பெறுமுறை வந்த பெற்றியி னீங்காது படுமலை செவ்வழி யரும்பா லையெனக் குரல்குர லாகத் தற்கிழமை திரிந்தபின் முன்னதன் வகையே முறைமையிற் றிரிந்தாங் கிளிமுத லாகிய வெதிர்படு கிழமையுங் கோடி விளரி மேற்செம் பாலையென நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையி னிணைநரம் புடையன வணைவுறக் கொண்டாங் கியாழ்மேற் பாலை யிடமுறை மெலியக் குழன்மேற் கோடி வலமுறை மெலிய வலிவு மெலிவுஞ் சமனு மெல்லாம் பொலியக் கோத்த புலமை யோனுடன்," மேற்கண்ட அடிகளை நாம் கவனிக்கையில், ஆயப்பாலையின் பதினாலு கோவைகளையும் அவைகள் பிறக்கும் முறையையும், அப்பதினாலு கோவைகளின் பெயர்களையும், அவற்றின் இணை நரம்புகளையும் (பொருத்த சுரங்களையும்), அவைகள் யாழ் இடத்தும் குழலிடத்தும் வலம் இடமாக வரும் முறையையும் சொல்லுகிறார் என்பது விளங்குகிறது. இவற்றிற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரை வருமாறு. 3. ஆயப்பாலையில் 14 பாலை பிறக்கும் விபரம். 70-71 "ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியி னோரேழ் பாலை நிறுத்தல் வேண்டி" என்பது. ஆயப்பாலையாய் நின்ற பதினாற்கோவை, கோலினிது செப்ப முடைத்தாய்ப் பெண்டிர்க்குரிய தானமுடைய பாடலியல் பொத்தமைந்த சிறப்புடைத்தாகலான், இதிலே செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை யெனப்பட்ட ஏழுபாலையினையும் இணை நரம்பு தொடுத்து நிரம்ப நிறுத்திக் காட்டல் காரணமாக வென்க. இதில் ஆயப்பாலை என்பது, (1) ஆயப்பாலை, (2) திரிகோணப்பாலை, (3) சதுரப்பாலை, (4) வட்டப்பாலை என்னும் நாலு பெரும்பாலைகளில் முதலாவதானது. தாரங்குரலாக (ச) முதல் ஆரம்பிப்பதொன்றும், உழை (ம) குரலாக முதல் ஆரம்பிப்பதொன்றுமாக இரு வகைப்படும். இவ்விரு வகைகளிலும், வகையொன்றுக்கு எவ்வேழு பாலையாக 14 பாலையுண்டாம். இவைகளில், ச-ப என்ற சுரங்களுக்கிருக்கும் ஒற்றுமை போலவே, முந்தின வரிசைக்கும் பிந்தின வரிசைக்குமிருக்கிறது. இவைகளின் விபரம் பின்வரும் அட்டவணையில் காணலாம். இப்பதினாலு மூர்ச்சனைகளில், முதல் ஏழுக்குச் செம்பாலை முதல் ஏழு பெயர்களும், இரண்டாவது ஏழுக்கு அரும்பாலை முதல் ஏழு பெயர்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முந்தினதற்குப் பிந்தினது ஒவ்வொன்றும் முறையே ச-ப போல இரட்டித்தது. அதனால் உழையில் (ம) தோன்றிய குரல் (ச) குரலானது செம்பாலை முதல் ஏழு பாலையாம். தாரத்தில் (நி) தோன்றிய உழை (ம) குரலானது (ச) கோடிப்பாலை முதல் ஏழாம்.
|