6. பரோடா திவான் மகா- - -ஸ்ரீ மாதவ ராவ் அவர்கள், C. I. E, சங்கத்தைப் பற்றிச் சொல்லும் அபிப்பிராயம். "வித்துவான்களே! கனவான்களே!-- சங்கீத வித்வ சிரோமணிகளால் நிறையப்பெற்ற இந்த ஸபையில் அக்கிராசனாதிபத்யம் வகிக்கும்படி என்னை இச்சங்கத்தார் கேட்டுக் கொண்டதை நான் ஒரு பெரும் கண்ணியமாகக் கொள்ளுகிறேன். கனம் பண்டிதரவர்களுக்கு அதற்காக நான் முக்கியமாய் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இங்கே வாசிக்கப்பட்ட உபந்நியாசங்களைக் கேட்டுக் கொண்டிருக்கையில் என் மனதில் சில எண்ணங்கள் உதித்தன. இவ்விதமான ஒரு சங்கம் ஏற்படுத்தி வித்துவான்கள் எல்லாரும் சேர்ந்திருந்து இந்திய சங்கீதத்தின் அம்சங்களை மற்றவர்களுக்குப் படித்துக் கொடுக்கும்படி பண்டிதரவர்கள் செய்திருக்கும் ஏற்பாட்டுக்காக ஜனங்கள் யாவரும் அவர்களுக்கு நன்றி செலுத்தும்படியாகக் கடமைப்பட்டிருக்கிறார்கள். எல்லாவித வித்தைகளுக்கும் உறைவிடமாயிருந்த இந்தத் தஞ்சை மாநகரில் மற்ற வித்தைகள் க்ஷீணித்துப் போனதைப் போலவே சங்கீத வித்தையும் க்ஷீணித்துப் போக ஆரம்பித்து விட்டது. அப்படியிருந்த சமயத்தில் இவ்வித சங்கம் ஒன்று ஏற்படுத்தி வித்துவான்களை ஆதரிக்கிற அவர்களுடைய செயலானது அந்த வித்தையைத் திரும்ப உயிர்ப்பிக்கும் என்பதற்குச் சந்தேகமில்லை. இந்திய சங்கீத ஆராய்ச்சியும் வித்துவத்துவமும் முற்காலத்தில் இராஜாக்களால் சம்ரக்ஷிக்கப்பட்டு வந்தன. அப்படி ராஜாக்களால் செய்யப்பட்டு வந்த வேலையானது இப்போது பண்டிதரவர்களால் செய்யப்பட்டு அவர்களே அதின் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டு நடத்திவரும் செயலை யார் தான் மெச்சிக் கொள்ளாதிருப்பார்? ஆனால் ஸங்கத்தின் அங்கத்தினரும் அதன் விர்த்தியை விரும்பும் மற்றவர்களும் தாங்களும் இனிமேல் இது விஷயத்தில் உதவி செய்வோம் என்று வாக்களித்திருப்பதும் மெச்சிக் கொள்ளப்படத் தக்கதே. இப்பேர்ப்பட்ட பெரும் வேலைகளில் பாரம் ஒருவர் மேல் மாத்திரம் விழாமல் பலரும் சேர்ந்து அதின் பாரத்தை தாங்குவதானது மிகவும் நல்ல காரியம். கால விசேஷத்தைக் கவனித்துப் பார்க்கும்போது, இப்பேர்ப்பட்ட சங்கங்கள் பலர் கூடிச் செய்ய வேண்டிய வேலையென்று தெளிவாய் விளங்கும். தற்கால அபிப்பிராயம் என்னவென்றால், வித்தைகளையும், தொழில்களையும் சம்ரக்ஷணை செய்வது துரைத்தனத்தாருடைய வேலையல்ல. ஜனங்களுடைய வேலையென்பதே. இதற்கிசைந்தே இந்த சங்கத்தின் வேலையும், நடக்கிறதாகத் தெரிகிறது. ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கமானது, இப்போது பலபேருடைய முயற்சியாலும் பிரயோஜனத்துக்கேற்ற விதமாய் நடத்திவரப்படுகிறது. நான் இன்னொரு காரியமும் கவனித்தேன். முதலாவது நாதமகிமையைப் பற்றி மகா- - -ஸ்ரீ P. V. கிருஷ்ணசாமி ஐயரவர்கள் பேசியபோது அதைப் பற்றி மிகவும் வியப்புற்றேன். அப்புறம் ஆங்கிலேய சங்கீதத்தைப் பற்றியும், அதற்கும் இந்திய சங்கீதத்துக்குமுள்ள வித்தியாசத்தைப் பற்றியும் மகா- - -ஸ்ரீ A. G. பிச்சைமுத்து அவர்கள் பேசினபோது இன்னும் அதிகமாய் பிரமையுற்றேன். எனக்கு இங்கிலீஷ் சங்கீதத்தைப் பற்றி வெகு தாழ்வான அபிப்பிராயம் இதுவரையிலும் இருந்தது. இப்போது அதில் இருக்கும் உயர்வை அறிந்து கொண்டேன். உபந்நியாசங்கள் எல்லாம் தமிழ்ப் பாஷையிலேயே இருந்ததைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன். ஜனங்களுடைய ஸ்வய பாஷையிலேயே அவர்களுக்கு வித்தைகளைச் சொல்லிக் கொடுப்பதானது மெச்சப்படத்தக்க காரியம். இந்த உபந்நியாசங்களையெல்லாம் இங்கிலீஷில் மொழி பெயர்த்து மாகாணங்கள் தோறும் பிரசுரித்தால் வெகு பிரயோஜனமாயிருக்கும். இவைகளில் முக்கியமாக மகா- - -ஸ்ரீ A. G. பிச்சைமுத்து அவர்கள் ஆங்கிலேய சங்கீதத்தைப் பற்றியும் இந்திய சங்கீதத்தைப் பற்றியும் பண்ணின உபந்நியாசத்தை இங்கிலீஷில் பிரசுரித்தால் அநேகருக்குப் பிரயோஜனமாயிருக்கும். அது அநேகருடைய கண்களைத் திறக்கும் என்பதற்குச் சந்தேகமில்லை. இப்பேர்ப்பட்ட வித்துவான்களை ஒன்று சேர்த்து ஒருவருடைய கொள்கை மற்றொருவருக்கு பிரயோசனமுண்டாகத் தெரியும்படி எளிதில் சொல்லும்படியாக இப்படி ஓர் சங்கத்தை ஏற்படுத்தினதற்காக மகா- - -ஸ்ரீ ராவ் சாஹேப் M. ஆபிரகாம் பண்டிதரவர்களுக்கு வந்தனம் சொல்லுகிறேன். பண்டிதரவர்கள் இது விஷயத்தில் மாத்திரமல்ல. தேசாபி விர்த்திக்கு வேண்டிய இன்னும் அநேக காரியங்களில் சிரத்தை எடுத்துக் கொள்ளுகிறார்கள் என்று நம்மெல்லோருக்கும் தெரியும். கடைசியாக, ஸங்கீத களஞ்சியம் என்று பேர் வாங்கின இத்தஞ்சை மாநகரில் சங்கீதமானது திரும்பவும் ஸ்தாபிக்கப்படவும் அதினால் இந்த சங்கம் நெடுநாள் நிலைத்திருந்து நல்ல பெயர் வாங்கவும் கடவுளை நோக்கிப் பிரார்த்திக்கிறேன்."
|