Regarding Mr. Deval’s shrutees Dr. Coomarasamy says : - “It is true that Mr. Deval did not succeed in his endeavour to improve his case by importing aid and corroboration from scientific acoustics and Sanskrit philology; but I think that certain of his critics fall into more serious error when they judge the results of his patient and invaluable experimental work by weakness or inaccuracies in his method of presentation.” மகா- - -ஸ்ரீதேவால் அவர்களின் 22 சுருதிகளைப்பற்றி Dr. குமாரசாமி அவர்களின் அபிப்பிராயம். “Mr. தேவால் என்பவர் தம்முடைய கொள்கைகளை ஸ்தாபிப்பதற்காக நாதத்தைப்பற்றிய கோட்பாடுகள் அடங்கிய சாஸ்திரவிதிகளையும் ஸம்ஸ்கிருத நூல்களையும் ஆதாரமாக எடுத்துரைத்தது அவருக்கு விரோதமாய் முடிந்ததேயொழிய சாதகமாய் முடியவில்லை. ஆனால் அவருடைய கொள்கையைப் பற்றித்தங்கள் அபிப்பிராயத்தை வெளியிட்ட அநேகர், அவர் பொறுமையோடும் விடாமுயற்சியோடும் செய்து முடித்த அருமையான நூலானது அவர் கொள்கைகளை எடுத்துக்காட்டுகிறவிஷயத்தில் காணப்படுகிற குற்றங்குறைகள் தப்பிதங்கள் முதலியவற்றால் வியர்த்தமாய் விட்டது என்று சொல்வதானது மிகவும் தப்பான அபிப்பிராயம்.” மகா- - -ஸ்ரீ தேவால் இந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் துவாவிம்சதி சுருதிகளைச் சொல்லவந்தவர் அங்கங்கு சில சுலோகங்களை எடுத்து மேற்கோளாகச் சொல்லிக்கொண்டு மேற்றிசை சங்கீத வித்துவான்கள் சொல்லும் என்ஆர்மானிக் ஸ்கேல் (Enharmonic Scale) என்னும் 18 சுரங்களிலிருந்து 13 சுரங்களை அப்படியே எடுத்துக் கொண்டு அதற்கு மேலும் கீழுமாகச் சில சுருதிகளைக்கூட்டி 22க்கு நிரவல் செய்திருக்கிறார். மேற் காட்டிய 13 சுரங்கள் வருவதற்காக சங்கீத பாரிஜாதக்காரர் முறையைச் சொன்னார். மற்றும் 9 சுருதிகள் வருவதற்குத் தகுதியான நியாயம் சொல்லவில்லை. இந்தியாவிலே பிறந்து வளர்ந்து இந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளைச் சொல்ல வந்தவர் தற்காலத்தில் வழங்கிவரும் கானங்களிலுள்ள இராகம் இன்ன இன்ன சுருதிகளில் வருகிறதென்று விஸ்தாரமாய் விசாரித்து அனுபவ முறைப்படிச் சுருதிகளைச்சொல்லவு மில்லை; அல்லது சங்கீத பாரிஜாதக்காரர் சொல்லிய வழிப்படிப் போய் இந்திய சங்கீத சுருதிகள் இப்படித்தான் என்று ஒரு உறுதி கூறவுமில்லை. இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் நுட்பமான சுருதிகள் வாயினால் பாடவும் அது போல் வீணையில் வாசித்துக் காட்டவும் கூடியதே யொழிய சுருதிகளுக் கேற்ற மெட்டு வைத்து வீணையில் வாசிப்பதும் ஆர்மோனியம் முதலிய வாத்தியங்களில் சுரம் அமைப்பதும் அவைகளில் பாடுவதும் முற்றிலும் கூடாத காரியம். அப்படிச் செய்யப் பிரயத்தனப் படுவது இந்திய சங்கீதத்தின் விஸ்தாரத்தைக் கெடுத்து அதன் அழகும் உன்னதமுமான சிகரங்களையும் உடைத்துப் பாழ் படுத்துவதாகும். மேலும் சுருதிகளை அளந்து சுரம் கண்டுபிடிக்கும் பாரிஜாதக் காரருடைய முறையைப் போலொத்த ஒருமுறையையே மேற்றிசையாரும் அனுசரித்திருப்பதாகத் தெரிகிறது. என்றாலும், அவர்கள் சுரங்கள் ஒன்றற்கொன்று ஒற்றுமைப்பட்டு இனிமை தருவதற்கு அனுகூலமாக மேற்கண்ட அளவினால் கிடைத்த சுரங்களுக்குக்கூட்டியும் குறைத்தும் தற்காலம் வழங்கிக் கொண்டு வருகிறார்கள். என் ஆர்மானிக் ஸ்கேல் (Enharmonic scale) என்று எடுத்துக்கொண்டவர் அவைகளில் கொஞ்சமாவது மாற்றாமல் எடுத்துக் கொண்டாலும் ஒருவாறு சரியாயிருக்கும். ஆனால் ‘சங்கீத ரத்னாகரருடைய அபிப்பிராயம் இதுதான், இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இவைகள் தான்’ என்று சொன்னது சற்றுக் கவனிக்கவேண்டியதாயிருக்கிறது. என்றாலும், இந்திய சங்கீதத்தில் தனக்குத் தெரிந்த அபிப்பிராயங்களைப் பிரசுரித்து நெடுநாள் கவனிக்காமல் விட்டுவிட்ட இந்தியருக்கு ஒரு கிளர்ச்சி உண்டாவதற்குக்காரணமாயிருந்த இவருடைய முயற்சி மிகவும் பாராட்டத்தகுந்ததாயிருக்கிறது.
|