| கோமள ரிஷபம் சரியானதாக நான் நினைக்கிறேன். மற்றொரு அர்த்தத்தின்படி கிடைக்கக் கூடிய 204 சென்ட்ஸ்களுள்ள சதுர் சுருதி ரிஷபமும் இதோடு சேருமானால் சங்கீத பாரிஜாதக்காரருடைய சுருதி முறை சற்று ஏறத்தாழ சரியாயிருக்கும். என்றாலும் கர்நாடக சங்கீதத்திற்குரிய சுரங்கள் இதில் வரவில்லையென்று திட்டமாகத் தெரிகிறது. இது இந்துஸ்தானி சங்கீதத்திற்கென்று சொல்லாதிருந்தாலும் இதையே மற்றவர்கள் இந்துஸ்தானி சங்கீதத்தில் வழங்கி வருகிற சுருதி என்று சொல்வதினாலும் மற்றதற்குச் சொன்னது போலவே இதற்கும் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. 14. பாக்ஸ் ஸ்ட்ராங்வேஸ் அவர்கள் சங்கீத ரத்னாகரருடைய முறையை அனுசரித்து ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் இருக்கின்றனவென்று சொன்னாலும் அதை இந்துஸ்தானி சங்கீதத்திற்கென்றே சொல்வதினால் அவைகள் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கக் கூடிய முறையல்லவென்று தோன்றுகிறது. சாரங்கர் முறையுமல்ல. 15. சின்னசாமி முதலியார், M. A., அவர்கள் மேற்றிசையார் வழங்கி வரும் சுரங்களையும் அவைகளுக்கு மற்றவர் இட்டழைக்கும் பெயரையும் அவைகளின் அளவையும் சொல்லியிருக்கிறார். அவர்கள் கொடுக்கும் கணக்குகள் (2/3), (3/4), (4/5), (5/6) என்ற முறையிலிருப்பதாகத் தெரிகிறது. இது சுருதி ஞானமில்லாதவர்களுக்கேயுரியது. மேலும் அவர் சுருதி விஷயமான பல குறிப்புகளை ஆராய்ச்சி செய்து பூர்வ நூல்களுக்கும் தற்கால அனுபவத்திற்கும் வித்தியாசமும் குழப்பமும் இருப்பதாகக் கண்டு சிக்குமுக்கலான இந்த விஷயத்தில் இப்பொழுது நாம் தலையிடக்கூடாதென்று சொல்லுகிறார். இருந்தாலும் இவ்விஷயத்தைத் தீர்த்துக் கொள்வதற்குத் தென்னிந்தியாவில் வழங்கும் வீணை போதுமென்று சொல்லுகிறார். அதன் சரியான அளவு முதலியவைகளை அவர் இங்கு சொல்லவில்லை. 16. மேல் நாட்டார் வழங்கிவரும் என்ஹார்மானிக் ஸ்கேல். இவைகளும் (2/3), (3/4), (4/5), (5/6) என்பவைகளிலிருந்து கிடைக்கக் கூடியதாயிருப்பதினால் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளை நிச்சயிக்க முடியாதென்று நினைக்கிறேன். 17. சங்கீத ரத்னாகரம் எழுதிய சாரங்கதேவர் ஒரு ஸ்தாயியில் சுருதிகள் வரவேண்டிய உத்தமமான முறையையும் கிரமத்தையும் சொல்லியிருக்கிறார். கிராமம் மாற்றுகையிலும் அவைகள் தவறிப் போகாத முறையை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஷட்ஜம பஞ்சம முறையாய், ஷட்ஜம-மத்திம முறையாய்ப் போக வேண்டுமென்ற திறவுகோலையும் கொடுத்திருக்கிறார். வாதி ச-ப 13 சுருதிகளாகவும், சம்வாதி ச-ம 9 சுருதிகளாகவும், வரவேண்டுமென்று சொல்லுகிறார். இம் முறைப்படி தற்காலத்து கானத்திலிருக்கும் ச-ப, ச-ம என்கிற இரண்டு சுரங்களும் வரவில்லை. மேலும் இந்தியாவிலுள்ள சிலரும் பைதாகோரஸ் முதலிய மேல் நாட்டாரும் சொல்லுகிற (2/3), (3/4), (4/5), (5/6) என்ற அளவுகளில் அவைகள் வரவில்லை. அவர் நூலில் சொல்லப்படவுமில்லை. அவர் நூலில் சொல்லப்படாத ஒன்றைக் கொண்டு நாம் தடுத்துச் சொல்வது நியாயமுமல்ல என்று நினைக்கிறேன். 18. பல பெயருடைய அபிப்பிராயங்களையும் ஒன்று சேர்த்துப் பார்ப்பதற்கான அட்டவணையில் எவருடைய சுருதி முறையாவது அளவிலாவது, கணக்கிலாவது சென்ட்ஸ்களிலாவது ஒத்து வராதிருப்பதினால் அவை ஒவ்வொன்றும் சாரங்கர் முறைப்படியல்ல என்று தெளிவாகத் தெரிகிறது. அதோடு கர்நாடக சங்கீதத்தில் வழங்கி வரவேண்டிய சுருதி முறையல்ல என்றும் மிகத் தெளிவாக அறியலாம்.
|