பக்கம் எண் :

526
தென்னிந்தியாவில் வழங்கி வரும் இசைத் தமிழ் சுருதிகள். முகவுரை.

போயினவென்று இதன் முன் பார்த்திருக்கிறோம். அவற்றில் எஞ்சிய நூல்களும் ரகசியம் சொல்வாரின்றி அனுபவத்துக்கு வராமல் ராம பாணங்களால் அழிக்கப்பட்ட ராவணன் படையைப் போல ராமபாணம் என்னும் சிறு பூச்சியினால் அரிக்கப்பட்டு அழிந்து போயின. அனுபவமுள்ளவர்கள் தங்கள் அனுபவத்திலுள்ளவற்றில் அங்கங்கே குறித்து வைத்த மிகவும் சொற்பமான குறிப்புகள் மாத்திரம் சங்கீத பரம்பரைக்கு உதவியாய் மறைவாய் ஒளிந்து நிற்கின்றனவென்று சொல்ல வேண்டியதாயிருக்கிறது.

தென்னிந்திய சங்கீதத்தை ஆதியோடந்தமாய்க் கண்டு கொள்வதற்கு ஏதுவில்லாத நிலையில் நாமிருக்கிறோம் என்பதை மிகவும் விசனத்தோடு சொல்ல வேண்டியதாயிருக்கிறது. இருந்தாலும் மிகவும் பூர்வமாய் எண்ணப்படும் அதாவது இற்றைக்கு 1800 வருஷங்களுக்கு முன் தமிழ் நாடாகிய சேர நாட்டை ஆண்டு கொண்டிருந்த செங்குட்டுவன் தம்பி இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் சில வரிகளாலும், அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையினாலும் அரும்பதவுரை ஆசிரியராகிய கவிச் சக்கிரவர்த்தி ஜெயங் கொண்டான் என்பவராலும் சில அம்சங்கள் வெளியாகின்றன. மாதவி என்னும் நடன கன்னிகையின் பரத்தைப் பற்றியும் பாடலைப் பற்றியும் யாழின் திறமையைப் பற்றியும் கதாநாயகனாகிய கோவலனது யாழ்த் திறத்தைப் பற்றியும் அங்கங்கே சில வரிகள் சொல்லப்படுகின்றன.

இவைகளை ஒருங்கே சீர்தூக்கிப் பார்ப்போமானால், அக்காலத்தில் சங்கீதம் மிகவும் உன்னதமான நிலையிலிருந்ததென்றும் அதற்கும் அநேக ஆயிர வருஷங்களுக்கு முன் இதிலும் மேலானதாயிருந்திருக்க வேண்டுமென்றும் நினைக்க இடமிருக்கிறது. தென் மதுரையில் சங்கமிருந்த காலத்து இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் மிகவும் சிறப்புற்றோங்கியிருந்ததென்பதும் அவைகளில் அநேகம் தற்காலத்தில் வழக்கத்தில் இல்லையென்பதும் வழக்கத்தில் இல்லாமைக்கு கடலால் அழிக்கப்பட்டதே காரணமென்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். அப்படியிருந்தாலும், நூலாசிரியரின் சில வசனங்களாலும் உரையாசிரியரின் சில வசனங்களாலும் அரும்பதவுரையாசிரியர் வசனங்களாலும் பூர்வ நூல்களின் சில அபிப்பிராயங்களும் நூல்களின் பெயர்களும் வாத்தியங்களும் வாத்தியங்களின் விபரங்களும் இராகங்களின் தொகைகளும் மிகவும் சுருக்கமாய்த் தெரிகின்றன.

முதல் ஊழியிலிருந்த சங்கப் புலவர்களும் ராஜாக்களும் தங்கள் பாஷையை முதற்பாகமாகவும் சங்கீதத்தை இரண்டாம் பாகமாகவும் நாடகத்தை மூன்றாம் பாகமாகவும் அமைத்து, இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்று வெவ்வேறு பெயர் கொடுத்து அவற்றிற்குச் சிறந்த இலக்கணமும் செய்து விருத்திக்குக் கொண்டு வந்திருந்ததே தமிழ்நாட்டில் சங்கீதம் மிகவும் உன்னதமான நிலையிலிருந்திருக்கிறதென்பதை விளக்குகிறது. இயற்றமிழின் ஒரு பாகமாகிய யாப்பிலக்கணத்தை நாம் கவனிப்போமானால் யாப்பின் உறுப்புகளாகிய எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, கூன், எதுகை, மோனை முதலிய அம்சங்களும் பண்ணோடு பாடப்படுவதற்கு அனுகூலமாகவே செய்யப்பட்டனவென்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. இனிய ஓசைகள் பிறழாமலும் தாள அமைப்புக் கெடாமலும் பொருளை உள்ளது உள்ளது போல் தெளிவாகக் காட்ட ஏதுவாயிருக்கும்படி இராகமும் தாளமும் அமைத்து வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய பாவும் தாழிசை, துறை, விருத்தமென்னும் பாவினங்களும் செய்யப்பட்டிருக்கின்றனவென்று நாம் அறிய வேண்டும்.

இப்படி யாப்பினாலும் இசையினாலும் அலங்கரிக்கப்பட்ட நூல்கள், மனனம் பண்ணுவதற்கும், பிரசங்கிப்பதற்கும் பிற சொற்கள் வந்து விரவாதிருப்பதற்கும் முக்கிய ஏதுவாயிருக்கின்றனவென்று நாம் அறியலாம். இயற்றமிழின் முக்கிய பாகமாகிய பாக்கள் இசைத் தமிழாகிய