என்று சாதிப்பவர்போல் சாதிப்பது விவேகிகளுக்கு அடையாளமல்ல. ‘நெற்றிக்கண் காட்டியும் குற்றம் குற்றந்தான்’ என்று பரமசிவனிடத்திலும் உண்மையை சாதித்த பொய்யாத் தமிழ் மொழிப் புலவர்கள் நிறைந்த தமிழ் நாட்டில் வழங்கும் கர்நாடக சங்கீதத்தை விசாரிக்கும்போது அதன் உண்மையை விசாரிக்காமல் ஆரிய சங்கீதத்தில் 22 சுருதிகள் வழங்கி வருகின்றனவென்று சொல்ல வந்தால் அது நியாயமாகுமா? பாகவதர் அவர்கள் நன்றாய்த் தீர விசாரித்தால் தாம் சொல்லிய 22 சுருதி முறைக்கும் கர்நாடக சங்கீத முறைக்கும் முற்றிலும் ஒவ்வாதென்றும் 22 சுருதி முறையின் படி எந்த கானமும் செய்ய முடியாதென்றும் அறிந்து கொள்வார். முடிவாக இவர் சங்கீத ரத்னாகரத்தில் சொல்லிய முறைப்படிப் போகவுமில்லை. பாரிஜாதக்காரர் வழியில் நிலைக்கவுமில்லை. தாம் பரம்பரையாய்ப் பாடிக் கொண்டு வரும் கர்நாடக ராகங்களில் வரும் சுரங்கள் இன்னவையென்று நன்காராயாமல் 22 சுருதியென்ற சொல்லை வைத்துக் கொண்டு அதைச் சாதிக்கத் துணிந்தாரேயொழிய தற்காலத்தில் இவர் பாடிக் கொண்டிருக்கும் கல்யாணி தோடி சங்கராபரணம் முதலிய ராகங்களில் வரும் சுரங்கள் 22 சுருதி வாத்தியத்தில் வருமாவென்று பரீட்சித்துப் பார்த்தாரில்லை. தாம் விளக்கிக் காட்ட முடியாத ஒன்றைக் கோபத்தினால் சாதித்துக் கொள்ளும் புண்ணியவான்களைப் போலத் தாமும் துவாவிம்சதி சுருதியின் நிச்சயத்திற்குச் சாபம் போட்டு முடிக்கிறார். துவாவிம்சதி சுருதியின் அனுசரித்தும் சங்கீத ரத்னாகரருடைய முறையை அலட்சியம் செய்தும் சுருதிகள் இருபத்திரண்டு என்று சொல்ல வந்ததானது முற்றிலும் தவறுதல் என்றும் கர்நாடக சங்கீதத்திற்கு முற்றிலும் பொருந்தாதென்றும் தோன்றுகிறது. இது தவிர பாகவதர் அவர்கள் சுருதிகளின் பெயர் விஷயமாய்க் கொடுத்திருக்கும் அட்டவணையையும் நாம் ஒத்துப் பார்ப்பது அவசியமென்று நினைக்கிறேன். அதைக் கவனித்துப் பார்ப்போமானால் இதன் முன்னுள்ள பல சங்கீத நூல்களிலும் சுருதியின் பெயர்கள் வித்தியாசமாக வழங்கப்பட்டிருக்கிறதென்று தெளிவாகக் காண்போம். அவைகளில் ஒன்றற்கொன்று பெயர்களாலும் அப்பெயர்களுடைய சுருதி ஸ்தானங்களாலும் வித்தியாசப்பட்டு வழங்கியிருக்கிறதாகக் காண்போம். மேலும் சுருதிகளைப் பற்றிய சந்தேகம் பல பலவாயிருந்தமையின் அதை நிவர்த்தி செய்வதற்கென்று பலர் பரயத்தனம் செய்து அவரவர் காலத்தில் வழங்கி வந்த சங்கீத சாரங்களை எழுதிப் புஸ்தக ரூபமாக வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் பாகவதர் அவர்கள் இராக தாளம் முதலான பாகங்களில் ஒன்றற்கொன்று சம்பந்தமில்லாமல் சொல்லுகிறதென்று சொல்லுகிறபடி சுருதியிலும் சுருதியின் பெயர்களிலும் ஒன்றற்கொன்று சம்பந்தமில்லாமலிருக்கிறதென்று அடியில் வரும் அட்டவணைகளால் காண்கிறோம். சங்கீத ரத்னாகரர் காலத்தில் வழங்கி வந்த இராகங்களுக்கும் அவருக்குப் பின்னுள்ளவர்கள் காலத்தில் வழங்கிய இராகங்களுக்கும் தொகையிலும் பெயரிலும் மிகுந்த வித்தியாசமுண்டு. சங்கீத ரத்னாகரர் காலத்தில் சுத்த சுரங்கள் ஏழும் விக்ருத சுரங்கள் பன்னிரண்டும் ஆக 19 சுரங்களிருந்ததாக அவர் அட்டவணையால் தெரிகிறது. அவர் காலத்தில் 19 கர்த்தா ராகங்கள் மாத்திரம் இருந்திருப்பதைக் கொண்டு 19 சுரங்களும் வழங்குகிறதற்கு ஏற்ற விதமாய் 19 மேளங்கள் ஏற்படுத்தியிருப்பாரோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. பாரிஜாதக்காரர் முறைப்படி சுத்த சுரங்கள் ஏழும் விக்ருத சுரங்கள் ஐந்தும் மறுபடி விக்ருத சுரங்கள் பதினேழும் ஆக சுத்த விக்ருத சுரங்கள் 29 என்று அட்டவணையில் காண்கிறோம்.
|