பண்டைத் தமிழர்களிடத்திலேதான் இசையின் நுணுக்கங்களும் பாகுபாடுகளும் தோன்றி வளர்ந்து பின்னர் ஆரியர் கைப்படலாயின என்று யான் நெடுநாட்குமுன்னரே ஆராய்ந்து கண்டமுடிவு, பல சிறந்த மேற்கோள்களோடும் அறிவு நுணுக்கத்தோடும் இந்நூலுள் விளக்கப்படுதல் கண்டு இந் நூலாசிரியரின் ஆராய்ச்சித்திறத்திற்கு மிக மகிழ்ந்தேன். இன்னுந் தமிழ் மக்களின் பண்டை நாகரீக வரலாற்றினைப்பற்றியும், நம் தமிழ் மொழியின் ஏற்றத்தைப்பற்றியும், இந்நூலாசிரியர் உரைப்பனவற்றிற் பெரும்பாலன என்கருத்திற்கு இசைந்திருக்கின்றன. ஆனால், இதில் விளக்கப்படும் இசையின் கூறுபாடுகளை யான் நன்குணர்ந்தவன் அல்லாமையால் அவற்றைக் குறித்து யான் எனது கருத்து மொழியகில்லேன்; அவை நன்குணர்ந்தாரே அது மொழிதற்குரியார். என் உணர்வுக்குப் புலப்பட்ட மாத்திரத்தில் இஃதொரு சிறந்த இசைத்தமிழ் நூலென்று துணிந்து சொல்லமாட்டுவேன். இவ்வரிய பெரிய நூலை உலகிற்குதவிய ஆபிரகாம் பண்டிதரவர்கட்குத் தமிழ் நன்மக்களும், பொதுவாக இசை நுணுக்கங்களில் விழைவுமிக்க எல்லாரும் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறார்கள். இந்நூல் என்றும் நின்று நிலவுக! இதனாசிரியர் நெடுங்காலம் இனிது வாழ்க. இங்ஙனம், | (ஒப்பம். ) வே தா ச ல ம் . |
எட்டயாபுரம் சமஸ்தானம் ஜமீன்தார் அவர்கள் அபிப்பிராயம். தஞ்சாவூர் ராவ் சாகேப் மு. ஆபிரகாம்பண்டிதரவர்கள் இயற்றிய கருணாமிர்த சாகரம் என்ற நூல் அதற்கமைந்த பேர்போலவே மிகுந்த விஸ்தாரமானதே. சில பாகங்களை நாம் ஸ்தூலமாய்ப் பார்வையிட்ட மட்டில் இத்திராவிட நாட்டில் அனாதியாய்த் தொன்றுதொட்டு வழங்கிவரப்பெற்ற தமிழ்ப் பாஷையிலுள்ள இயல், இசை, நாடகமென்ற முத்தமிழிலொன்றான இசைத் தமிழின் வரலாறும், இசைக்கு இன்றியமையாத சுரங்கள் 7-க்கு சுருதிகள் 24 என்ற உண்மையும் ஆயப்பாலை முதலிய நாற் பாலையின் பாகுபாட்டில் பல்லாயிரம் பண்கள் அதாவது இராகங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்ற விஷயமும், சிலப்பதிகாரம் முதலிய தமிழ் நூல்களின் ஆதாரங்களோடு விளக்கப்பட்டிருக்கின்றன. அன்றியும் சுருதிகள் 22 தானென்று சித்தாந்திப் பவர் கொள்கையை பல ஞாயங்களால் மறுத்திருக்கும் புதுமை ஒன்றே நூலாசிரியருடைய கல்வி கேள்வித் திறமையையும் நுட்பமான ஆராய்ச்சியையும் வியக்தமாய்க் காட்டுகிறது. இந்நூல் சங்கீதம் கற்பவர்களுக்கு அந்தகனுக்குக் கண் திறந்து விட்டாற் போல பேருதவி செய்யத்தக்கதுடன், இம்மை, மறுமைக்குரிய விசேஷ பலன்களையும் விளைவிக்கத்தக்கது. ஆகையால் இந்த அருமையான நூலை அளவிறந்த பிரயாசையுடனும் பொருட் செலவுடனும் பிரதிப்பிரயோஜனம் எதிர்பாராது லோகோபகாரமாய் வெளிப்படுத்திய நூலாசிரியருடைய பெருந்தன்மையையும் பேருதவியையும் பற்றி இத்தமிழ் நாட்டிலுள்ள சகல ஜனங்களும் எக்காலமும் பாராட்டத்தக்கதே. எட்டயாபுரம், | | (Sd. ) ETTAPPAN, | ஸ ம ஸ் தா ன ம் . | | Zemindar. | 1 - 6 - 1916. | | |
|