பக்கம் எண் :

534
பூர்வ தமிழ் மக்கள் பயின்று வந்த இசைத் தமிழில் சுரங்கள் நிற்கும் அளவு.

சிலப்பதிகாரம் ஆய்ச்சியர்குரவை பக்கம் 409.

"இவ் வேழு துளைகளினும் இசை பிறக்குமாறு : ச ரி க ம ப த நி என்னும் எழெழுத்தினும் பிறக்கும், என்னை?

"ச ரி க ம ப த நி யென் றேழெழுத்தாற் றானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத்-தெரிவரிய
வேழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்குஞ்
சூழ்முதலாஞ் சுத்தத் துளை"

சிலப்பதிகாரம் ஊர்காண்காதை பக்கம் 341.

"ச ரி க ம ப த நி யென்னு மெழுவகைப் பட்ட எழுத்தடியாகப் பிறக்கும் குரன் முதலாகிய ஏழும்."

மேல் வரிகளில் ஏழு சுரங்களும் குழலினிடத்து உண்டாகும் விதத்தைச் சொல்லுகிறார். ஏழு சுரங்களும் ஏழு எழுத்துக்கள் அடியாய்ப் பிறக்கின்றன. இவ்வேழு சுரங்களும் இசை உண்டாவதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. இவ் ஏழு சுரங்களும் அ, ரி, க, ம, ப, த, நி, அ எனப் பூர்வ காலத்தில் அகத்தியர் இசை நூலில் வழங்கி வந்ததாகக் கேள்விப்படுகிறோம். இனிமேல் இவ்வேழு சுரங்களும் சொல்லப்படும் முறையும் அளவும் சொல்லுகிறார்.

சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை பக்கம் 90.
59-63

"ஏற்றிய குரலிளி யென்றிரு நரம்பி
னொப்பக் கேட்கு முணர்வின னாகிப்
பண்ணமை முழவின் கண்ணெறி யறிந்து
தண்ணுமை முதல்வன் றன்னொடும் பொருந்தி
வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்தாங்கு"

சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை பக்கம் 91.
59-60

"ஏற்றிய குரலிளி யென்றிரு நரம்பி
னொப்பக் கேட்கு முணர்வின னாகி"

யென்பது பதினாற் கோவையினிடத்துக் குரனரம்பு இரட்டிக்க வரும் பாலையையும், இளி நரம்பு இரட்டிக்க வரும் மேற்செம்பாலையையும் இவை போல அல்லாத பாலைகளையும் இசை நூல் வழக்காலே இணை நரம்பு தொடுத்துப் பாடும் அறிவினையுமுடையனாயென்க."

63.

"வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்தாங் கென்பது"

பட்டடை-நரம்புகளின் இளிக்குப் பெயர்; என்னை? எல்லாப் பண்ணிற்கும் அடிமணையாதலின், வண்ணம்-நிறம். இதனை யாழ் மேல்வைத் தென்க.

ஆங்கு-அசை. இளிக் கிரமத்தாலே பண்களை யாழ்மேல் வைத்தெனக் கூட்டினு மமையும்.

"குரல்வா யிளிவாய்க் கேட்டனள்"

குரல்முதலாக எடுத்து இளிகுரலாக வாசித்தாளென்க.

மேற்கண்ட வரிகளில் ச-ப என்ற இரண்டு சுரங்களின் ஓசை பொருந்துமாபோல் ஒவ்வொரு சுரமும் ச-ப முறைபோல் அதாவது குரல்-இளி முறை போல் ஒன்றோடொன்று இணையும்படி அமைக்கப்பட வேண்டுமென்று சொல்லுகிறார். இளி அல்லது பஞ்சமம் குரலாகிய வோடு நன்றாய்ப் பொருந்துவதை நம் அனுபவத்தில் காண்போம். இப்பஞ்சமம்