பக்கம் எண் :

453
கருணாமிர்த சாகரம் - முதல் புஸ்தகம் - இரண்டாவது பாகம் - இருபத்திரண்டு சுருதிகள்.

செய்யும் வித்துவசிரோமணிகளும் சுருதிகளைப்பற்றி எழுதும் எவரும் இப்பன்னிரண்டையே தங்களுக்கு ஆதார சுரங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களென்பது சந்தேகமற வெளியாயிருக்கிறது. மற்ற சுரங்களைப்ற்றி இற்றைக்கிருக்கும் சந்தேகங்களைப் போலவே இவர் காலத்திலும் இருந்தததுகண்டு இச்சந்தேகம் நீங்குவதற்கு நிச்சயமற்ற பத்தையும் தள்ளிப் பன்னிரண்டு சுரங்களையும் நிலைப்படுத்திச் சங்கீதத்திற்கு உண்டான ஒரு பெரிய விபத்தை நீங்கிவைத்தார். அதன் பின் துவாவிம்சதி சுருதியைப்பற்றி மற்றவர்கள் செய்யும் ஆக்ஷேபனைகள் ஒருவாறு சாந்தமடைந்தன. இவர்செய்த இம்முறையானது, சற்று ஆழ்ந்து கவனிக்கக் கூடியவர்களுக்குப் பழமையான முறையென்றே உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாகத் தெரியும். எப்படியென்றால் ஷட்ஜம-பஞ்சமமுறைப்படி என்று சொல்வதே கானத்தில் வரும் ஒவ்வொரு சுரமும் ஷட்ஜம-பஞ்சமத்தின் அளவுடையதாயும் ஓசையில் பொருத்தமுள்ளதாயும் ஒன்றின்மேலொன்று கிரமமான பேதமுடையதாயுமிருக்க வேண்டுமென்னும் கருத்தைத் தெளிவாய்த்தெரிவிக்கிறது. ஷட்ஜம-பஞ்சம முறைப்படி சுரங்கள் ஒத்துவரும் முறையும் சுருதிகள் இத்தனை ஒரு ஸ்தாயியில் வரலாமென்பதைப் பற்றிப்பாரிஜாதக்காரர் சொல்லு முறையும் எவ்வளவு தூரம் ஒத்திருக்கின்றனவென்பதைத் தென்னிந்திய சங்கீத சுருதி அட்டவணையில் தெளிவாய்க்காணலாம்.

பாரிஜாதக்காரர் எழுதிய இச் சுருதிமுறையைப் பற்றிய சில சுலோகங்களை சமஸ்கிருதத்திலும் சங்கீதத்திலும் பயிற்சியுள்ள சில வித்துவான்களைக்கொண்டு நான் விளங்கிக்கொண்ட படியே அர்த்தம் செய்து கணக்குக்கொடுத்திருக்கிறேன். இம்முறையே Dr. பண்டர்க்கார் அவர்களும் Mr. G. G. பார்வ் அவர்களும் கொடுத்திருப்பதினால் இவைகள் சரியாயிருக்கலாமென்று நினைக்கிறேன். G. G பார்வ் அவர்கள் சொல்லும் 99-151 சென்ட்ஸ்களுடைய ரிஷப ஸ்தானம் இரண்டும் சற்று பேதமாகக் காணப்பட்டாலும் அப்படி அர்த்தமாவதற்கும் இடமிருக்கிறதென்று நினைக்கிறேன்.