7. பாலக்காடு மாஜி சப் ஜட்ஜ் மகா- - -ஸ்ரீ இராமகிருஷ்ணையர் அவர்கள் B. A. B. L., ஐந்தாவது கான்பரென்ஸின் அக்கிராஸனாதிபதியாய்ச் சங்கத்தைப் பற்றிச் சொல்லும் அபிப்பிராயம். "கனவான்களே! இப்போது வாசிக்கப்பட்ட இரண்டு உபந்நியாசங்களும் யாவருக்கும் மிகவும் நன்மை பயக்கத்தக்கவைகளாயும், யாவருடைய மனதையும் கவரத்தக்க இனிமையுள்ளவைகளாயும் இருந்தன என்று நாம் யாவரும் ஒப்புக் கொள்வோம். இந்திய சங்கீத விஷயத்தில் மகா- - -ஸ்ரீ பண்டிதரவர்கள் எடுத்துக் கொண்ட பிரயாசைக்காக நாம் யாவரும் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும். இப்பேர்ப்பட்ட வேலையைத் தஞ்சாவூரில் ஆரம்பித்தது தகுதியே. ஏனென்றால் இந்நகரானது சங்கீதம் ஒருகால் கீர்த்தி பெற்றிருந்த இடமாய் மாத்திரமல்ல, தென்னிந்தியாவின் பேர்போன சங்கீத வித்துவான்கள் உற்பத்தியான இடமாயுமிருக்கிறது. மகா- - -ஸ்ரீ பண்டிதரவர்கள் ஆரம்பித்த இந்த வேலையானது துவக்கத்தில் மலையேறும் விஷயம்போல் கடினமாயிருந்த போதிலும், இப்படி காலா காலங்களில் வித்துவான்கள் ஒன்று கூடி இந்த வேலையை நடத்துவதானது அக்கடினத்தைச் சற்று நீக்கி நன்மை பயக்கக் கூடியதாயிருக்கும் என்பதற்குச் சந்தேகமேயில்லை. மகா- - -ஸ்ரீ பண்டிதரவர்கள் எதைக் கண்டும் மனஞ்சலித்துப் போகக் கூடாது. சங்கீதமானது சிறந்த கலைகளில் முதலாவதானது. சங்கீதம் இல்லாத ஜாதி கிடையாது. தெய்வத்தின் அம்சம் சங்கீதத்திற்கு இருப்பதால் ஒருவன் ஆத்மலாபம் அடைவதற்கு அது அவனைத் தூண்டுங் கருவியாயிருக்கிறது. இந்தியாவில் மற்ற கலைகள் சிறந்து விளங்கினது போலவே சங்கீதமும் வெகு உன்னத பதவியை அடைந்திருந்த காலம் உண்டு. சங்கீதத்தின் சிறப்பினால் மனித வாழ்க்கையில் ஏற்படும் அநேக விஷயங்களும் மேன்மையை அடைந்திருந்தன. வீட்டில் நடக்கும் சம்பவங்களிலும், கோவில்களிலும் மற்ற விசேஷங்களிலும் காணப்படும் சிறப்புக்கும் மேன்மைக்கும் காரணம் சங்கீதமே. ஆதி காலத்தில் சங்கீதத்தை விர்த்தி பண்ணுவது ராஜாக்களுடைய கடமையாயிருந்தது. இப்போதோ அது சாதாரண ஜனங்களுடைய வேலையாயிருப்பதால் யாவரும் அதற்காக உழைப்பது அவசியம்." 8. கும்பகோணம் சப்-ஜட்ஜ் மகா- - -ஸ்ரீ A. S. பாலசுப்பிரமணிய ஐயர் அவர்கள் B.A., B.L. 6-வது கான்பரென்ஸின் அக்கிராஸனாதிபதியாய்ச் சங்கத்தைப் பற்றிச் சொல்லும் அபிப்பிராயம். "இந்திய சங்கீதம் இந்து தேசத்திற்குப் பூர்வீகமாயுள்ளது. அந்த சாஸ்திரமானது இந்த தேசத்து ரிஷிகளுக்கு தேவர்களால் அனுக்கிரகம் பண்ணப்பட்டதென்று அறிவோம். சங்கீதமானது முதல் முதல் தேவர்களால் அப்பியாசிக்கப்பட்டதென்பது நடராஜருடைய ஆனந்தத் தாண்டவத்தால் நன்றாய்த் தெரிகிறது. தேவர்களுக்குள் கானம், தாளம், பாட்டோடு கூடிய கீர்த்தனமானது மிகுந்த குதூகலத்துடன் கொண்டாடப்பட்டு வந்ததென்பதும் இந்தியர்களின் வேதங்கள் சங்கீதத்தின் இரகசியத்தைக் கைப்பற்றியே சொல்லப்பட்டிருக்கிறதென்றும் மேல் கண்ட வேதங்களைப் பார்த்தவர்களுக்குத் தெளிவாய் விளங்கும். ரிக்வேதமானது ஏக சுரத்திலிருந்துண்டாகி மற்ற வேதங்களில் புகுந்து சுரப்பெருக்கத்தையடைந்ததென்றும் வேதபாராயணமே சங்கீத சாஸ்திரத்தை அநுசரித்ததென்றும் விளங்குகிறது. இவ்விதம் காதையென்பது இரண்டு சுரத்திலும் சாமமென்பது மூன்று சுரத்திலும் பாடப்படுகிறது. இம்மூன்று சுரத்திலிருந்து ஏழு சுரம் வரைக்கும் எப்படிக் கிடைத்ததென்பதைப் பற்றிப் பாணினி முனிவர் சவிஸ்தாரமாய் எழுதியிருக்கிறார். இப்படி வேதங்களிலிருந்து உற்பத்தியான இந்த சங்கீதம் தேவலோகத்தில் அப்பியாசிக்கப்பட்ட அளவில் சாகித்தியம் நடனம் முதலான அநேக சாஸ்திரங்கள் உண்டாவதற்கு இடமாயிற்று. அநேக சாஸ்திரங்களாக இவ்விதம் வியாபித்து விளங்கின இந்த சங்கீத சாஸ்திரம் காந்தர்வ வேதமென்கிற பெயர்பெற்று வழங்கியது. பக்தி சிரத்தையோடு இதை அப்பியாசம் பண்ணுகிறவர்களுக்குத் தான் சங்கீதத்தின் பெருமை தெரியும். சபேசர் நர்த்தனம் பண்ணும்போது மகா விஷ்ணு மத்தளம் போடவும் புல்லாங் குழல் ஊதவும் பிரம்மா தாளம் போடவும் கணேசர் சாலரிடவும் பிரபஞ்சமாயா லோகத்தின் சலனத்தை நடித்துக் காட்டியதுபோல முதல் முதல் தேவலோகத்தில் நடந்த சங்கீத வைபவத்தை நாரதர் தெரிந்து கொண்டு திரிலோகத்திலும் அதினுடைய பெருமையை வியாபித்து விளங்கும்படிச் செய்தார். இந்திரன் சபையில் கானம் நாட்டியம் நர்த்தனம் சாகித்தியம் பிரபல திசையையடைந்ததாகத் தெரிகிறது.
|