பக்கம் எண் :

535
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

ஆரம்ப சுரமாகிய வோடு எவ்வளவுக்கெவ்வளவு நுட்பமாய்ப் பொருந்துகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு இன்பமான ஓசை பிறக்கும். இவ்விதமான ஓசை ஒரு தந்தியின் மூன்றில் இரண்டு பாகத்தில் உண்டாகிறதென்று இங்கே சொல்லவில்லை. இப்பெரிய கணக்கு அவர்களுக்குத் தெரிந்திராதென்று நாம் எண்ண இடமில்லை. சங்கீதத்தில் எவ்வளவோ நுட்பமான விஷயங்களைக் கண்டறிந்த நம் முன்னோர் ஸ்தாயியின் கிரமத்தைச் சொல்லி இணை நரம்பு தொடுத்துப் பாடும் அறிவினையுடையவர்களா யிருந்திருக்கிறார்கள். அது போலவே, குரல் இளி என்ற ச-ப சுரங்கள் அணுப்பிரமாணமும் வேறுபடாமல் ஒன்றாய்ச் சேரும் நுட்பத்தைக் கவனிக்கக் கூடிய சுரஞானமுடையவனாகி என்கிறார்.

காதினால் வெகு நுட்பமாகக் கேட்டு அறியக்கூடிய ஒரு ஓசையைக் கம்பிகளின் மூலமாகவும் மட்டப் பலகையின் அளவு மூலமாகவும் காணச் சொல்வது கூடியதல்ல. நம் காதின் உள் கருவியாகிய ஆனகமும் அதிலிருந்து நாதத்தைக் கிரகிக்கும் நரம்பும் மிக மெல்லியவை. இம் மென்மைக்குத் தகுதியாகக் காதினால் கேட்டு, அச் சத்தத்திற்கேற்ற பஞ்சமத்தைச் சேர்த்துக் கொண்டு, அப்பஞ்சமத்தைக் குரலாக வைத்து அதற்குப் பஞ்சமம் கண்டு பிடித்துக் கொண்டு போகப் பன்னிரண்டு சுரங்களும் கிடைக்கின்றன. இப்பன்னிரண்டு சுரங்களும் ஒன்றற்கொன்று தீவிரமாகி ஷட்ஜம பஞ்சமத்தின் இணைபோல் பொருந்தி வரக்கூடியவைகளாய் அமைகின்றன. ஸ்திரி புருஷர்களாய் அமைந்த குடும்பம் போல ஒவ்வொரு சுரமும் ஒன்றற்கொன்று பொருத்தமுடையதாகவே அமைகிறது. உலகத்தில் மனுடத்தோற்றம் உண்டாவதற்கு மாதுரு ஸ்தானமே முக்கியமாக இருப்பது போலவும் காணப்படும் சரீரம் பெற்ற யாவரும் அதினின்றே உற்பத்தியாவது போலவும் பஞ்சமமே சுரங்கள் யாவற்றிற்கும் மாதுரு ஸ்தானமாயிருக்கிறது. ஜீவர்கள் உற்பத்தியாவதற்குத் தந்தையே காரணமாயிருந்தாலும் அது எல்லாம் அடங்கிய சூட்சம அம்சமாக மாத்திரமிருக்கிறது. ஷட்ஜமம் என்ற ஆதி ஓசை ஸப்த சுரங்களும் சேரக்கூடிய ஓசையாயிருந்தாலும் இளிக்கிரமத்தினாலே அவைகள் நாமரூபம் பெற்றதாக நாம் அறிய வேண்டும். புத்திரனென்றும் மித்திரனென்றும், சத்துருவென்றும் இளிக் கிரமத்தால் ஏற்பட்டதேயொழிய சர்வ சாட்சியாய் நின்ற பிரமத்தைப் போலொத்த ஷட்ஜமத்துக்கில்லை. ஆகையினால் ஷட்ஜமத்துக்குப் பஞ்சமம் எப்படியோ அம்முறைப்படியே பஞ்சமத்திற்கு ஏழு சுரங்களும் பொருந்தியிருக்க வேண்டும்.

ஒன்று முதல் 32 ஸ்தானங்கள் வரையுள்ள பெரிய லக்கங்களையும் ஏற்படுத்தி ஒன்றின்கீழ் தேர்த்துகள் வரையுள்ள சிறிய ஸ்தானங்களுக்கும் பெயர் சொல்லி வழங்கும் நுட்பமான கணித ஆராய்ச்சியுடையோர் இதற்கு கணிதம் சொல்லாமல் விட்டதைப் பற்றி நாம் சற்று யோசிக்க வேண்டும். இக்கணிதத்தினால் இளிக்கிரமம் (ச-ப கிரமம்) அணுவளவு பேதப்பட்டால் மற்ற சுரங்கள் ஒற்றுமைப்படாவென்று அவர்கள் நன்றாய் அறிவார்கள். படிக்கல், தராசு, மரக்கால் முதலியவைகளில் ஒரு தினை அளவு தவறாமலிருக்க வேண்டுமென்று முத்திரையிடுவோர் போல் ஸப்த சுரங்களும் ச-ப, ச-ம என்ற ஓசைப் பொருத்தமாக அமைந்திருக்க வேண்டுமென்று முத்திரித்தார்கள்.

இம்முத்திரையும் அளந்தல்ல, நிறுத்தல்ல காதினால் நுட்பமாய்க் கேட்டேயறிய வேண்டுமென்று அறிவதற்கேற்ற சுரஞானமுடையவனாயிருக்க வேண்டுமென்றும் சொன்னார்கள். ச-ப என்ற சுரங்களின் ஒற்றுமை கண்ட பின் அவ்வொன்றே எல்லாச் சுரங்களையும் நிதானிக்கக் கூடியதாயிருப்பதினால் மிகுந்த திடமான சுரஞானமுடையவனாயிருக்க வேண்டுமென்பது தெளிவாய்த் தெரிகிறது.