பக்கம் எண் :

518
22 சுருதிகள் தற்கால கானத்திற்கு ஒத்துவரமாட்டாதென்று சொல்லும் சில கனவான்களின் அபிப்பிராயம்

author of the Sangit Ratnakar, he replies : "He (Sarangadev) is not really an old authority; we go back to the Sama Veda; we are of opinion that Sarangadev is wrong in many respects, and we reckon our Srutis downwards instead of upwards." To go back to the Sama Veda is a happy inspiration, as that work, so far as it touches the question of scales, deals in pure generalities."

"ஆர்மோனியத்தில் சுரங்களை ஒரு குறித்த அளவோடு அமைத்து வைத்து அது சரியான முறையென்று சொல்லுகிற ஒருவரை (Advocate of a Tempered Harmonium) அவருடைய முறையானது சங்கீத ரத்னாகரம் எழுதினவரான சாரங்க தேவருடைய முறையை அனுசரித்து உள்ளதோ என்று கேட்டால் அவர் மாறுத்தரமாக "சாரங்கதேவர் அப்படி ஒரு பூர்வமான சட்ட முறைக்கு ஆதார புருஷனல்ல. நாம் சாம வேதத்தையே பூர்வ ஆதாரமாகக் கொள்ளுகிறோம். சாரங்கதேவரோ பல இடங்களில் தவறிப் போயிருக்கிறார். நாம் எம்முடைய சுருதிகளை மேலேயிருந்து கீழே கணிக்கிறோமேயொழிய கீழேயிருந்து மேலே கணிக்கிறதில்லை" என்கிறார். சாமவேத முறையைத் தாங்கள் அனுசரிப்பதாகச் சொல்வதானது தற்காலத்தில் உண்டான ஒரு அபிப்பிராயம். அது நாம் சொல்வதற்கு ஒத்துத்தான் இருக்கிறது. ஏனென்றால் ஆரோகண அவரோகண விஷயமாய் அதில் சொல்லப்பட்டிருக்கிறதைக் கவனித்தால் அது பொதுவான ஒரு முறையைப் பற்றிப் பேசுகிறதேயொழிய சுருதிகளைப் பற்றி நுட்பமாய் ஒன்றும் சொல்லவில்லை."

மேற்கண்ட கிளமென்ட்ஸ் அவர்கள் எழுதிய அபிப்பிராயத்தைக் கவனிக்கையில் சாரங்க தேவருடைய முறை அதிக பூர்வமான முறையல்லவென்றும் பல இடங்களில் சுருதி தவறி வருகிறதென்றும் ஆகையினால் சாம வேதத்தின் சுரங்களை நாம் ஆதாரமாகக் கொள்ள வேண்டுமென்றும் சாமவேதத்தின் நுட்பமான சுருதிகளில் ஒன்றும் சொல்லப் படவில்லையென்றும் தெரிகிறது. சாம வேதம் முதல் முதல் ராவணனால் பாடும் முறைக்குக் கொண்டு வரப்பட்டதென்றும் அவன் தென்னிந்திய சங்கீத முறையாய் சாம வேத கானப் பண்ணினானென்றும் அவன் விசேஷமான சுரங்களைச் சேர்த்துக் கானம் பண்ணின பிற்பாடே அது சாம வேதமென்று பிரிக்கப்பட்டதென்றும் இதன் முன் 116, 117 என்னும் பக்கங்களில் சொல்லியிருக்கிறோம். அதோடு 125 வது பக்கம் 5, 6, 7, 8, 9 முதலிய வரிகளில் வடதேச முறைகளும் தென்தேச முறைகளும் இந்துஸ்தானி முறைகளும் ஒன்றற்கொன்று வித்தியாசமுடையவைகளாயிருந்தாலும் தென் தேச அல்லது திராவிட சங்கீதமானது வேதங்களை ஓதுவதற்கு மிகப் பிரயோஜனமாயிருக்கிறதென்று குந்தி (Mr. Kunte) சொல்லுகிறார் என்று இதன் முன் பார்த்திருக்கிறோம்.

மேலும் மேற்றிசையாரின் என் ஹார்மானிக் முறையும் கர்நாடக முறையும் ஒன்றற்கொன்று வித்தியாசமுடையவையென்று பின்வரும் வசனங்களில் காண்போம்.

The music of Hindustan by Fox Strangways P. 121.

"The enharmonic seems to be opposed in principle to the Carnatic system"

"கர்நாடக முறையும் என் ஹார்மானிக் முறையும் ஒன்றுக்கொன்று மாறுபடுவதாகத் தோன்றுகிறது."

மேற்கண்ட சில வரிகளைக் கவனிக்கையில் மேற்றிசையார் வழங்கும் என் ஹார்மானிக் ஸ்கேலில் வழங்கும் பல சுருதிகளுக்கும் கர்நாடக முறையில் வழங்கும் சுருதிகளுக்கும் வித்தியாசமிருக்கிறதென்று சொல்லுகிறார். வடதேசத்தில் வழங்கும் சுருதிகள் வேறாகவும் இந்துஸ்தானி கீதத்தில் வழங்கும் சுருதிகள் வேறாகவும் மேற்றிசையார் வழங்கும் சுருதிகள் வேறாகவும் வருகிறதென்றும் இவைகள் ஒன்றாவது கர்நாடக சங்கீத முறைக்கு ஒத்ததல்லவென்றும் தெளிவாகத் தெரிகிறது.