பக்கம் எண் :

525
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

இவ்வெண்ணம் முற்றிலும் பூர்த்தியடையாமல் போனாலும், அதாவது தென்னிந்திய சங்கீதத்தைப் பற்றி விவரஞ் சொல்லும் பூர்வ நூல்கள் நமக்குக் கிடைக்காமல் போனாலும், தென்னிந்திய சங்கீதத்திற்கு முக்கிய ஆதாரமான சில அம்சங்கள் மாத்திரம், தற்காலம் அங்கங்கே காணக் கிடைக்கின்றன.

அதோடு தென்னாட்டில் வழங்கி வரும் சங்கீத புத்தகங்கள் என்று சொல்லப்படும் சில சமஸ்கிருத நூல்களிலும் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வந்த சில அம்சங்களையே சொல்லியிருக்கிறதென்று நாம் அறிய வேண்டும். வேங்கடமகி எழுதிய சதுர் தண்டி பிரகாசிகையும், சிங்கராச்சாரியார் எழுதிய சங்கீத புத்தகங்களும், மகா வைத்தியநாத ஐயர் எழுதிய ராகமாலிகையும் மற்றும் சில புத்தகங்களும் தென்னிந்திய சங்கீதத்தைப் பற்றியே சொல்லுகின்றனவென்று இதன் பின் தெளிவாகக் காணலாம். தென்னிந்தியாவில் வழங்கி வந்த இராகங்களையும் 72 மேளக் கர்த்தாவான தாய் ராகங்களையும் பற்றிச் சொல்லுகிற எந்த நூல்களும் சாரங்க தேவர் எழுதிய சங்கீத ரத்னாகரத்தின் கருத்துக்கு ஒத்தவை யல்லவென்பது தெளிவாகத் தெரியும். அவைகள் சமஸ்கிருதம் தெலுங்கு முதலிய பாஷைகளில் எழுதப்பட்டிருக்கின்றனவென்று நாம் மலைக்கக் கூடாது. வட நாட்டில் வழங்கி வரும் கானத்திற்கும் சாரங்க தேவர் எழுதிய சங்கீத ரத்னாகரத்துக்கும் எப்படி ஒற்றுமையில்லையோ அப்படியே தென்னாட்டில் சமஸ்கிருதம் தெலுங்கு தமிழ் முதலிய பாஷைகளில் எழுதிய சங்கீத சாஸ்திரத்துக்கும் சங்கீத ரத்னாகரத்துக்கும் முற்றிலும் ஒற்றுமை இல்லையென்று அறிவோம். ஆனால், தென்னாட்டிலுள்ள சில சமஸ்கிருத நூல்களுக்கும் தென்னாட்டின் சங்கீதத்திற்கும் ஒற்றுமையிருக்கிறதென்று விசாரிக்கும் விவேகிகள் அறிவார்கள். ஊர்ந்து திரிகிற குழந்தை நடக்கப் பிரயத்தனப்படுவதும், பூமியில் நடக்கிற ஒருவன் ஆகாயத்தில் பறக்க விரும்புவதும், பெற்று வளர்த்த தாயை விட்டு மனையாளிடத்தில் அதிகப் பிரியங்காட்டுவதும் இயற்கை என்று அறிவோம். அரைகுறையாய்த் தான் கற்ற அன்னிய பாஷையில் தனது தாயின் குணங்களை வர்ணிப்பது போலத் தென்னாட்டின் சங்கீத ரகசியங்களை அன்னிய பாஷையிலெழுதி வைத்ததேயொழிய வேறில்லை.

சங்கீதத்தை மிகுந்த மேன்மையுடையதென்றும் அதிக வரும்படி தரக்கூடிய தொழிலென்றும் மதித்தவர், அதைப் புதைபொருளாக வைத்து மற்றவர் யாராவது இதைத் தெரிந்து கொள்வார்களோவென்று புதையல் காத்த பூதம் போல் காத்து ஒளித்து வைத்தார்கள். அதுவுமன்றி "உதவி செய்வோர் தங்களைப் போல் நூல் உண்டாக்கி ஒளித்தாரே உட்கருவை தோஷம் தோஷம்" என்றபடி சந்தேகப்படும் நிலையில் நூல் செய்து வைத்தார்கள்.

சுமார் 60, 70 வருஷங்களுக்கு முன் திருவையாற்றிலிருந்த தியாகராஜையர் அவர்கள் செய்த மிக அருமையும் பெருமையுமுள்ள ஆயிரமாயிரமான கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டவர்கள் பிறருக்குச் சொல்லிக் கொடுக்க மனமில்லாமலும் ஸ்வரப்படுத்த தெரிந்தவர்களிற் சிலர் அவைகளை ஸ்வரப்படுத்தி எழுதி வைக்காமலும் போனதினால் அநேக ஆயிரம் கீர்த்தனைகள் நெருப்பில் தீய்ந்து போயின. மீதியாயிருப்பதையாவது ஸ்வரப்படுத்தி எழுதி வைக்க வேண்டுமென்று சொன்னால், அவ்வாறு செய்தால் எங்கே அகப்பட்டுக் கொள்வோமோவென்று விலகிக் கொள்ளுகிறார்கள். இதைக் கொண்டு பூர்வ நூல்களில் மிகுதியானவை சொல்லிக் கொடாமல் ரகசியமாய் வைத்திருந்தமையினால் ஒழிந்து போயினவென்று எண்ண இடமுண்டாகிறது.

இற்றைக்கு 8,000 வருஷங்களுக்கு முன் முதல் ஊழியில் 4,000 வருஷங்களாக இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் பேணி வளர்த்து வந்த முதல் சங்கமும் அதிலிருந்த அரசர்களும் புலவர்களும் இசை நூல்களும் கடலால் அழிந்து போன பின் படிப்படியாய்க் குறைந்து மீதியாயிருந்த சில நூல்களும் பௌத்தர்களாலும், சமணர்களாலும் அழிந்து