4. ஓசையானது தந்தியின் அளவுக்கு மாறுதலாக முறையே மாறுகிறது. தந்தியும் அப்படியே ஓசையின் அளவுக்கு மாறுதலாக வருகிறது. மேற்கண்ட நாலு விதிகளும் இனிமேல் செய்யப்போகிற வேலைகளுக்கு அனுகூலமாயும் அப்போதைக்கப்போது ஒத்திட்டுப் பார்ப்பதற்கு இலகுவாயும் இருக்கும்படிப் பிரமாணமாக வைத்துக் கொள்வோம். Vn = ln இல் பேசப்படும் வைபரேஷன் அல்லது ஓசையாயிருக்கட்டும். Un = ஆதார ஷட்ஜத்தின் அல்லது C1 இன் 240 வைபரேஷனுக்குச் சரி. L = ஆதார ஷட்ஜம் பிறக்கும் தந்தியின் நீளம் 36 அங்குலம் இங்கே வைத்துக் கொண்டோம். ஆகையால்- Vn X ln = U X l.........................(A) Vn = U X l/ln ....................(B) ln = U X l/Vn ...................(C) ஆகையால் Vn = 2 U சமானமானால் ln= l/2 ..............................(D) ம 5. நாலாவது சுரமாகிய மத்திமம் (F.) ஆதார ஷட்ஜத்துக்கும் தாரஷட்ஜத்துக்கும் நடுமத்தியில் உண்டாகும். அதாவது மெட்டிலிருந்து 27 அங்குலத்தில் பேசுகிறது. முன் சொன்ன கணக்கின் படி அதனுடைய ஓசையின் அலைகள் 240 X 36/27 = 320. 6. நாலாவது சுரமாகிய மத்திமம் நிற்கும் தந்தியின் நீளம் ஆதார ஷட்ஜம் பேசும் தந்தியின் நீளத்திற்கு 3/4 ஆகிறது. மத்திமத்துடைய ஓசையின் அலைகள் ஆதார ஷட்ஜத்தின் வைபரேஷனுக்கு 4/5 ஆகிறது. ப 7. ஐந்தாவது சுரமாகிய பஞ்சமம் (G.) தந்தியின் மொத்த நீளத்தில் 1/3அல்லது 2/3ல் பேசுகிறது. 1/3ல் பேசுகிற பஞ்சமம் 2/3ல் பேசப்படும் பஞ்சமத்திற்கு 2மடங்கு. தந்தியின் நீளம் 36 அங்குலம். இதில் 12 அங்குலத்திலும் 24 அங்குலத்திலும் பஞ்சமம் பேசுகிறது. இப்போது தந்தியின் மொத்த நீளத்திற்கும் அதாவது 36 அங்குலத்திற்கும் அதின் பாதியாகிய 18 அங்குலத்திற்கும் நடு மத்தியில் எந்த இடம் என்று கண்டுபிடிக்க வேண்டும். பஞ்சமம் 24 அங்குலத்திலும் 12 அங்குலத்திலும் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறோம். 24 அங்குலத்திலிருக்கும் பஞ்சமம் இப்பொழுது நமக்கு வேண்டும். முன்சொன்ன கணக்கின்படி Vn = 240 X36/24 = 360. அதாவது- 240X3/2=360. 8. பஞ்சமம் நிற்கும் தந்தியின் நீளம் ஷட்ஜமம் பேசும் தந்தியின் நீளத்திற்கு 2/3; அப்படியே அதனுடைய ஓசையின் அலைகள் ஷட்ஜமத்தின் ஓசையின் அளவுக்கு 3/2 ஆய் இருக்க வேண்டும். ரி 9. இப்போது கிடைத்த ஒரு ஸ்தாயியில் ஷட்ஜமமும் பஞ்சமமும், மத்திமமும் ஷட்ஜமும் பூரணமான ஒற்றுமையுடையவைகள்.
|