முடிவாக கர்நாடக சங்கீதத்திற்குச் சுருதிகள் எப்படிச் செய்யப்படவேண்டும் என்பதைப் பற்றிய இரண்டு குறிப்புகள். கனவான்களே! சற்றேறக் குறைய பைதாகோரஸின் காலமுதல் 2,400 வருஷங்களாக சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளைப் பற்றி எண்ணிறந்த கனவான்கள் பல ஆக்ஷேபனைகள் செய்தும் இப்படித்தான் வரவேண்டுமென்று நூல்கள் எழுதியும் வந்திருக்கிறார்கள். அதே விதமாக நாளது வரையும் அபிப்பிராய பேதங்கள் பல இருக்கிறதென்று இதன் முன் விஸ்தாரமாகப் பார்த்திருக்கிறோம். அவைகளில் முக்கியமான சிலவற்றை எடுத்து அவைகளின் ஒவ்வாமையையும் அவை சாரங்கர் சுருதிக்கும், பைதாகோரஸ், பாரிஜாதக்காரர்களின் முறைக்கும், ஒவ்வாமையையும் சொல்லியிருக்கிறோம். இவைகள் யாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அவைகளில் வரும் வெவ்வேறு அபிப்பிராயங்களையும் வெவ்வேறு சுருதிகளையும் 50-வது அட்டவணையில் காட்டியிருக்கிறோம். ஆகையால் முன் சொன்ன பல முறைகளையும் ஒன்று சேர்த்து ஒரே அளவுடன் வழங்கக் கூடிய ஒரு நூதன முறையுண்டாகுமானால் அதுவே நம் சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகள் யாவற்றையும் தீர்மானித்துக் கொள்வதற்கு அனுகூலமாகும். ஒன்றோடொன்று ஒத்துவராத பல முறைகளையும் ஒன்று சேர்க்கவும் அவைகளின் உண்மையைக் காணவும் மிகப் பிரயாசப்பட்டுக் கொண்டிருக்கையில் யாவராலும் சாஸ்திர முறையையுடையதென்றும் சாமவேதம் சொல்வதற்குத் தகுதியான சுரப்பொருத்த முடையவையென்றும் கொண்டாடப்படும் இந்தியாவின் பூர்வ குடிகளாகிய தமிழ் மக்கள் வழங்கி வந்த இசைத் தமிழ் நூல்களில் மிக மேன்மையானதும் தற்காலத்தில் வாதாட்டத்திலிருக்கும் சுருதி சந்தேகங்களைத் தீர்க்கக் கூடியதுமான சில முக்கிய கருத்துகளைக் கண்டேன். பெரியோர்களின் அனுக்கிரகத்தைக் கொண்டு அவற்றைச் சொல்லத் துணிந்தேன். 1. இந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகள் இன்னவையென்று முடிவாக நிச்சயிப்பதற்குச் சாரங்கர் சொல்லும் சுருதி முறையே சரியான முறையென்றும் அவர் கருத்தின்படியே சுருதி செய்ய வேண்டுமென்றும் நினைக்கிறேன். அதைத் தவிர வேறு நல்ல மார்க்கம் உண்டென்று எவரும் சொல்ல மாட்டார்களென்று நினைக்கிறேன். அதாவது சாரங்கர் முறைப்படி ஒரு ஸ்தாயியில் ஆதார ஷட்ஜத்திலிருந்து படிப்படியாய் ஒன்றற்கொன்று தீவிரமாய் நடுவில் வேறு நாதமுண்டாகாமல் சுருதிகள் சேர்க்கப்பட வேண்டும். 2. மேற்றிசை விற்பன்னர்களும் இந்தியிாவின் சங்கீதத்தைப் பற்றி சொல்பவர்களும் ஏக வாக்காய் ச-ப 2/3 என்றும், ச-ம 3/4 என்றும் சொல்வதினால் சற்றேறக் குறைய அந்த அளவிலேயே ச-ப, ச-ம வரவேண்டிய ஸ்தானங்களென்று நிச்சயிக்க வேண்டும். அதாவது ச-ப 2/3 ஆக ஒரு ஸ்தாயியில் சுரங்கள் கண்டுபிடித்துக் கொண்டு போகும்பொழுது ஒரு ஸ்தாயியில் கொஞ்சம் கூடுவதையும், ச-ம 3/4 ஆகப் போகும்பொழுது ஒரு ஸ்தாயியில் கொஞ்சம் குறைவதையும் போல் வராமல் அந்த ஸ்தாயி ச-ப, ச-ம என்னும் இரு முறை
|