பக்கம் எண் :

536
தென்னிந்தியாவில் வழங்கி வரும் இசைத் தமிழ் சுருதிகள். முகவுரை.

இதைப் பல இடங்களிலும் பல சமயங்களிலும் உபயோகித்திருக்கிறதாக இனிப் பார்ப்போம். யாழில், இளிக்கிரமப்படியே சுரங்கள் யாவும் வைக்கப்பட வேண்டுமென்றும் வைக்கப் பட்டிருந்தனவென்றும், ஷட்ஜம-பஞ்சம முறைப்படி சுருதி சேர்த்து வாசிக்கப்பட்டதென்றும், அங்கங்கே பார்ப்போம். இளிக் கிரமத்தால் ஏற்பட்ட சுரங்களுள், ஆரம்ப சுரமாகிய குரலிலிருந்து, இளிவரைக்குமுள்ள சுரங்களை மந்தர ஸ்தாயாக்கிக் கொண்டு, அதன் பின் இளியென்ற சுரத்திலிருந்து குரல் ஆரம்பித்து, அதாவது பஞ்சமத்தை ஷட்ஜமமாக வைத்துக் கொண்டு, வரசித்தார்களென்று சொல்லப்படுகிறது. இதில், இளியில் தோன்றிய குரல் மத்தியஸ்தாயியின் ஆரம்பமாகவும், ஆரம்ப சுரமாகிய குரல் மந்தரஸ்தாயாகவும் ஆகிறது. இதை நாம் கவனித்தால், ச-ப என்ற ஆரோகணப் பொருத்தம் போல், ச-ம என்ற சுரமும் ச-ப முறைப்படி வந்திருக்கிறதென்று தெரிந்து கொள்வோம். இப்படியே, ச, ரி, க, ம என்பது போல் ப, த, நி, ச, ரி என்பதையும், அவரோகணத்தில், ரி, ச, நி, த, ப, போல் ச, நி, த, ப, ம என்பதையும், ச-ப முறையாய் அமைத்துக் கொண்டு கானம் பண்ணினார்களென்றும் தெளிவாய்த் தெரிகிறது. இவ்வமைப்பைப் பின்வரும் சில வசனங்களினாலும், அதை விளக்கிக் காட்டும் சக்கரங்களினாலும் தெளிவாய் அறிந்து கொள்ளலாம்.

2. தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வருகிற சுருதிகளைப் பற்றிப் பண்டைத் தமிழ் நூல்களில் சொல்லப்படும் அபிப்பிராயம்.

யாழ் வாசிப்பதிலும் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதிலும் கைதேர்ந்த ஒரு யாழாசிரியன், முதல் முதல் இன்னின்ன விஷயங்களில் கை தேர்ந்தவனாயிருக்க வேண்டுமென்று இளங்கோவடிகள் சொல்லுகிறார். கீழே கண்ட அகவல், மிகச் சுருக்கமாக இருந்தாலும் மிகப் பூர்வமாகத் தமிழ் மக்கள் பழகியிருந்த இசைத் தமிழில் (சங்கீதத்தில்) வழங்கி வந்த சுரங்களைக் கண்டுபிடிக்கும் முறையை மிகச் சுருக்கமாக இதிற் காண்போம். பூர்வ தமிழ் நூல்களில் வழங்கி வந்த செய்யுள்களும் வசன நடைகளும் மிகக் கருகலாயிருப்பினும் அரிய விஷயங்களை அடக்கிக் கொண்டிருப்பதினால் உரையாசிரியர் சொல்லும் வசனங்களை உள்ளது உள்ளபடியே இங்கே எழுத வேண்டியதவசியமாயிற்று.

சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை பக்கம் 92-93.

யாழாசிரியன் அமைதி.

70-94

"ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியி
னோரேழ் பாலை நிறுத்தல் வேண்டி
வன்மையிற் கிடந்த தார பாகமு
மென்மையிற் கிடந்த குரலின் பாகமு
மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக்
கைக்கிளை யொழிந்த பாகமும் பொற்புடைத்
தளராத் தாரம் விளரிக் கித்துக்
கிளைவழிப் பட்டன ளாங்கே கிளையுந்
தன்கிளை யழிவுகண் டவள்வயிற் சேர
வேனை மகளிருங் கிளைவழிச் சேர
மேல துழையிளி கீழது கைக்கிளை
வம்புறு மரபிற் செம்பாலை யாய
திறுதி யாதி யாக வாங்கவை