பக்கம் எண் :

286
சாரங்கதேவர் சுருதியைப்பற்றிச் சொல்லிய சூத்திரங்களில் சில குறிப்புகள்.

இந்திய சங்கீதத்திற்கு முகவுரையாக கிளமெண்ட்ஸ் அவர்களால் எழுதப்பட்ட புஸ்தகத்தின் 53-வது பக்கத்தில் சொல்லியிருக்கிறதாவது:- சங்கீத ரத்னாகரம் சுர அத்தியாயம் 3-வது பிரகரணம் 12-வது சுலோகமுதல் 16-வது சுலோகம் வரையில்.

"22 தந்திகள் போட்ட இரண்டு வீணை தயார் செய்துகொள். பின் வருகிறபடி அதைச் சுருதிசேர். முதல் தந்தி கூடியவரை தாழ்ந்த சத்தமாயிருக்கும்படி சுருதி சேர்த்துக்கொள். அடுத்தது அதற்குக் கொஞ்சம் கூடுதலான சுரமாயிருக்கட்டும். இப்படியே மற்ற 22 தந்திகளையும் சேர்த்துக் கொள். இதில் எந்த இரண்டு தந்திக்கு நடுமத்தியிலும் 3-வது சுரம் உண்டாகாதபடியிருக்கட்டும். இப்படி ஒன்றின்பின் ஒன்றான சுரங்கள் சுருதியென்றழைக்கப்படுகின்றன. இப்படிச் சேர்த்துக்கொண்டால் 4 சுருதிகளையுடைய ஷட்ஜமமானது 4-வது தந்தியில் நிற்கிறது. ரிஷபமானது 5-வது தந்தியிலிருந்து 3 சுருதிகளுடன் அமைகிறது. 2 சுருதிகளையுடைய காந்தாரம் 8, 9-வது தந்திகளில் வரும். மத்திமம் 4 சுருதிகளையுடையதாய் 10-வது தந்தி முதல் அமைகிறது. 4 சுருதிகளையுடைய பஞ்சமத்தை 14-வது தந்தி முதல் எண்ணிப் போட்டுக்கொள். 3 சுருதிகளையுடைய தைவதத்தை பஞ்சமத்திற்கு மேலாகப்போடு. 2 சுருதிகளையுடைய நிஷாதத்தை தைவதத்திற்குமேல் போடு. இப்படியானால் 22-வது இடத்தில் நிஷாதம் வருகிறது."

மேலே காட்டிய இரண்டு விதமான மொழிபெயர்ப்பும் ஒரே கருத்துடையவைகளா யிருக்கின்றனவென்று நான் நம்புகிறேன். ஆனால் இதை வெவ்வேறு விதமாக அர்த்தம் பண்ணிக் கொள்ளுகிறதினால் சுருதிகளுடைய நிச்சயமும் ஒன்றாயிராமல் பலவாயிருக்கிறது. இதோடு சங்கீத பாரிஜாதக்காரர் எழுதிய முறைப்படி செய்யும் சுருதிகளையும் மேற்றிசை சங்கீதத்தின் சுருதிகளையும் கர்நாடக சங்கீதத்தின் சுருதிகளையும் கலந்து துவாவிம்சதி சுருதிகள் என்ற சொல்லையும் விட்டுவிடாமல், தற்காலத்தில் வழங்கி வரும் சுருதிகளும் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமென்று நினைத்து பூர்வீகம் நவீனம் என்னும் இரு முறைகளையும் நிரவல் செய்து, இப்படி வழங்க வேண்டும் என்றும் இப்படித்தான் நம்முடைய கானம் இருக்க வேண்டும் என்றும் அநேக சுருதி முறைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வெவ்வேறு விதமான அபிப்பிராயங்களைப் பார்க்கிற எவருக்கும் இந்திய சங்கீதத்தின் பரிதாபமான நிலை தெரியாமல் போகாது. மகா பரிசுத்தமென்று வழங்குகிற ஜலம் எப்படி இந்தியாவில் கவனிக்கப்படாமல் போகிறதோ, அப்படியே இந்திய சங்கீதமும் நாளடைவில் கவனிக்கப்படாமல் மலினமடைந்தது. என்றாலும் பூர்வமுதல் மனனம் செய்து மனதில் காப்பாற்றும் மிக உத்தமமான முறையினால் அங்கங்கு சில அம்சங்கள் பேணப்பட்டு, பூர்வத்தை ஞாபகப்படுத்த விளங்கிக் கொண்டிருக்கின்றன. இவைகளைக் கொண்டு இப்படியிருக்க வேண்டுமென்று ருசுப்படுத்துவது இலகுவான காரியமாயில்லை. ஆயினும், இந்திய சங்கீதத்தின் சுருதிகளைப் பற்றி நானும் சில வார்த்தைகள் சொல்ல நினைக்கிறேன். ‘நான் சுருதிகளைப் பற்றிச் சொல்வது சரியாயிருக்கும், இந்திய சங்கீதங்களில் வழங்கி வரும் சுருதிகளின் விவகாரம் இதோடு முடிந்துவிடு’ மென்று இதன் முன் எழுதிய கனவான்கள் எண்ணியபடியே நானும் எண்ணிய எண்ணத்தை மன்னிக்கக் கேட்டுக் கொள்ளுகிறேன். சிலர் மிகுந்த சிரமத்துடன் தங்கள் காலத்தையும் பொருளையும் செலவிட்டுத் தங்கள் அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கும் நூல்களானவை என் மனதைத் தூண்டியதினிமித்தமே நானும் இதைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல நேரிட்டது. தற்காலத்தில், சங்கீத சாஸ்திரங்களில் மிகப் பழைமையானதும், அநேக விஷயங்கள் அடங்கியிருப்பதுமான சங்கீத ரத்னாகரத்தில் சுருதிகளைப் பற்றிச் சொல்லும் அத்தியாயத்தை, சுருதிகளைப் பற்றி விசாரிக்கும் யாவரும் மிகுந்த கவனத்தோடு படித்திருப்பார்கள். அவைகளில் சொல்லிய சுருதிகள் முற்றிலும் வழக்கத்தில் இல்லாமல் ஒழிந்து போயினவென்பது, சுருதிகளைப் பற்றி எழுதிய கனவான்களின் கணக்குகளைக் கொண்டு திட்டமாய்த் தெரிகிறது. ஷட்ஜம், மேல் ஷட்ஜம் என்ற இரண்டு சுரங்களைத் தவிர வேறே