத்து மனை, மானியம், உம்பளம் சம்பளம் கொடுத்து வெகு பெயரை ஆதரித்து வந்ததாகப் பார்க்கிறோம். அதுமுதல் சங்கீதம் தஞ்சைமாநகரில் பிரபல விருத்திக்கு வந்திருக்கலாமென்று தோன்றுகிறது. இவர்க்கு வெகு காலத்திற்குப் பின் இவருடைய பேரன் மகள் பிள்ளை) முதல் குலோத்துங்கச் சோழன் பட்டத்துக்கு வந்தார். இவர் காலத்தில் நிலங்களின் அளவு கணக்கு ஏற்படுத்தப்பட்டது. அளவு கோலுக்கு ஸ்ரீபாதமென்றுபெயர். ஒரு வேலி நிலத்தில் ஒரு சதுர அங்குலத்தையும் விடாமல் குளிக்கக் கூடிய நுட்பமான அளவு இவரால் ஏற்படுத்தப்பட்டது. இவர் காலத்தில் கவிச்சக்கிரவர்த்தி ஜெயங்கொண்டானிருந்ததாகத் தெரிகிறது. இரண்டாவது குலோத்துங்கன் காலத்தில் அதாவது 1135-1150 வரையிலும் ஒட்டக்கூத்தனும் அவர்காலத்துக்குப்பின் 1164-ல் பட்டத்துக்கு வந்தராஜாதிராஜன் காலத்தில் சங்கிலர், கம்பன், ஒட்டக்கூத்தன், புகழேந்தி, அடியார்க்கு நல்லார் முதலிய வர்களிருந்ததாகத் தெரிகிறது. அதன் பின் 1572-ம் வருஷத்தில் சோழராஜ்யத்திற்கு நாயக்கராஜர்களில் இரண்டாவது அரசனாய் வந்த அச்சுதப்பநாயக்கர் காலத்தில் அவருக்கு மந்திரியாயிருந்த கோவிந்ததீக்ஷதர் அவர்கள் குமாரன் வேங்கடமகியிருந்தார். இவர் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவந்த பனனிரு சுரங்களையும் வைத்துக்கொண்டு அவைகளிலிருந்து 72 மேளக்கர்த்தாசெய்து அதற்கு கீதமும் லக்ஷண சாகித்தியமும் செய்தார். ஒவ்வொரு கர்த்தாராகங்களிலும் இன்னின்ன ஜன்னிய ராகங்கள் வரலாமென்றும் குறித்தார். தென்னிந்திய சங்கீதத்தில் நுட்பமான சுருதிகளோடு வழங்கும் ராகங்கள் இன்னின்ன மேளக்கர்த்தாவிலடங்குமென்று அவர் குறித்திருந்தாலும் நுட்பமான சுருதிகள் சொல்லப்படவில்லை. அதனால் தற்காலத்துள்ளவர் அதையும் கெடுத்து இந்துஸ்தானி போல ஒன்றாக்க நினைக்கிறார்கள். அச்சுதப்பநாயக்கர் தஞ்சாவூரை ஆண்டு கொண்டிருந்தகாலத்தில் சங்கீதம் கவனிக்கப்பட்டு வந்ததென்று தெளிவாக இதனால் அறிகிறோம். இதன்று வெகு காலத்திற்குப்பின் 1763-ல் சோழராஜ்யத்திற்கு ராஜனான துளஜாஜி மகாராஜா என்னும் மகாராஷ்டிர அரசன் காலத்தில் சங்கீதம் மிகவும் விருத்தியானதென்று சொல்ல இடந்தருகிறது. இவர் காலத்தில் பூர்வ சங்கீத முறைகளில் சிறந்த வீணை, வாய்ப்பாட்டு, பரதம், அபிநயம், புல்லாங்குழல் முதலியவைகளை விருத்திசெய்தாரென்று தோன்றுகிறது. இவர் காலத்திலிருந்த சங்கீத வித்வான்கள் இன்னின்னார் என்பதையும் இதன் பின் பார்ப்போம். சோழராஜ்யத்தில் சங்கீதம் விருத்தியாகியிருந்ததென்று சொல்வதற்கு ஏற்றவிதமாய் ராஜராஜன் என்னும் சோழன் சுமார் 1000-வருஷங்களுக்குமுன் தஞ்சை பெரியகோயில் சுவர்களில் எழுதிவைத்த ஒரு சாசனத்தை இங்கே பார்ப்போமானால் அதுவே சங்கீதம் சுமார் 1000 வருஷங்களுக்குமுன்பே விருத்தியான நிலைமையிலிருந்ததென்று காட்டும். அதில் சில முக்கிய குறிப்பைமாத்திரம் இங்கே எழுதுவது போதுமானதாகத் தோன்றினாலும் மிகப் பூர்வமும் முற்றிலும் சங்கீதக்காரரையே சொல்வதும் ஆகிய அச் சிலாசாசனத்தை உள்ளபடியே இங்கு காட்டுவது நலமென்று தோன்றுகிறது. இது "South Indian inscriptions Vol. II. pt. III"ல் சொல்லப்படுகிறது.
|