49. | வண்ணப்பட்டடை - என்றது பஞ்சமமுறையை. அது ஆதியாய்ஒன்றாய் நின்ற சட்சமத்திற்கு ஒன்றரையாய்ச் சேரும் பஞ்சமம் மிகுந்த பொருத்தமுடையதாய் அம்முறையே சுரங்கள் யாவும் கண்டு பிடிப்பதற்கு ஆதியாயிருந்ததினால் அடிமணை என்றுபெயர் பெற்றது. வண்ணம் என்பது நிறம் அல்லது சுரங்களுக்குப் பெயர். பட்டடை நரம்புகளில் இளி அதாவது பஞ்சமத்திற்குப் பெயர். ஆகவே பஞ்சம முறைப்படிச் சுரங்களை அமைத்தல் என்று பொருள்கொள்க. |
50. | உழை முதலாகவும் - மத்திமம் முதலாக ம-ச, ம-ச என்றுஇடமுறையாய் வரும் சுரங்களை அறிதல். |
51. | உழை யீறாகவும் - மத்திமம் முதலாக ஆரம்பித்த சுரங்கள் மறுபடிமத்திமத்தில் ச-ம என்று முடிவடையவேண்டும் என்பதைக் குறிக்கிறது. ம, ப, த, நி, ச,ரி, க, ம என்பதுபோல். |
52. | குரல் முதலாகவும் குரலீறாகவும் - சட்சமத்தில் ஆரம்பித்த சுரம் ச,ரி, க, ம, ப, த, நி, ச என்று முடிவடைகிறதைக் குறிக்கிறது. |
53. | வரன் முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் - என்பது உழைகுரலாகஐந்தாவது ஐந்தாவது இராசியிலும் குரல் இளியாக ஏழாவது ஏழாவது இராசியிலுமாகப் பன்னிரு சுரங்கள் வருவதைக் குறிக்கும். |
54. | குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் - என்பது குரல் முதலாக எடுத்துஇளி குரலாகப் பாடினாள். அதாவது குரல் முதல் பஞ்சமம் வரையும் மந்தரஸ்தாயியாய்ப் பாடிப்பார்த்து அதிலிருந்து இளியைக் குரலாக வைத்துக் கொண்டு பாடினாள். குரலில் ஆரம்பித்து இரண்டு ஸ்தாயி பாடி அவ்விரு ஸ்தாயிகளையும் மூன்று ஸ்தாயிகளாக வைத்துப் பாடினாள் என்பதாம். |
55. | பதினாற் கோவை - 14 நரம்புகள் அல்லது 14 சுரங்கள் அல்லது 14ஓசைகள். மனித சாரீரத்தால் சாதரணமாய்ப் பாடக்கூடிய இரண்டு ஸ்தாயி சுரங்களை 14 (ஓசைகளை) இது குறிக்கும். |
56. | ஓரேழ்பாலை நிறுத்தல் வேண்டி - என்பது மேற்கண்டபதினாற்கோவையில் மத்திய ஸ்தாயியாய் வழங்கும் ஏழு சுரங்களுக்கு அலகு மாற்றும் முறை. |
57. | ஓர் நிலை - ஒரு ஸ்தாயி. |
58. | மூவகை இயக்கு - வலிவு, மெலிவு, சமன் என்னும் மூன்றுஸ்தாயிகள் |
59. | வலிவு - எல்லாவற்றிலும் அதிக (வலிந்த) ஓசையானசுரங்களுள்ளது. |
60. | மெலிவு - எல்லாச் சுரங்களிலும் மெலிந்த ஓசையுடையது. |
61. | சமன் - வலிவு மெலிவு மின்றிச் சமத்துவமா யிருக்கப்பட்டசுரங்களுடையது. இதை மத்திய ஸ்தாயி என்று தற்காலம் வழங்குகிறோம். இவைகளையே மந்தோச்சசமம் என்று கூறுவர். |
62. | மெலிவிற்கெல்லை மந்தங்குரலே - ச, ரி, க, ம, ப, த, நி, ச ச,ரி, க, ம, ப, த, நி, ச என்ற இரண்டு ஸ்தாயியில் ச, ரி, க, ம என்ற நாலு சுரமும் மந்தர ஸ்தாயியாகும் மத்தி மத்தில் ஆரம்பிக்கும் குரல் மந்தர ஸ்தாயியில் முடிந்த சுரமாயிருக்கிறது. |