பக்கம் எண் :

516
சுருதிகள் தற்கால கானத்திற்கு ஒத்து வரமாட்டாதென்று சொல்லும் சில கனவான்களின் அபிப்பிராயம்.

அறிவில்லாமையே காரணமாகும். தெளிவு படக்கூடிய விபரம் சொன்னால் அவையெல்லாம் எங்கள் பழங்கூடையி லிருக்கின்றனவென்று மருட்டுவார்கள். இந்தியாவில் மேற்றிசை சங்கீத வித்வான்கள் துவாவிம்சதி சுருதிகள் தற்கால சங்கீதப் பயிற்சிக்கு ஒவ்வாதவைகளென்று திட்டமாகக் கண்டிருக்கிறார்கள். என்றாலும் ஏன் உதவாதென்பதற்குக் காரணஞ் சொல்லத் தெரியவில்லை. தற்கால அனுபவமும் துவாவிம்சதி சுருதியின் முறையும் ஒன்றற்கொன்று ஒவ்வாமையாயிருக்கிறதை அவர்கள் அறிந்திருக்கும் வீதம் ஒரு தென் இந்தியன் அறிந்திருப்பானானால் அதற்குக் காரணஞ் சொல்லுவான். தெரியாமையினால் எங்கள் சுரமும் எங்கள் சுருதிகளும் வெகு நுட்பமானவைகளென்று கேள்விக்கு மாறான பதிலும் அது இது என்று அளவுஞ்சொல்லி ஏதோ எந்த நூலாலும் சுருதியைப் பற்றித் தெளிவான அபிப்பிராயம் உண்டாகாமல் மயங்கும்படி நேரிடுகிறதே பலர் பல விதமாய்ச் சொல்ல ஏதுவாயிருக்கிறது. இதோடு தனித் தனி ஒவ்வொரு நூலையும் பூரணமாய் விசாரித்து அதற்கு ஏற்ற விதமாய் அர்த்தம் செய்யாமல் பலர் நூலையும் எடுத்துக் கொண்டு அவரவர்களுடைய அர்த்தங்களையும் ஒன்று சேர்க்கப் பார்க்கிறார்கள். இதனாலேயே பல பேதங்கள் உண்டாகுவதற்கு ஏதுவாயிற்று என்பதை பின்வரும் வாக்கியங்களில் காண்போம்.

Dr. P. R. Bhandarkar, B.A., L.M.S.

"It is a great relief, however, to find at least one sceptic in Captain Day who says :-

The translation must, of course, be more or less hypothetical; and as it is so entirely different in character and style to all modern Indian music, and airs heard now in India which are said to be very ancient, its correctness appears to be doubtful."

"பல பேர் அதை நம்பின போதிலும் அதை நம்பாதவர் ஒருவர் இருக்கிறார் என்று எனக்குத் தெரிவதே எனக்குக் கவலையொழிந்தது போல் இருக்கிறது. அவர் யாரென்றால் Captain Day என்பவர். அவர் என்ன சொல்லுகிறாரென்றால் :-

அந்த மொழிபெயர்ப்பானது முற்றிலும் சரியாயிராமல் முன்னும் பின்னும் சரியாயிருக்கலாம். மேலும் தற்கால இந்திய சங்கீதத்துக்கும் அதற்கும் அம்சத்திலும் அழகிலும் அனந்த பேதங்கள் இருப்பதினாலும் தற்காலம் நாம் கேட்கும் இராகங்கள் பூர்வத்தில் உள்ளதென்று அங்கு சொல்வதினாலும் அது உண்மையாயிருக்கும் என்று நினைக்க ஏதுவில்லை."

தற்காலத்தில் பாடும் சங்கீதத்திற்கும் பூர்வ நூல்களில் சொல்லும் சுருதிகளுக்கும் முற்றிலும் ஒவ்வாதிருப்பதினால் மொழி பெயர்ப்பில் வித்தியாசமிருக்குமென்று நினைக்கிறார். ஆனால் தற்காலத்திலுள்ள ராகங்கள் பூர்வ காலத்திலேயே உண்டானவையென்று அந்நூல்கள் சொல்லுவதினால் அச்சுருதிகள் உண்மையாயிருக்குமென்று நினைக்க ஏதுவில்லை என்கிறார். இது உண்மையே, பூர்வ நூல்களில் காணப்படும் சுருதி முறைகள் தற்காலத்து கானத்திற்கு முற்றிலும் ஒத்தவைகளாக இல்லையென்று இதன் முன் நாம் பார்த்தோம். ஆதார ஷட்ஜம் தார ஷட்ஜம் தவிர மற்ற சுரங்கள் ஒத்திருக்கவில்லையானால் தற்கால சங்கீதத்திற்கு அவைகள் ஒத்திருக்க மாட்டாதென்பது நிச்சயம். அனுபவம் வேறு சாஸ்திரம் வேறாக இருக்கிறதாக இங்கே தெளிவாய்க் காணப்படுகிறது. ஷட்ஜமமே எல்லா சுரங்களுக்கும் ஆதாரமானதென்றும் முதலானதென்றும் ஷட்ஜமத்திற்குப் பொருந்திய சுர வரிசைகள் துவாவிம்சதி சுருதியின் முறையில் கிடைக்காதென்றும் பின்வரும் வாக்கியங்களில் காணப்படுகிறது.