நிலையை உணர்த்து வாருளரோ? முழுமுதற் கடவுளே! இசையாசிரியரே! யாழில் வல்லரே! பாணபத்திரரைப் பாதுகாத்தவரே! ஆடவல்லவரே! இசைக்குருகினோதே!” என வழுத்துந்தருணம் அப்பெருமானாரருள் ஸ்ரீ கருணாநந்தர் திருவருள்முழுதும் பெற்றவர் பால் சேர்ந்ததுபோலும் என அறிஞர் மதிக்க ஒருவர் எழுந்து பண்டைத் தமிழின் பண்பும் அத்தமிழிசையின் அற்புதமும், தமிழிசை வரலாற்றியல்பும் இன்ன பல பிறவும் விளங்கும் கருணாமிர்த சாகரம் எனும் வசன நூலியற்றி உலகிற்கு உபகரித்திருக்கின்றனர். இதுகாறும் தமிழிசை பற்றி இவ்வியல்பு நூல் ஒன்றும் வெளி வரவில்லை. இதனைச் செய்தவர் பண்டை இயற்றமிழ் நூல், சோதிடம், வைத்தியம், சிற்பம், விவசாயம், இசை நூல் ஆகிய இவற்றில் தம் குரு ஸ்ரீ கருணாநந்தர் திருவருளானே தாமே பெரிதும் தேர்ச்சியுறும் புண்ணிய முதிர்வினர். தம் புண்ணிய முதிர்வினை, தாம் மேற்கொண்ட இந்நூலில், மேற்கோளாகக் கொண்ட சிலப்பதிகாரம் இசை மரபு இவற்றின் மேற் கோளாலும் உரைவகுத்த வகையானும் காட்டுகின்றனர். உண்மை வழியிற் செலும் உயர்வினர். நன்மரபில் வந்தவர். தம் நன்னடையானே தக்கார் பலருளத்திற்றங்கும் வாழ்வினர். எஞ்சலில் வளஞ்சால் தஞ்சையில் வதிபவர். உள்ளதை எடுத்துக்காட்டும்போது பழகிவந்த பொருளில் வைத்த அபிமான மிகுதியின், பழகியதிலேற்றமும் புதுவதிற் குறைவுங்கூறுவது இந்நாட்டிற் பெரிதும் இயற்கை என்றெண்ணிப் பிறர் குறை கூற்றிற்குப் பின் வாங்காது உண்மையை வெளிப்படுக்கும் உன்னத நிலையினர். இந்நூலில் இவர் கூறும் 24 சுருதி புதுவது. 22 சுருதி பழயது. இவற்றின் உண்மை இசை வல்லார் துணிவதொன்றாம். அயலாராம் நாம் இவர் கூறும் காரணங்களை உற்றுநோக்குங்கால் “துணிவதொன்று” என்றே எண்ணுதற்கிடமுளது. இங்ஙன் பலதிற விசைமரபுகளை எடுத்துக் காட்டும் இந்நூல் என்றும் உலகில் நிலவுக, இந்நூலை இயற்றினார் ஸ்ரீமான் ஆபிரகாம் பண்டிதரவர்கள் நீண்ட ஆயுள், நோயிலா வாழ்வு, வளர் செல்வம், மனைமகார் இன்புறுநிலை, மருமகராதி கேளிர் பலருவப்புறுமியல் முதலிய நல்வளம் பெற்று வாழ்க, வாழ்க, வாழ்க என்றும். (ஒப்பம். ) சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள். |
பல்லாவரம் சமரச சன்மார்க்க நிலைய குருவும் ஞானசாகரப் பத்திரிகாசிரியருமாகிய ஸ்ரீலஸ்ரீ சுவாமி வேதாசலம் அவர்கள் இயற்றிய வாழ்த்துரை. சுவாமி வேதாசலம், | பல்லாவரம், | சமரச சன்மார்க்க நிலைய குரு | மெய்கண்டான் ஆண்டு 699 | ஞானசாகரப் பத்திரிகாசிரியர் | பங்குனிt 22s |
தஞ்சைமாநகரத்திலுள்ள திருமகன் ஆபிரகாம் பண்டிதரவர்களால் எழுதப்பட்ட ‘கருணாமிர்த சாகரம்’ என்னும் நூல் எனது பார்வைக்கு வந்தது. இந் நூலை முழுவதும் ஆராய்ந்து பார்த்து எனது கருத்து முற்றும் தெரிவித்தற்குப் போதுமான ஒழிவு காலம் இல்லையாயினும் இதனுட் பொருள்களை ஆங்காங்கு உற்றுப் பார்த்த அளவில் இஃது இசைத் தமிழ் நுணுக்கங்களையும் பிற்காலத்து இசை வளர்ச்சிகளையும் நன்கு விளங்குஞ் சிறந்த நூலாகு மென்பதே எனது கருத்து.
|