பக்கம் எண் :

233
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

திருப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால் பூர்வமென்று நாம் எண்ணும் புராணங்களிலும் கதைகளிலும் கந்தர்வர் யக்ஷர், கின்னரர், கிம்புருடர், நாகர், தும்புரு, நாரதர், ரம்பை, திலோத்தமை, ஊர்வசி, மேனகை முதலியவர்கள் ராஜசபைக்கு வந்தார்களென்றும் சங்கீதத்தை மற்றவர்கள் அறிய கச்சேரி செய்தார்களென்றும் நாம் பார்க்கிறோம். அதே காலத்தில் பிராமணர்கள் ஓமம் வளர்த்தார்களென்றும் வேதசுலோகம் சொன்னார்களென்றும் ஆசீர்வாதம் பண்ணினார்களென்றும் தானம் வாங்கினார்களென்றும் பிராமண போஜனம் நடந்ததென்றும் சொல்லப்படுகிறது. அந்தக் காலத்தில் ஒரு பிராமணர் ஆடினார் பாடினாரென்றும் நாகசுரம் வீணை வாசித்தாரென்றும் நடனமாடினாரென்றும் சொல்லப்படவில்லை. இதினாலும் காயகன், நடன், விடன் அதாவது ஆடுதல், பாடுதல், அபிநயித்தல் என்னும் மூன்று தொழில் செய்வோரை பிராமண பந்தியிலிருந்து விலக்க வேண்டுமென்று உபநிடதங்கள் சொல்வதாலும் இவர்கள் முற்றிலும் சங்கீதத்திற்கு உரியவர்களல்ல என்று தோன்றுகிறது. என்றாலும் பகவான் நாமத்தைச் சொல்லுகிறவர்களையும் அதைப் பிரஸ்தாபப்படுத்துகிறவர்களையும் ஒருவாறு நாம் ஒப்புக்கொள்ளக் கூடியதாயிருக்கிறது. மேற்கண்ட சங்கீத வித்துவசிரோமணிகள் யாவரும் கர்நாடக சங்கீதத்தையே படித்து வந்தார்களென்பதைச் சந்தேகமறச் சொல்லுவோம். ஆனால் கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னதென்று தெரிந்து நிச்சயம் பண்ணிக்கொண்டதாகத் தெரியவில்லை.

9. 72 மேளக்கர்த்தாவைப் பற்றிய சில குறிப்புகள்.

பூர்வமுதல் தமிழ் மக்களும் தமிழ் நாட்டில் குடியேறிய மற்றவரும் கர்நாடக சங்கீதத்தில் வழங்கும் பன்னிரு சுரங்களையும் அவைகளின் சேர்க்கை பேதத்தாலுண்டாகும் பல இராகங்களையும் தாய் இராகங்களாக வைத்துக்கொண்டு நாளது வரையும் அப்படியே வழங்கி வருகிறார்கள். இவர்களில் சிலர் சுருதி இன்னதென்று தெரிந்து கொள்ளாமல் சங்கீத ரத்னாகரர் சொல்லிய துவாவிம்சதி சுருதிகள் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வருகிறதென்று சில சூத்திரங்களைச் சொல்லி வாதித்தும் வருகிறார்கள். க்ஷேத்திரிஞ்ஞர், தியாகராஜ ஐயர் போன் மகான்கள் தாங்கள் இன்ன சுருதியை இன்ன இராகத்தில் வழங்குகிறோமென்று தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால் வேங்கடமகி, மகா வைத்தியநாதையர் போன்ற மகான்கள் 72 மேளக்கர்த்தாவிலும் கீதம், இராகமாலிகை செய்து வைத்திருக்கிறார்கள். இந்த 72 மேளக்கர்த்தா வேங்கடமகியினால் கண்டு பிடிக்கப்பட்டதென்றும் இதற்கு மேலாவது கீழாவது வேறொருவரும் கண்டுபிடிக்க முடியாதென்றும் தாம் எழுதிய சதுர்தண்டிப் பிரகாசிகையில் சொல்லுகிறார் என்று சின்னசாமி முதலியார் M. A. எழுதியிருக்கிறார். அது வருமாறு:-

உத்தரமேளம். 36

"1. (a) சாரங்கதேவர் உண்டு பண்ணிய சங்கீத ரத்னாகரத்தின் இராக விவேக அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கும் இராகப்பிரிவினைகள் வாடிக்கையில் இல்லையென்றும்.

(b) இராமாமாத்தியர் செய்த ஸ்வரமேள கலாநிதியில் சொல்லப்பட்டிருக்கும் பிரசித்த மேளங்களின் கணக்கு பிசகென்றும், அந்நாளையில் வழங்கினது 19 தான் என்றும்,

(c) பூர்வாங்கத்திலும், உத்தராங்கத்திலும் உள்ள ஆதி. அந்த ஸ்வரங்களை மாற்றமலும், விக்ரு திபேதங்களில் ஒன்றையும் விடாமலும் வரிசைக்கிரமமாய் மேளபிரஸ்தாரஞ் செய்தால் சுத்தமத்யமத்துடன் 36, பிரதிமத்யமத்துடன் 36, ஆக 72 மேளங்கள் தான் உண்டாகுமென்றும், வேங்கடமாகி சதுர்தண்டிப் பிரகாசிகையில் கண்டித்திருக்கிறார்.

2. இவைகளில் சிலதுகள் மாத்திரமே பிரசித்தமாயிருக்க. மற்றவை வியர்த்தமென்றும் பெருமைக்குச் செய்யப்பட்டனவென்றும் ஒருக்கால் யாராகிலும் ஆட்சேபிப்பதாயிருந்தால் அதற்கு வேங்கடமகி சொல்லும் சமாதானம் யாதெனில் :-