பக்கம் எண் :

309
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-இரண்டாவது பாகம்-இருபத்திரண்டு சுருதிகள்.

உள்ள வித்தியாசம் தெரியும். மேற்கு தேசத்தில் சொல்லிக்கொடுக்கப்படும் மூர்ச்சனை ஐரோப்பிய மேஜர் ஸ்கேல் (Major scale) ஐ ஒத்திருக்கிறது. தெற்கே சொல்லிக்கொடுக்கப்படுவது அரை சுரங்களாகிய குரோமாடிக் ஸ்கேல் (Chromatic scale). இதில் முறையே முதலாவது இரண்டாவது சுரத்திற்கும், மூன்றாவது நான்காவது சுரத்திற்கும், ஐந்தாவது ஆறாவது சுரத்திற்கும் ஏழாவது எட்டாவது சுரத்திற்கும் நடுவே அரை சுரங்கள் வரும். இதை இந்துஸ்தானி சங்கீதத்தில் பைரவி ராகம் என்பார்கள்.”

மேலே கண்ட சில வசனங்களினால் தான் பரதர் சாரங்கதேவர்களுடைய முறையை அனுசரித்தே 22 சுருதிகளைச் சொல்லப்போகிறதாகவும் அம்முறையும் இந்துஸ்தானி சங்கீதத்திற்கே உரியதென்றும் தெளிவாகச் சொல்லுகிறார். இந்த இடத்தில் சாரங்கதேவர் ஹைதராபாத் (Hyderabad) என்னும் இந்துஸ்தானி தேசத்தில் ஒளரங்கபாத் என்னும் பெரிய பட்டணத்துக்கு அருகிலுள்ள தௌலதபாத் என்னும் இந்துஸ்தானி பட்டணத்தில் இருந்ததனால் இந்துஸ்தானிக்குரிய சங்கீதமுறைகளை எழுதியிருக்கிறார் என்று கிளமெண்ட்ஸ் நினைக்க ஏதுவிருக்கிறது. என்றாலும் உண்மையில் அவர்நூலை விசாரிப்போமானால் அநேக அம்சங்களில் அப்படியல்லவென்று தெரியவரும்.

முதலாவது, துவாவிம்சதி சுருதியைப்பற்றி எடுத்துக்கொள்வோம். தேவாலும் கிளமெண்ட்ஸும் சொல்லும் அபிப்பிராயத்திற்குச் சங்கீத ரத்னாகரரின் அபிப்பிராயம் முற்றிலும் வேறாயிருக்கிறது. கிளமெண்ட்ஸ் சொல்லுகிற அபிப்பிராயம் இந்துஸ்தானி சங்கீதத்திற்கேயுரியது என்று திட்டமாய்ச் சொல்லுகிறபடி அவ்விடத்தில் இந்துஸ்தானி சங்கீதத்தில் பேர் பெற்ற வித்துவான் அப்துல்கரீம் (Abdul Karim) மூலமாய்த் தாம் முக முகமாய்க்கேட்டு ஒப்புக் கொள்ளுகிற சுருதிகளானவை இந்துஸ்தானி சங்கீதத்துக்கே யுரியதாயிருக்கலாம். ஆனால் சாரங்கதேவருடைய துவாவிம்சதி சுருதிமுறைக்கு ஒத்ததாயிருக்கமாட்டாதென்று இதன் பின்வரும் சாரங்கதேவர் துவாவிம்சதி சுருதி அட்டவணையில் விவரமாய்க்காணலாம்.

இரண்டாவது, சாரங்கதேவர் இந்துதேச வாசியாகிய சிம்மணராஜன் சமஸ்தான வித்துவானாயிருந்தாகவும் அவருடைய கேட்டுக்கொள்ளுதலின்பேரில் சங்கீத ரத்னாகரம் எழுதினதாகவும் தெரிகிறது.

மூன்றாவது, பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் முதலிய மும்மூர்த்திகளையும் அகார, உகார, மகார, ஓங்காரம் என்னும் பீஜாட்சரங்களையும், நாலு வேதங்களையும், நாலு ஜாதிகளையும் 7 சுரங்களுக்கும் அதிதேவதைகளான அக்கினி, பிரம்மா, சரஸ்வதி, அரன், அரி, விநாயகன், சூரியன் முதலியவர்களின் பேர்களையும், அவைகளைக் கண்டுபிடித்த இந்திரன், பிரம்மா, சந்திரன், விஷ்ணு, நாரதர், தும்புரு என்னும் பெரியோர்களின் பெயர்களையும், இராகங்களின் பேர்களையும் கவனிக்கையில் இந்துஸ்தானி சங்கீதத்திற்கும் சங்கீத ரத்னாகரத்துக்கும் எவ்விதமான சம்பந்தமுமில்லையென்று தோன்றுகிறது.

நாலாவது, மகம்மது கஜினி படையெடுத்து வந்த காலத்தையும் (1024), டில்லியில் 1206ல் முதல் முதல் ராஜ்யம் ஸ்தாபித்த மகம்மது கோரியின் காலத்தையும், தேவகிரியில் சோமராஜ மகாராஜன் காலத்தையும் நாம் ஒத்திட்டுப்பார்த்தால், சாரங்கதேவர் இந்துஸ்தானி சங்கீதத்திற்காக இந்த நூல் எழுதியிருக்கமாட்டாரென்பது வெளியாகும். விந்திய மலைக்குத்தென்பாகத்திற்கு மகமதியர் 1294-ம் வருஷத்தில் வந்ததாகத் தெரிகிறதேயொழிய அதற்கு முன் வந்ததாகத் தெரியவில்லை. எப்படி யிருந்தாலும் இந்துஸ்தான் சங்கீதத்திற்குரிய சுருதிகளை எழுதுகிறேன் என்று சொல்வதில் நமக்கு எவ்விதமான ஆக்ஷேபனையுமில்லை. ஆனால் சாரங்கதேவர் முறைப்படி இதை எழுதுகிறேன் என்று சொல்லுவதுதான் முற்றிலும் ஆக்ஷேபனைக்கு இடமாயிருக்கிறது. கிளமெண்ட்ஸ் தம்முடைய புஸ்தகம் 6-வது 7-வது பக்கங்களில் பின் வருமாறு சொல்லுகிறார்.