பக்கம் எண் :

231
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

செய்து புஸ்தகங்களாக வெளியிட்டிருக்கிறார்கள். இவர்கள் சங்கீத ஞானமும் சாகித்தியங்களின் பொருளும் சொற்சுவை பொருந்திய இனிய தமிழ் நடையும் தமிழ் மக்கள் கொண்டாடும்படி சிறந்ததாய் நாளது வரையும் விளங்கிக் கொண்டு வருகின்றன. தமிழ் நாட்டிலுள்ளோர் கேட்டும் உணர்ந்தும் உய்யுமாறு மேற்கண்ட கனவான்கள் செய்த அருமையான கருத்தடங்கிய கீர்த்தனங்கள் பாடுவதை விட்டு விட்டுப் பாடுகிற வித்துவ சிரோமணிகளுக்கும் கேட்கிற பிரபுக்களுக்கும், பொருள் விளங்காத கீர்த்தனங்கள் பல பாடப்படுகின்றன. தியாகராஜ ஐயர் போன்ற மகான்கள் செய்த பக்திரசமான கீர்த்தனைகளின் பொருளை முதல் முதல் தெரிவித்துப் பின் பாடுவார்களானால் அவற்றின் பொருள் விளங்கி ஆனந்திக்க இன்னும் அதிகமான இடமுண்டு. பொருளறியாது இனிய ஓசையை மாத்திரம் கேட்டு என்ன பயனடையப் போகிறார்கள். வெறும் காலப்போக்கூகுமேயொழிய வேறல்ல. தென்னிந்தியாவின் தமிழ் மக்கள் பொருளறிந்து நற்பயனடையும்படி தமிழ்க் கீர்த்தனங்களையும் தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி, தாயுமானவர் முதலிய பக்திரசமுள்ள பண்களையும் மிகுந்து கேட்கவும் அந்நிய பாஷையிலுள்ள கீர்த்தனங்களை மொழி பெயர்த்தபின் படிக்கும்படி செய்யவும் வேண்டுமென்று நான் மிகவும் விரும்புகிறேன். தெய்வ ஸ்தோத்திரங்களும் விண்ணப்பங்களும் அடங்கிய ஒரு கீர்த்தனையை அந்நிய பாஷையில் கேட்பதினால் மாத்திரம் சந்தோஷப்படுகிற ஒருவனைப் பார்க்கிலும் அதன் பொருளறிந்து உணர்வடைந்து ஆனந்திப்பவனே நன்மையாக தன் காலத்தை ஆதாயப்படுத்திக் கொண்டவனாவான். மணி ஒலியின் இன்னிசையால் மான் இறப்பதுபோல செவிக்கின்பம் மாத்திரம் தேடும் மக்கள் கதியும் இருக்குமே. கீதத்தில் நற்பொருளில்லாது போனால் அதை உயிரற்றதென்றே சொல்ல வேண்டும். அதைக் கேட்டு என்ன பயனடையப் போகிறார்கள். தெய்வத்தின் குணாதிசயங்களைச் சொல்லி ஆனந்திக்கும் ஒருவன் பண்களால் அதையே பாடும்பொழுது மிகுந்த உணர்ச்சியுடையவனாய் மனம் ஒடுங்கி தியான நிலைக்குவந்து திருவுரு வைத்தரிசிக்கும் மேன்பதமடைவான். அப்படியே பக்திரசமான பண்களைப் படிக்கக் கேட்கிறவர்களும் அப்பயனையே அடைவார்கள். பயனடையாது வெறும் இன்னிசையை மாத்திரம் கேட்குமவர் இராகத்தின் இனிமையை மாத்திரம் கேட்டுச் சீக்கிரம் மறந்து போவார்கள். தீய இயல்புடைய மனுடருக்கு தீமை நீங்கி நன்மை உண்டாக தெய்வபக்தி நிறைந்த கானம் அவசியம் வேண்டும். இயற்றமிழைக் கேட்டும் வாசித்தும் உணராத ஒருவன் இசைத் தமிழைக் கேட்கும்பொழுது எப்படியும் உணர்வடைவான். பொருளில்லாத வெறும் ஓசையை மாத்திரம் பாடும் ஒரு பிராமணனை பிராமண பந்தியிலிருந்து விலக்க வேண்டுமென்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்களே. ஒரு கீர்த்தனையின் அர்த்தம் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டால் சங்கீத வித்துவசிரோமணிகள் தாங்கள் அர்த்தம் தெரிந்து கொள்ளவும் அதைப் பிறருக்கு சுருக்கமாய்ச் சொல்லவும் மிகுந்த பிரியமுள்ளவர்களாயிருப்பார்களென்று நம்புகிறேன்.

7. கர்நாடக சங்கீதத்தை மிகவும் ஆதரித்துவந்தமகாராஜாக்களும், பிரபுக்களும்.

இவ்விடத்தில் சங்கீத வித்துவான்களை ஆதரித்தும் வீடு வாசல் கட்டிக் கொடுத்தும் நிலங்கொடுத்தும் நிலைவரமான சம்பளம் கொடுத்தும் காலா காலத்தில் அவர்களை உற்சாகப்படுத்த ஆடை ஆபரணங்கள் விருதுகள் கொடுத்தும் சங்கீதத்தை வளர்த்து வந்த மகாராஜாக்களையும் பிரபுக்களையும் மிகவும் கொண்டாட வேண்டியதாயிருக்கிறது.

தஞ்சாவூர் சமஸ்தானம் துளஜா மகாராஜா, பிரதாபசிங் மகாராஜா.

மலையாளம் குலசேகரப் பெருமாள் மகாராஜா, ஆயில்ய மகாராஜா.

இராமாநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதிகள்.