பக்கம் எண் :

529
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

கிரகமாற்றும் முறையையும் கூடியவரை நன்றாகப் பரிசோதித்தேன். என் சொந்தமாக ஒன்றும் சொல்லாமல் அங்கே சொல்லப்படும் வார்த்தைகளின் கருத்தை யாவரும் அறிந்து கொள்வதற்குச் சுலபமான முறைகளைச் சேர்த்திருக்கிறேன். இதில் சில பாகங்களைச் சொல்லாமல் விட்டிருக்கிறதாக அறிஞர்கள் கவனத்திற்கு வரக்கூடும். அப்படி விடப்பட்டவை இன்னின்னதென்று கிருபை செய்து தெரிவிக்கும்படி கோருகிறேன். இரண்டாம் பதிப்பில் சேர்த்துக் கொள்வேன்.

சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் கருத்துக்கும் அரும்பதவுரையாசிரியராகிய கவிச்சக்கரவர்த்தி ஜெயங்கொண்டார் கருத்திற்கும் சில சில விஷயங்களில் சொற்ப வித்தியாசமிருக்கிறது. ஜெயங்கொண்டார் அடியார்க்கு நல்லார்க்கு 100 வருஷங்களுக்கு முன்னிருந்தவராகத் தெரிகிறது. இவ்வவிப்பிராயத்திற்கேற்கப் பூர்வ காலத்தில் வழங்கி வந்த சங்கீத உண்மைகளை அடியார்க்கு நல்லாரைப் பார்க்கிலும் ஜெயங்கொண்டார் அதி நுட்பமாகச் சொல்லுகிறார். அவர் அபிப்பிராயத்தையே அடியார்க்கு நல்லார் ஆதாரமாகக் கொண்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவ்விருவருடைய உரையினாலும் இளங்கோவடிகள் செய்யுளாலும் அறியக் கூடியவை எவைகளோ, அவைகளை அப்படியே அர்த்தம் செய்து விளக்கிக் காட்டியிருக்கிறேன். அதன் பின் அதிலுள்ள மறைப்பை நீக்கித் தெளிவாய் அறிந்துகொள்வதற்கு ஏதுவாகும்படி எவ்வளவு எழுதக்கூடுமோ, அவ்வளவும் எழுதியிருக்கிறேன். நூலின்படி அர்த்தம் ஒன்றும் மறைப்பு நீக்கி அர்த்தம் ஒன்றும் ஆக இரண்டு செய்வானேன், இரண்டினையும் சேர்த்து ஒன்றாகச் செய்யக் கூடாதாவென்று கேட்கலாம். அப்படிச் செய்தால் சரியான கருத்தை அறிவது இன்னும் கஷ்டமாயிருக்குமென்றே, பிரித்து எழுத நேரிட்டது.

சுமார் 1800, வருஷங்களுக்கு முன்னுள்ள இந்நூலின் அபிப்பிராயமே நம் கர்நாடக சங்கீதத்தில் அனுசரிக்கப்பட்டு வழங்கி வந்ததென்று நாம் காணும் போது மிகுந்த சந்தோஷமடைவோம். இம் முறையே தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன் ஊழியிலும் வழங்கி வந்திருந்ததென்று தெளிவாய்த் தெரிகிறது. ஒரு ஸ்தாயியில் பன்னிரு சுரங்களும் அவற்றின் உட்பிரிவாகிய கால் சுரங்களும் இந்தியாவின் கீழ்ப்புறமுள்ள மலயா, ஸயாம், அனாம், சீனா, ஜப்பான் முதலிய தேசங்களுக்கும், மேற்புறம் பாரசீகம், அரேபியா, எகிப்து, ஆசியாத் துருக்கி, கிரீஸ் முதலிய தேசங்களுக்கும் கொண்டு போகப்பட்டன என்று தெளிவாகத் தெரிகிறது. அப்படி அவர்கள் கொண்டு போயிருந்தாலும், வட்டப் பாலையின் ரகசியம் தெரியாமலும், ச-ப, ச-ம முறையாய் சுரங்கள் சேர்க்கும் சுரஞானமில்லாமலும் போனால் வழுவாமல் என்ன செய்வார்கள்? நாள் ஆக ஆக இந்தியாவில் கர்நாடக சங்கீதத்தின் முறை தெரியாதிருந்தாலும் அம் முறையின்படி செய்து வந்த கானம் பரம்பரையாய்ப் பாடப்பட்டுப் பல தேசிகக் கலப்புடன் அங்கங்கே வழங்கி வருகிறது.

கர்நாடக சுத்தமாய் அன்னிய சுரங்கள் கலவாமல் பாடப்படுகிற முறையையும் பல சுரங்கள் கலந்து பாடும் முறையையும் நாம் பார்ப்பதே இதற்கு சாட்சி. அன்னிய சுரங்கள் கலவாமல் அதனதன் ஆரோகண அவரோகணத்தோடு தனித்துப் பாட, ராகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறாகத் தோன்றுவதே கர்நாடக சங்கீதத்தின் பெருமை. கர்நாடக சங்கீதத்தின் தேசிகக் கலப்பை நீக்கி நன்னிலைக்குக் கொண்டு வருவதற்கு நம் பூர்வீக முறை உதவியாயிருக்குமென்று இங்குச் சற்று விரிவாகச் சொல்ல நேரிட்டது.

1. கர்நாடக ராகங்கள் கலப்பின்றிச் சுத்தமாய் சுரஞானமுள்ள எவரும் பாடுவதற்கும்.

2. பாடிக் கொண்டிருக்கும் ராகங்களின் பிழைகளைத் திருத்திக் கொள்வதற்கும்

3. புதிதான ஒரு ஆரோகண அவரோகணத்தில் ஒரு ராகம் உண்டாக்குவதற்கும்,
    உண்டாக்கிய ராகத்தில் கீதம், வர்ணம், கீர்த்தனங்கள் பல செய்வதற்கும்