பக்கம் எண் :

527
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

சங்கீதம் கலந்த பின் பண்கள் என்று அழைக்கப்பட்டன. பண் என்பது ராகம், சுரம் என்பதற்குப் பொதுப் பெயராயிருந்தாலும் ராகத்தோடு பாடப்படும் பாக்களுக்குப் பெயராகச் சொல்லப்படுகிறது. பண்களும் வசனங்களும் அவற்றிற்குரிய அபிநயத்தோடு கலந்து வழங்குங் காலத்து நாடகத் தமிழ் என்று பெயர் பெற்றன. ஒரு பாஷைக்குப் பேகம் வழக்கமும் பிழையற எழுதும் வழக்கமும் உண்டான பின்பே பாக்கள் செய்யப்படுமென்று நாம் அறிவோம்.

பாக்கள் உண்டான பின் அவைகளை இன்னிசையோடு சொல்லும் இசைத் தமிழும் அதாவது சங்கீத வரன்முறையும் உண்டாயிற்று. வசனங்களும், பாக்களும், பண்களும் உண்டான பின் அவைகளை நன்கு விளக்கும் அபிநயங்களும் ஏற்பட்டன. அபிநயத்திற்கு ஆடலும் நடித்து காட்டலும் ஏற்பட்டதினால் அது நாடகம் என்று பெயர் பெற்றது. ஒரு பாஷையின் முக்கியமான இம்மூன்று அம்சங்களும் ஒருவனுக்குத் தூல சூட்சம காரண சரீரம் போல் இன்றியமையாதனவாயிருக்கின்றன. இதை உணர்ந்தே நம் முன்னோர்கள் இயல் இசை நாடகமென்னும் மூன்றையும் ஒன்றாக்கி முத்தமிழ் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படி மூன்றையும் ஒன்று சேர்த்து இலக்கணமும் சொல்லியிருக்கிறார்கள். இவைகளுக்கு அகத்தியம் முதல் நூலாகச் சொல்லப்படுகிறது. அது தவிர மூன்றையும் ஒவ்வொன்றாய் எடுத்துக் கொண்டு இலக்கணம் சொன்னவர்களுமுண்டு. அவைகள் மிகுந்த விஸ்தாரமும் சிறப்புமுடையனவாயிருந்தனவென்று தோன்றுகின்றன. அவைகள் கடலால் கொள்ளப்பட்ட பின் பெரும் நூல்களின் சாரத்தை ஒருவாறு சுருக்கி இலக்கணங்கள் சொல்லப்பட்டதாகத் தெரிகிறது. இப்படிப் பாஷையையும் பாக்களையும், பண்களையும், நடனத்தையும் ஒன்று சேர்த்து வேறு எந்த பாஷையிலாவது இலக்கணம் சொல்லப்படிருக்கிறதாகத் தெரியவில்லை. இதைக் கொண்டு இசைத் தமிழ் அதாவது சங்கீதத்தைக் குறித்துச் சொல்லும் நூலும் நாடகத் தமிழ் அதாவது பரதத்தைப் பற்றிச் சொல்லும் நூலும் வேறு எந்த பாஷையிலும் முதல் முதல் உண்டாயிருக்க மாட்டாதென்று தெளிவாய்த் தெரிகிறது. இசைத் தமிழென்றும் நாடகத் தமிழென்றும் வழங்கி வரும் இரண்டு பெரும் கலைகளும் தமிழ்ப் பாஷையில் ஆதி தொடுத்து சிறப்புடையதாய் வழங்கி வந்தனவென்று நாம் அறிய வேண்டும். ஆகையினால் இயல், இசை, நாடகம் என்பது முத்தமிழ் என்று பரம்பரையாய் வழங்கி வருகிறது. இது இன்று நேற்றல்ல. அகஸ்தியர் அகத்தியம் எழுதிய கால முதற்கொண்டும் அதற்கு முன்னேயும் வழங்கி வருகிறதாகத் தெரிகிறது. இதைப் போல எந்த பாஷையும் இசை, நாடகமென்ற வார்த்தைகளோடு சேர்ந்து வழங்குகிறதை நாம் காணமாட்டோம். கேட்டிருப்பதுமில்லை.]

தற்கால நாகரீகத்திற்கேற்ற புகைவண்டி, தந்தி, ஆகாயக் கப்பல், நடையுடை பாவனை, உணவு, பானம், கடன் சீட்டுகள், பத்திரங்கள் பதிவு சாலைகள், விவகாரஸ்தலங்கள், விவகாரச் சட்டங்கள், காலாவதி, பரப்பர், முதலிய திருத்தங்கள் அக்காலத்தில் தென்னிந்தியாவில் இல்லாதிருந்தாலும் நம் முன்னோர்கள் பாஷையில் மிகுந்த பாண்டித்தியமுடையவர்களாய்ப் பண்களினால் பகவானை ஆராதித்து அவன் சந்நிதியில் ஆடிப் பாடிக் கொண்டாடினார்களென்றும் அரசர்கள் இரக்கம், நீதி, உண்மை, பொறுமை, தாழ்மை, அன்பு முதலிய உத்தம குணங்களோடு அரசாட்சி செய்து கொண்டிருந்தார்களென்றும் தோன்றுகிறது.

தமக்கு எத்துன்பம் வந்தாலும் தாம் சொன்ன ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டுச் சத்திய கீர்த்திகளாய் விளங்கினார்கள். நாலு விரற்கடை ஓலை நறுக்கில் நாலு வரிகளில் எழுதிய கடன் பத்திரங்களுக்கு ஏழு தலை முறையிலும் கட்டுப்படும் நாணயமுடையவர்களாயிருந்தார்கள். விறகு எரிந்த பின் இல்லாமல் தணிந்து போகும் நெருப்பை சாட்சியாக வைத்துக் கொண்டு பெரும் பெரும் காரியங்களைச் செய்தார்கள். தரையில் சுவறிப்போகும் தண்ணீரைத் தாரை வார்த்து தான சாசனங்கள் யாவும் பதிவு (Register) செய்யப்பட்டு வந்தன.