| சேரன் செங்குட்டுவனுக்கு இவர் சகோதரர். சிறு பிராயத்தில் துறவு மார்க்கத்தைக்கைக்கொண்டவர். இவர் காலத்தில் கற்பிற் சிறந்த கண்ணகி தன் கணவன் கோவலன் கொலையுண்டமையால் மனம் வெறுத்துப் பாண்டிய நாட்டை விட்டுச் சேரநாட்டில் கொடுங்கோளூர் அல்லது வஞ்சி என்னும் கடற்கரைப் பட்டினத்தை அடைந்து அங்கே மரணம் அடைந்தாள். இவள் மரணத்தின் பின் உண்டான கடுமையான பஞ்சத்தின் காரணம் கண்ணகியின் சாபமென்றும் அது தீர அவள்போல் ஒரு சிலை ஸ்தாபித்து உற்சவம் கொண்டாடவேண்டும் என்றும் தெரிந்து செங்குட்டுவன் கொடுங்கோளூரில் ஒரு பிரபலமான ஆலயம் கட்டி அதில் கண்ணகியைப்போல் கறுப்புக் கல்லினால் பத்தினிக் கடவுள் உருவமைத்து உற்சவம் கொண்டாடினார். இளங்கோவடிகள் இச்சரித்திரத்தைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரையுடைய நூலாக இயற்றி அதில் சேர சோழ பாண்டிய நாட்டையும் அவற்றை ஆண்ட அரசர்களையும் வளங்களையும் நாடு நகரச் சிறப்பையும் தமிழ் மக்களின் நாகரீகத்தையும் அவர்கள் காலத்தில் வழங்கிவந்த கலைகளையும் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் குறித்துச் சொல்லுகிறார், அதில் அரங்கேற்று காதையிலும் கானல் வரியிலும் வேனிற்காதையிலும் ஆய்ச்சியர் குரவையிலும் அக்காலத்தில் வழங்கிவந்த இசைத்தமிழ் அல்லது சங்கீதத்தின் நுட்பமான பலபாகங்களைச் சொல்லியிருக்கிறார். பாண்டிய நாட்டில் நெடுஞ் செழியனும் உறையூரில் சோழன் பெருங்கிள்ளியும் இலங்கையில் முதற் கயவாகுவுமிருந்த காலத்தில் இருந்தவராதலால் இவர் முதலாம் நூற்றாண்டில் இருந்தவரென்றுதெரிகிறது. மற்றும் விவரம் சிலப்பதிகாரத்தில் காண்க. |
115. | அடியார்க்கு நல்லார் - இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரமஎன்னும் நூலுக்கு உரை யெழுதியவர். இவர் இசை நுணுக்கம் இந்திரகாளியம், பஞ்சமரபு, பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், முதலிய நூல்களையும் இன்னும் பல பூர்வ நூல்களில் சிற்சில சூத்திரங்களையும் ஆதாரமாகக்கொண்டு இதற்கு உரை யெழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. இவர் சற்றேறக்குறைய 12ஆம் நூற்றாண்டிலிருந்தவராகத் தெரிகிறது. இவர் காட்டிய மேற்கோள்களைக்கொண்டு இசைத் தமிழ் நாடகத்தமிழ் நூல்களாகிய பல சங்கீத நூல்கள் பிற்காலத்தில் அழிந்து போயினதாகத் தெரிகிறது. |